அனந்தா@விமர்சனம்

INNER  VIEW  சார்பில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்க,  ஜெகபதி பாபு, ஒய் ஜி மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, மோகன் ராம், சுஹாசினி, அபிராமி வெங்கடாச்சலம்,, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், நடிப்பில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெருமை சொல்லும் வகையில்  சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்க, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கும்  படம் அனந்தா . 

வட இந்தியத் தொழிலதிபர் ஒருவர்(ஜெகபதி பாபு). கேரள பாலக்காட்டு தம்பதி (ஒய் ஜி மகேந்திரன் – ஸ்ரீரஞ்சனி), காசி வாழ் பெண் ஒருவர் (சுஹாசினி ) , சென்னை வாழ் பரதநாட்டியக் கலைஞர் ஒருவர் ( அபிராமி வெங்கடாசலம்), அயல்நாட்டில் வாழும் வெள்ளைக்காரர் ஒருவர்…   புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர்களான  இவர்களை ஒரு முக்கியப் பணியின் பொருட்டு புட்டபர்த்திக்கு அழைக்கிறார்  அங்கு பொறுப்பில் இருக்கும் ஒருவர் (நிழல்கள் ரவி)

அவர்கள் வாழ்வில் புட்டபர்த்தி சாய்பாபா  வழிகாட்டியாக , ஆற்றுப்படுத்ததுபவராக இருந்த சம்பவங்களை சொல்லச் சொல்கிறார் . அது கேமரா மற்றும் திரை  வழியே பார்வையாளனை அடைகிறது. 

பணம் பணம் என்று வாழ்ந்து பல்லாயிரம் கோடிகளை ஈட்டிய அந்த தொழிலதிபர்,  திட்டம் ஏதும் இல்லாமல் புட்டபர்த்திக்கு வருகிறார். சாய்பாபாவின் கண்களைப் பார்த்த உடன் அவருக்கு அமைதியும் நிம்மதியும் ஏற்படுகிறது. விமானப் பயணத்தில் விமானம் விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலையில் கூட சாய்பாபாவை  வணங்கியபடி பயமின்றி அமைதியாக இருக்கும் அமைதி  அவருக்கு சாத்தியமாகிறது. 

வங்கியில் கொள்ளையடிக்க வந்தவர்களால் சுடப்பட்ட  காவலாளியின் உயிரைக் காப்பாற்ற இரண்டு கோடி ரூபாயை கொள்ளையர்களுக்கே தரும் கருணை கொண்டவராக அவர் மாறுகிறார். 

பாலக்காட்டு தம்பதிகள் தீவிர சாய்பாபா பக்தர்கள். ஆனால் அந்த மனைவி,  அவர்களது முப்பதாவது கல்யாண நாள்  அன்று சாயிபாபாவை வழிபடும்போதே  மயங்கி விழுந்து மரணிக்கிறார் . கணவர் சாய்பாபாவிடம் இப்படி செய்து விட்டாயே என்று அழுகிறார் . அந்த மரணத்துக்கு காரணம் தெரிய வந்த போது, அந்த கணவர் சாய்பாபாவை   உணர்கிறார். 

சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் , தனது லட்சியமாகக்  கொண்ட ,  பிரபல பரதநாட்டியப்  போட்டியில் ஆடப் போகும் சூழ்நிலையில் அவருக்கு காலில்  அடிபடுகிறது . ஆட முடியாத நிலை.

அவரது அப்பா ”சாய்பாபா உண்மையிலேயே சக்தி உள்ள தெய்வம் என்றால் இது நடக்குமா?” என்று கொந்தளிக்கிறார். சாய்பாபா தனது சக்தியை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று ஒரு சம்பவம். 

காசியைச் சேர்ந்த பெண்ணின் மகன் கடலில் விழுந்து மரணத் தறுவாய்க்கு போய் விடுகிறான். இனி அவன் பிழைக்க மாட்டான் என்று டாக்டர்கள் சொல்லி விட்ட நிலையில் நடந்தது என்ன?

பாபாவின் பக்தரான ஜானும் அவரது மனைவியும் அயல்நாட்டில் ஒரு அடர்ந்த மலைக்காட்டில் தனியாக வீடு கட்டி பாபா வழிபாட்டு மன்றமாக மாற்றி வாழ்கிறார்கள். பெரும் காட்டுத்தீயில் அந்த காடே எரிந்து சாம்பல் ஆன போது , ஜானின் வீடு என்ன ஆனது ..
இவையே இந்தப் படம். 

டைட்டிலில் வரும் இசை காதுக்குள் தேவாமிர்தம் எனப் பாய்கிறது. (சாய் பஜன்?) கடைசி பாட்டும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. இசை தேவா. 

படத்தின் துவக்கத்தில் புட்டபர்த்தியை முழுசாகப் படம் பிடித்துக் காட்டும் இடத்திலேயே சஞ்சயின் ஒளிப்பதிவு மனம் கவர்கிறது. இயக்குனரின் ஷாட்கள் மற்றும் ஃ பிரேம்களும் ஒரு காரணம். படம் முழுக்கவும் ஒளிப்பதிவு அருமை. 

மென்மையான நிதானமான படத்துக்கு ஏற்ற உறுத்தாத படத்தொகுப்பை செய்திருக்கிறார் ரிச்சர்ட்.  

ஜெகபதிபாபு கதை  எடுக்கப்பட்ட விதம் செயற்கை. . ஆபத்தில் இருக்கும் விமானத்தில்,  அவர் திரிகால ஞானி போல இருப்பது இயல்பாக இல்லை. வாங்கி கொள்ளையில் சுடப்பட்ட காவலாளியின் உடலில் பட்ட குண்டில்  உள்ள கெமிக்கல் காரணமாக, அந்தக் காவலாளி இன்னும் ஐந்து நிமிடத்தில் இறந்து விடுவான் என்ற நிலையில், அவனைக் காப்பாற்றுவது பற்றி, சுட்டவனிடம் பதினைந்து நிமிடம் (அதிகப்) பிரசங்கம் செய்கிறார்  ஜெகபதி பாபு. பக்கா தெலுங்குப்  படம் .

பாலக்காட்டு தம்பதி கதை. எளிமை , இயல்பு, நேசம் மற்றும் டிவைன். மிக கனமான கேரக்டரில் தனது நடிப்பின் பிளஸ் மற்றும் மைனஸ்களோடு ஜமாய்த்து இருக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரன். 
ஆனால்  ஸ்ரீரஞ்சனி !

பிரம்மிக்க வைத்து விட்டார். அற்புதமான நடிப்பு. பொதுவாக அவர் வசனம் பேசுவது  பிரேக் இல்லாத டூவீலர் அடுத்தடுத்து வரும் ஸ்பீட் பிரேக்கர்களில் குதிப்பது போல,  விட்டு விட்டு வரும். ஆனால் இதில் அந்தக் குறையே இல்லை. இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட். அப்படி ஓர் அசத்தல். ஸோ நைஸ் ரஞ்சனி.

சுஹாசினி எபிசோட் நன்று . ஆனால் ஓவர் ஆக்டிங்கால் ஓட ஓட விரட்டி விரட்டி அடிக்கிறார் சுஹாசினி. 

அபிராமி வெங்கடாசலமும் அப்படியே . நன்றாக நடிக்கிறேன் என்ற பெயரில் நெகிழ்ந்து குவிக்கிறார். அதுவும் அவர் ஆடிய பரத நாட்டியத்துக்கு எல்லாம் முதல் பரிசு கிடைக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க பாபாவின் அருள்தான். 

பாலக்காட்டு தம்பதி கதையிலும் , காசி பெண்ணின் கதையிலும் அற்புதமான வசனங்களை எழுதி தூக்கி நிறுத்துகிறார் பா. விஜய். 

கடைசி கதையை ரொம்ப இழுக்காமல் சிறப்பாக சுருக்காக முடித்த விஷயத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவம் தெரிகிறது . 

மொத்தத்தில் அனந்தா … பாபா புகழ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *