
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தி.சிவா தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், ஆனந்தி , நிக்கி கல்ராணி நடிக்க எம் .ராஜேஷ் இயக்கி இருக்கான் குமாரு . படத்தில் சுவாரசியம் இருக்கா குமாரு? பார்க்கலாம்
நாளை மறுநாள் கல்யாணம் என்ற நிலையில் தன் நண்பனுக்கு ( ஆர் ஜே பாலாஜி ) ஃபைனல் பேச்சிலர்ஸ் பார்ட்டி தருவதற்காக, கண்டிப்பு மிக்க — வருங்கால மனைவி பிரியாவின் (நிக்கி கல்ராணி)
காரில் பாண்டிச்சேரி போகிறான் குமார் (ஜி வி பிரகாஷ் குமார் )
குமாருக்கு நான்சி என்ற பெயரில் ஒரு முன்னாள் காதலி (ஆனந்தி ) இருப்பது பிரியாவுக்கு தெரியும் . இதற்கிடையில் நான்சி பிரியாவை கிண்டல் செய்வதும் பிரியாவுக்கு தெரிய வருகிறது .
பாண்டிச்சேரியில் இருக்கும் குமார் நான்சியை உருகி உருகி காதலித்த விதத்தையும் , நான்ஸியின் அப்பா ( எம் எஸ் பாஸ்கர்), குமாரின் குடும்பத்தில் எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும்
—- என்று வற்புறுத்தியதால் பிரச்னை வந்ததையும் ,
இந்த நிலையில் ஒய் டிவியில் பேசுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இது விஷயமாக பஞ்சாயத்துக்குப் போக , குமாரும் நான்ஸியின் அப்பாவும் சமாதானத்துக்கு வரும் நிலையில் ,
நிகழ்ச்சியை பரபரப்பாக்கி டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக நிகழ்ச்சியை நடத்தும் கோமதி கோபால கிருஷ்ணனும் (ஊர்வசி) அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் திட்டமிட்டு ,
குமாருக்கும் நான்ஸியின் அப்பாவுக்கும் சமாதானம் வரும்போது சண்டையை தூண்டி விட்டு பிரச்னையைப் பெரிதாக்கி காதலை பிரித்த கதையையும் ‘பிளாஷ் பேக்’கி உருகுகிறான்
பாண்டிச்சேரியில் இருந்து வரும்போது நண்பன் பாலாஜி நிறைய சரக்குகளை வாங்கி கார் டிக்கியில் வைத்து கொண்டு வர ,
லஞ்சம் வாங்கும் விடாக்கண்டன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் (பிரகாஷ் ராஜ்) மற்றும் அவரது வலது இடது கைகளான இரண்டு கான்ஸ்டபிள்கள் ( சிங்கம் புலி , ரோபோ ஷங்கர் ) ஆகியோரிடம் இவர்கள் சிக்க,
அந்த பொல்லாத போலீஸ் அதிகாரியை ஏமாற்றி நண்பர்கள் தப்பிக்க, அவர் டென்ஷனாக அப்புறம் என்ன நடந்தது…
குமார் — பிரியா கல்யாணம் நடந்ததா ? இல்லை குமார் – நான்சி கல்யாணம் நடந்ததா ? அட, குமாருக்கு கல்யாணமாவது நடந்ததா ? என்பதே இந்த கடவுள் இருக்கான் குமாரு
கதை என்று எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ,
முதல் காதல், பிரேக்- அப், வேறு பெண்ணுடன் கல்யாணம், குடிப்பழக்கம் , பயணம், லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரி, பணப் பிரச்னை, பேய் , வாட்ஸ் அப் ரகளைகள், என்று
காமெடி , கிளாமர் எல்லாம் சேர்த்து அசால்ட்டான திரைக்கதையில் படத்தைக் கொண்டு போகிறார் இயக்குனர் எம் ராஜேஷ் . கலகலப்பு இருக்கிறது .
ஒரு முற்றுப் புள்ளி வைத்தால்தான் அது முடிவு . அதுவே மூன்று முற்றுப் புள்ளி வைத்தால் அது முடிவு அல்ல .. தொடர்ச்சி . இந்த இன்டல்லக்சுவல் காமெடிக்கு ஒரு பொக்கே !
ஜி வி பிரகாஷ் குமார் வழக்கம் போல ஆடி பாடி துள்ளித் துடித்து நடிக்கிறார் . லொக்காலிட்டி பாய்ஸ் பாடலில் இசையமைப்பாளராகவும் ஹிட் கொடுத்திருக்கிறார்
ஆனந்தி , நிக்கி கல்ராணி இருவரும் காதலுக்கும் கவர்ச்சிக்கும் பயன்படுகிறார்கள் .
எனினும் காமெடிக்கு கேரண்டி தருவது ஆர் ஜே பாலாஜிதான் . பல பஞ்ச்கள் சிரிக்கும்படியோ அல்லது புன்னகைக்கும்படியோ இருக்கின்றன .
சைவ காமெடியும் இருக்கிறது . கொஞ்சம் டபுள் மீனிங் காமெடியும் இருக்கிறது .
சிங்கம் புலி மற்றும் ரோபோ ஷங்கரும் ஒகே .
பிரகாஷ் ராஜ் , ஊர்வசி இருவரும் வழக்கம் போலலே .. சிறப்பு !
ஸீ தமிழ் சேனலில் லக்ஷ்மி ராம கிருஷணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தாறுமாறாக வாரி இருக்கிறார்கள் .
டிவிக்காரர்கள் அழைத்து நிகழ்ச்சிக்கு வராவிட்டால் போலீசை வைத்து மிரட்டுவதாகவும் இந்தப் படத்தில் ஒரு வசனம் வருகிறது
தவிர பல செளிபிரிட்டிகளின் பெயர்களும் வசனத்தில் பயன்படுத்தப் படுகிறது .
நவராத்திரி படத்தில் சிவாஜி அசத்திய ”இரவினில் ஆட்டம்ம்ம்ம்ம்……” பாடலை,
பேய்களுக்கு ரீமிக்ஸ் செய்து இருப்பது குறிப்பிடத்தக்க, அட !
கடவுள் இருக்கான் குமாரு … காமெடி இருப்பதால் கழண்டுடவில்லை நிஜாரு !