எத்தனை தேறும் ? பார்க்கலாம் ,
சிறுவயது முதலே ஒன்றாக சேர்ந்து வாழும் ஐந்து அநாதை சிறுவர்கள் வளர்ந்து ( அமர், சித்தார்த், ஜெரால்டு, ராஜசேகர் , நசீர்) , கட்டிடத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் .
சோறு , மது , மாது இப்படி எது என்றாலும் ஐவரும் பங்கு போட்டுக் கொள்ளும் வாழ்க்கை .
இந்நிலையில் புதிதாக அங்கு வேலைக்கு சேரும் — வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது (உமாஸ்ரீ) ஐவரில் ஒருவனுக்கு (சித்தார்த்) காதல் வருகிறது .
அந்தப் பெண்ணும் காதலிக்க , நண்பர்கள் வழக்கம் போல அவளையும் பங்கு கேட்கிறார்கள்.
சண்டை வந்து நட்பு வென்று காதலை ஏற்று வாழ்த்தி வாழ வைத்து, மற்றவர்கள் அந்தப் பெண்ணை சகோதரியாக ஏற்று ஒன்றாக வசிக்கிறார்கள் .
ஐவரும் வேலை பார்க்கும் ஒரு பெரிய கட்டிடக் கம்பெனியின் முதலாளி மகள் (மேக்னா ) , அந்த ஐவரில் இன்னொருவனை ( அமர்) காதலிக்கிறாள் .
ஒரு நிலையில் அவள் டூர் போய்விட , பெரும் மழை பல நாட்கள் நீடிக்க, அறுவருக்கும் வேலை இல்லாமல் போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட,
உணவு தேடும் முயற்சியில் ஒரு நண்பன் மின்சாரத்தில் அடிபட்டு செத்துப் போகிறான் .
தன் பெண் ,ஒரு கட்டிடக் கூலித் தொழிலாளியை காதலிப்பதை அறிந்த கட்டுமாணக் கம்பெனி முதலாளி, மகளது காதலை எதிர்க்க ….. அது இந்த நண்பர்களை எப்படி பாதித்தது என்பதே அஞ்சுக்கு ஒண்ணு .
அனாதை நண்பர்கள், ஜாலி வாழ்க்கை, அந்த வாழ்க்கையில் காதல், அதனால் வரும் சண்டை சச்சாரவு, சமாதானம் ,
அப்புறம் வரும் பிரச்னைகள் என்ற பழகிய கதையில் கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை என்ற விஷயத்தைக் குழைத்து கலவை போட்டு அடித்துப் பூசிய வகையில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் .
குறிப்பாக கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கை முறை , அங்கே வேலை செய்யும் பெண்களின் பிரச்னைகள் , அப்படி நகருக்கு வந்து வேலைக்கு சேரும் பெண்களின் பின்னால் உள்ள,
கிராமத்து — வாழ்ந்து கெட்ட வாழ்க்கை, சோகங்கள் என்று பல பாராட்டத்தக்க அம்சங்கள் படத்தில் உண்டு .
நடிகர்களில் நண்பர்களாக வரும் ஐவரின் நடிப்பும் உமஸ்ரீயின் நடிப்பும் ஒகே
கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்க்கையை சொல்ல வந்தவர் அதற்கு அமைத்த துணைக் கதைகளில்தான் , பொருந்தாமை என்னும் மணலைக் கூட்டி யதார்த்தம் என்ற சிமண்டைக் குறைத்து,
பலகீனமான சுவர் கட்டுகிறார் இயக்குனர் .
அந்த ஐவரையுமே மலை போல நம்பி இருப்பதோடு கல்யாணமும் செய்து வைக்கும் முதலாளி இருந்தும் , அந்த முதலாளியின் மகளே ஐவரில் ஒருவனை காதலித்தும் ,
மழைக்காலத்தின் நண்பர்கள் சோற்றுக்கு அலைந்தார்கள் என்பது ( என்னதான் முதலாளியின் மகள் டூ……ருக்குப் போய் இருந்தாலும்கூட ), சாம்பல் கலந்த சிமெண்டில் தளம் போடுவது போன்ற அநியாயம் .
அதே போல இந்த ஐவரால்தான் முதலாளியின் கட்டிடத் தொழிலே ஓகோ என்று இருப்பதாகவும், அவர்களை தன் கம்பெனிக்கு இழுக்க ,
இன்னொரு கட்டுமான நிறுவன முதலாளி இந்த ஐவருக்கும் மது மாது விருந்து வைப்பதும் , வேகாத செங்கல் போன்ற காட்சிகள் .
இரண்டு முதலாளிகளின் நடிப்பும் , மேகனாவின் நடிப்பும் கூட படு செயற்கை . சிங்கம் புலி காமெடி எல்லாம்…. ம்ஹும் !
கிளைமாக்ஸ் என்று எதுவும் இல்லாமல் அது பாட்டுக்கு முடியுது படம் .
கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொன்னது பாராட்டுக்குரிய விஷயம் . ஆனால் அதை யதார்த்தமாகக் காட்சிப் படுத்தத் தெரிந்தவர்கள்.
திரைக்கைதையில் கோட்டை விட்டதால் , உசரமாக எழுந்தும் மண்ணுக்குள் புதைந்த மவுலிவாக்கம் கட்டிடம் ஆகி விட்டது படம் .
அஞ்சுக்கு ஒண்ணு …. அஞ்சுக்கு 1/3