வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வாம் இண்டியா சார்பில் ஐசரி கே கணேஷ் ,அனீஸ் அர்ஜுன் தேவ் தயாரிப்பில் ஜீவா , ராஷி கண்ணா, அர்ஜுன் நடிப்பில் கவிஞரும் இயக்குனருமான பா விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம்.
திரைப்படக் கலை இயக்குனர் ஆவதற்காக ஒரு புது தயாரிப்பாளரின் படத்தில் முப்பது லட்ச ரூபாயை போடும் அகத்தியன் (ஜீவா) செட் வேலைகள் முடிந்த நிலையில் படம் நின்று போக பணமும் இழந்து பாதிக்கப்படுகிறார் . காதலியின் (ராஷி கண்ணா) ஐடியா படி அந்த அரங்கை அப்படியே பேய்களின் விளையாட்டு மூலம் மக்களை மகிழ்விக்கும் பேய்ப் பூங்காவாக மாற்றி லாபம் சம்பாதிக்க முயல்கிறார் . ஆனால் அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் அவரை அலைக்கழிக்கிறது .
தவிர தன் அம்மாவுக்கு (ரோகினி) இருக்கும் நோயைத் தீர்க்கத் தேவையான மருந்தை எண்பது ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த தமிழ் நாட்டு சித்த மருத்துவர் (அர்ஜுன்) ஒருவரை, அப்போது பாண்டிச்சேரியை ஆண்ட பிரஞ்சு கவர்னர் எட்வின் டூப்லெக்ஸ் (எட்வின் சொநேன்பிளிக்) மருந்துக்காகவும் தன் தங்கை ஜாக்குலின் பூவிழியை (மடில்டா)காதலித்த காரணத்துக்காகவும் கொன்ற கதை தெரிய வர ,
இப்போது அந்த மருந்து இருக்கிறதா , அகத்தியனால் தனது அம்மாவைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படம்.
தமிழரின் உயர்ந்த சித்த மருத்துவ முறை எப்படி மேற்கத்திய சக்திகளால் அழிக்கப்பட்டது என்பதை சொல்லும் சிறப்பான கதை. நல்ல கருத்தியல். அதற்காக விஜய்க்கு பாராட்டுகள் . தவிர , தமிழர் வாழ்வியல் முறை மற்றும் சித்த மருத்துவம் இவற்றின் பெருமை சொல்லும் அற்புதமான பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார் . மேக்கிங்கும் சிறப்பு
ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட் படமாக உயர்த்தி இருக்கிறது தீபக் குமார் பதியின் அற்புதமான ஒளிப்பதிவு . உலகத்தரம். விழிகளைக் கட்டிப் பிடித்துக் காதலித்துக் கானம் பாடும் ரம்மிய ஒளிப்பதிவு .
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அதற்கு பேருதவி புரிகிறது .
அற்புதமான கலை இயக்கம் . தயாரிப்புத் தரம் பிரம்மாணடம். இப்படி ஒரு புரடியூசர் கிடைப்பது வரம்.
திரைக்கதைதான் பெரிய குறை. இரண்டாம் பகுதி என்னவாக இருக்கும் என்பது முதல் பாதியிலேயே முழுசாக எல்லோருக்கும் புரிந்து விடும்படி இருக்கிறது திறந்து கிடக்கும் திரைக்கதை . அப்படிப்பட்ட சூழலில் அதை மீறி ஒன்று எழுத வேண்டும் . அதை எழுதாமல் விட்டு விட்டார் விஜய் .
எப்பேறுபட்ட கதை. ஆனால் கவிஞராக இருந்தும் பாடல்களில் அசத்திய விஜய் வசனத்தில் கோட்டை விட்டு இருக்கிறார் .
நடிக நடிகையரில் கொண்டாடவும் ஒன்றும் இல்லை. குறை சொல்லவும் ஒன்றும் இல்லை .
1940களில் நடக்கும் கதையில் பாரதிதாசனின் கவிதைகள் கலர் அட்டை போட்ட படத்தை வைத்து இருப்பது, இளையராஜாவின் பாட்டைப் பயன்படுத்துவது.. தவிர அம்மாவின் நோய் குறித்த விவரணைகளில் உள்ள தவறுகள் என்று சில சங்கடங்கள் .
தமிழ் மருத்துவத்தில் அகத்தியர் என்பதே சம்ஸ்கிருத ஆட்களால் கட்டப்பட்ட கட்டுக்கதைதானே . சித்த மருத்துவ வரலாற்றை அந்தப் பெயரோடு சம்மந்தப்பாடுத்துவதும் தெளிவின்மை.
அகத்தியா .. கண்ணுக்கு மட்டும் விருந்து .