மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்க, புளூ சட்டை சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், வழக்கு எண் முத்துராமன், மறைந்த மாறன் மற்றும் பலர் நடிப்பில் புளூ சட்டை சி. இளமாறன் கதை திரைக்கதை வசனம் எழுதி, இசை அமைத்து இயக்கி இருக்கும் படம் ஆன்டி இண்டியன் (ஆன்ட்டி இண்டியன் என்பதே சரி. ஆன்டி என்பது அவ்வளவு சரியான எழுத்துப் பிரயோகம் அல்ல)
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த இப்ராஹீமுக்கும் இந்துவாக இருந்த சரோஜாவுக்கும் மகனாகப் பிறந்து தேர்தல் விளம்பரம் தயாரிக்கும் ஆர்ட்டிஸ்டாக இருந்த பாஷா (புளூ சட்டை சி. இளமாறன்), மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்திருக்கும் நிலையில் மர்மமாக கொல்லப்படுகிறார் . கொலையாளிகள் யாரென்று தெரியாத நிலையில் இன்னொரு பிரச்னை வெடிக்கிறது.
இப்ராஹீமுக்கு சரோஜாவோடு நடந்த திருமணம் முறைப்படி ஜமாத்தில் பதியப்படவில்லை என்பதாலும் நடுத்தர வயது வரை வாழ்ந்து மறைந்த பாஷாவுக்கு முறைப்படி சிறு வயதில் நடக்க வேண்டிய சுன்னத் கல்யாணம் சாகும் வரை நடக்கவில்லை என்பதாலும் , அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய , இஸ்லாமியர்கள் மறுக்கின்றனர் .
இந்துத்வ கட்சியில் ராஜாவின் ( கர்ண ராஜா) முக்கிய கையாளும்- சரோஜாவின் தம்பியுமான ஏழுமலை வெகுண்டு எழுந்து கோபமாகப் பேசி விட்டு , மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து இந்து முறைப்படி சடங்குகள் செய்து இந்து மயானத்தில் அடக்கம் செய்யக் கொண்டு போக, அங்கே ”இப்ராஹீம் மகன் பாஷா என்றால் இஸ்லாமியர்தான் அவரை இந்து மயானத்தில் அடக்கம் செய்ய முடியாது” என்கின்றனர் .
சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு உதவிகள் செய்து சரோஜாவை மதம் மாற்றி லூர்து மேரி என்று ஆக்கிய பாதிரியார், “லூர்து மேரி கிறித்தவர் ஆன பிறகு அவர் மகனும் கிறித்தவன்தான். ஏனவே நாங்கள் பாஷாவை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்வோம் “என்கிறார் . அதில் ஏழுமலைக்கு சம்மதம் இல்லை .
இந்த மதச் சண்டையை சாதகமாக்கி இடைத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற மாநில முதல்வரும் ( ராதாரவி) எதிர்கட்சித் தலைவரும் ( மகேஷ்) முயல் , முதல்வருக்கு உயர் போலீஸ் அதிகாரியும் ( ஆடுகளம் நரேன்) எதிர்க்கட்சித் தலைவருக்கு தாதாக்களும் உதவ
என்ன நடந்தது என்பதே இந்த ஆன்ட்டி இண்டியன்.
படத் தொகுப்பில் நீக்கப்பட்டு விட்ட காட்சிகளில் நடித்த நடிகர்களை குறிப்பிட்டு டைட்டில் போடும்போதே ‘அட!’ என்று ஆச்சர்யப்பட வைக்கிறார் இளமாறன்.
எடுத்துக் கொண்ட கரு, கதை, ஓரளவுக்கு திரைக்கதை மற்றும் வசனத்தில் கடைசி வரை அந்த ஆச்சர்யத்தை தக்க வைத்திருப்பது எழுத்தாளர் மாறனின் பெரும் வெற்றி .
முதல் காட்சியில் இறந்து கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இளமாறனின் மூக்கு வாய் எல்லாம் ஈக்கள் உலவும் வகையில் படம் பிடித்து இருக்கும் யதார்த்தம் கடைசி வரை தொடர்கிறது .
கதைக் களத்துக்கு பொருத்தமான முகங்கள் , மொழி ஆகியவற்றிலும் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார்.
பிணத்தைப் பார்த்து அழுது விட்டு உடனே பிழைப்புக்காக மீன் விற்கப் போகும் பெண்கள்… போன்ற வாழ்வியல் நிகழ்வுகள் போகிற போக்கில் ஆனால் சிறப்பாக படம் முழுக்க வருகின்றன.
அரசியல்வாதிகள், மத வெறியர்கள் , தொலைக்காட்சிகள் பற்றிய எள்ளல் , அபாரமாக இருக்கிறது.
பொதுவாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் உலவும் படங்களை எடுக்கும் படைப்பாளிகள் , எதுக்கு வம்பு என்று ‘எல்லோரும் நல்லவர்கள்’ என்ற ரீதியில் ஒரு முடிவைக் கொடுத்து பாம்புக்கு வாலையும் தவளை, எலிக்கு தலையையும் காட்டி பசப்புவார்கள்.
ஆனால் அந்த பம்மாத்து எல்லாம் இல்லாமல் எல்லா மதத்தினரின் மத வெறி , துவேஷம், சுயநலம் இவற்றை வச்சு வெளுத்து இருக்கும் மாறனின் படைப்பாண்மை பாராட்டுக்குரியது .
இந்தப் படத்தை ஒரு திரை அனுபவமாக மாற்றுவதில் பெரும்பங்கு ஒளிப்பதிவாளர் கதிரவனுக்கு உண்டு . குறிப்பாக அவர் வைத்திருக்கும் ஏரியல் ஷாட்கள் நின்று பேசுகின்றன . சபாஷ் .
ராதாரவி , ஆடுகளம் நரேன் , பசி சத்யா, ராஜாவாக வரும் கர்ண ராஜா முதல் கொண்டு மறைந்த மாறன் , விஜய் டிவி பாலா போன்ற சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் வரை பலரும் நன்றாக நடித்துள்ளனர்.
சுதர்ஷனின் படத் தொகுப்பு சில இடங்களில் சிறப்பு . சில இடங்களில் தொய்வு . ஆன்ட்டி கிளைமாக்சை எல்லோரும் எளிதாக யூகித்து விடும் வகையில் காட்சிகள் படத்தில் இருக்கிறது . அமைதிப் பேச்சுவார்த்தை துவங்குவது பற்றி அவ்வளவு நீளமாக எல்லாம் நீட்டி முழக்கத் தேவை இல்லை.
படத்தில் பல இடங்களில் வசனத்துக்கு கைதட்டல், பலத்த கைதட்டல், விழுகிறது . சிரிப்பலை எழுகிறது ஆனால் அது கதை மற்றும் காட்சியில்,உள்ள விசயங்களின் வலுவால் விழும் கைதட்டல்கள்தான் மொழி ரீதியாக வசனங்கள் இன்னும் தெறிப்பாக இருந்திருக்க வேண்டும் சில பல இடங்களில் வாளாக இருக்க வேண்டிய வசனம் வாலாக இருக்கிறது .
வில்லியம்சின் இணை இசை உதவியோடு மாறன் அமைத்திருக்கும் இசை குறையில்லை. கடைசி காட்சிகளில் பின்னணி இசை நெகிழ வைக்கிறது.
கலவரக் காட்சிகளில் நடித்த துணை நடிகர்கள் சரியாக வேலை வாங்கப்படவில்லை என்றாலும் மற்றபடி காட்சி அமைப்பில் கலவரச் சூழலை கண் முன் கொண்டு வந்த விதம் சிறப்பு .
இன்னும் சிறப்பான திரைக்கதை, படமாக்கல் , இயக்க நேர்த்தி இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் கூட பல மடங்கு சிறப்பாக உயர்ந்திருக்கும் . எனினும் இப்போதும் கூட கருத்தியல் ரீதியாக இது கொண்டாடப்பட வேண்டிய படம்தான்
அந்தக் கடைசிக் காட்சி மனசுக்குள் ஏற்படுத்தும் அமைதிப் பெரு வெடிப்பு … அதுதான் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி .
அடக்கி ஆளும் அயோக்கியர்கள் மத வெறியை வைத்து வஞ்சக வலை விரிக்க, அதில் படித்த முட்டாள்களே விழுந்து மற்றவர்களையும் எரித்து தானும் எரிந்து போகும் சூழலில், ஆன்ட்டி இண்டியன் மிக மிக அவசியமான படம்.
அந்த வகையில் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இது .
மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்,

பணத்தைப் போட்டு இப்படி ஒரு படத்தை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர் ஆதம் பாவாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆன்ட்டி இண்டியன் …. கருத்தியலில் காதலன்.
மகுடம் சூடும் கலைஞர்கள்
*************************************
புளூ சட்டை சி. இளமாறன்,
ஆதம் பாவா
கதிரவன்
