பேபி & பேபி @ விமர்சனம்

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் யுவராஜ் தயாரிக்க,ஜெய், யோகி பாபு , பிரக்யா நக்ரா, சத்யராஜ், இளவரசு, கீர்த்தனா ஆனந்த் ராஜ், ஸ்ரீமன், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி   நடிப்பில் பிரதாப் என்பவர் இயக்கி இருக்கும் படம். 

தன் ஜமீனுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்படும் ஜமீந்தார் ஒருவருக்கு  (சத்யராஜ்) அவர் பார்த்து திருமணம் செய்து வைத்த மகளுக்கு பெண் பிள்ளைகளே பிறக்கிறது . ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஜமீன்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட  மகனுக்கு (ஜெய்) ஆண் குழந்தை பிறக்கிறது . எனவே மனம் மாறி மருமகளோடு ( பிரக்யா நக்ரா) வரச் சொல்கிறார் ஜமீந்தார் .

சகுனம் நல்ல நேரம் கெட்ட நேரம் இவற்றில் நம்பிக்கை உள்ள ஒரு பணக்காரருக்கு (இளவரசு) ,  பேத்தி பிறந்தால் யோகம் அதிகரிக்கும் என்று ஜோசியர் சொல்ல , அவர் சொல்படி கல்யாணம் செய்து கொண்ட மூத்த மகனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறக்கிறது . ஆனால் காதல் கல்யாணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட இளைய மகனுக்கு (யோகி பாபு) பெண் குழந்தை பிறக்கிறது . எனவே மனம் மாறி அவரும் தன்  மகனை மருமகளோடு (சாய் தன்யா?) வரச் சொல்கிறார் 

இரு தம்பதியும் தங்கள் பிள்ளையோடு விமானத்தில் வரும்போது குழந்தை மாறி விடுகிறது . வெவ்வ்று விமான நிலையங்களுக்கு இடையே உள்ள ஊரில் சந்தித்து குழந்தைகளை சரி மாற்றம் செய்து கொண்டு கிளம்ப முடிவெடுக்க, ஜமீந்தார் வந்து விடுகிறார் . 

எனவே  வீட்டுக்குப் போய் விட்டு அப்புறம் குழந்தைகளை மாற்றிக் கொள்ள முடிவெடுக்க , ஜாதக நம்பிக்கை பெரியவரின் பேத்தி , ஜமீன்தாரின் பேரனுக்குப் பதிலாக தவறாகக் கடத்தப்படுகிறார் . 

அப்புறம் என்ன நடந்தது என்பதை சீரியசாக கொஞ்சமும் காமெடியாக கொஞ்சமும் சொல்ல முயன்று இருக்கிறார்கள் . 

மற்றவர் குழந்தையை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள, நம் குழந்தை கடத்தப்பட்டு விட்டது என்ற செய்தி அறிந்ததும் உறைந்து நிற்கும் யோகி பாபுவின் முக பாவனை எளிய மனிதர்களின் மன நிலையை அப்படியே பிரதி பலிக்கிறது . சபாஷ் யோகி பாபு. 

சத்யராஜ் எல்லாம் இந்தப் படத்தில் தூங்கிக் கொண்டே நடித்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி அவர் பழகிய ஒரு கேரக்டர் . 

ஜெய் வழக்கம் போல

இமான் இசையில் யுக பாரதி வரிகளில் வரும் தாலாட்டுப் பாட்டு தேன் சுனை. டி பி சாரதியின் ஒளிப்பதிவு குளிர்ச்சியான வண்ண மயம். 

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,ஆனந்தராஜ், சிங்கம் புலி, ஸ்ரீமன்,  விஜய் டி வி ராமர், தங்க துரை ஆகியோர் சேர்ந்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயன்று ஆங்காங்கே சிராய்ப்புகளோடு சிறு சிறு வெற்றியும் பெறுகிறார்கள். 

கடைசியில் சமூகத்துக்கு அறிவுரையும் உண்டு .

ஆனால் குழந்தை காணாமல் போன அடுத்த காட்சி முதலே அவர் யோகி பாபு என்பதால்   எல்லாரையும் காமெடி என்ற பெயரில் கலாய்த்துக் கொண்டே இருப்பது , கேரக்டர் என்றால் என்ன விலை என்று கேட்கும் செயல். எரிச்சல் . 
பேரன் வந்ததைக் கொண்டாட வயல் வெளியில் களத்து மேட்டில்  மேஜை போட்டு  ஊரு மக்களை வரிசையாக நிற்க வைத்து  வேட்டி சேலை  கொடுக்கும் பணக்காரக் கதாபாத்திரத்தை நீங்கள் இதற்கு முன்பு மூவாயிரம் படங்களில் பார்த்த மாதிரியே இந்தப் படத்திலும் பார்க்கலாம். 

‘ஏன்டா.. ஏர்போர்ட்ல தவறிய குழந்தையை சந்தித்து மாற்றிக் கொள்வதற்கு இவ்வளவே களேபரமா? ஜமீந்தாரிடமும் பணக்காரரிடமும் சொல்லி விட்டே மாற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்திருக்கலாமே .. ஜஸ்ட் ரெண்டு திட்டு தானே விழுந்தால் விழட்டும் அதுக்கு எதுக்கு இப்படி தலைய சுத்தி….. ம்ஹும் தலைக்குப் பின்னால் தலைகாணியை வச்சு அந்தத் தலைகாணியையும் சுத்தி மூக்கைத் தொடணும்?”  என்ற கேள்வி உங்களுக்கு வந்தால் நீங்களும் என் நண்பனே .   

உங்கள் வயதில் ஒரு முப்பது வருடத்தைக் குறைத்துக் கொள்ள ஆசையா? இந்தப் படத்துக்குப் போகலாம். உங்களுக்கு முப்பது வயது குறைந்து விடும்.  ஏனெனில் முப்பது வருடத்துக்கு முந்தைய பாணியில் எடுக்கப்பட்ட படம் இது . 

பேபி & பேபி….  குறை சொல்லவும் பெரிதாக இல்லை. கொண்டாடவும் ஒன்றும் இல்லை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *