காதல் என்பது பொது உடமை @ விமர்சனம்

லென்ஸ் என்ற நல்ல படைத்தைக் கொடுத்த  ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணனின் எழுத்து இயக்கத்தில் லிஜோ மோல் ஜோஸ், அனுஷா பிரபு , கலேஷ் ,ரோகிணி,  வினீத், தீபா நடிப்பில் வந்திருக்கும் படம் .

தனி ஆளாக மகளை வளர்க்கும் தாயிடம் (ரோகினி) அந்த மகள் (லிஜோ மோல் ஜோஸ்) ஒருவரைக் காதலிப்பதாக சொல்ல, ”நீ சொல்லும் மாப்பிள்ளைக்கு மகளைக் கட்டி வைக்கிறேன்” என்று தாய் சொல்லி,  அழைத்து வர் சொல்ல,

வந்தது மாப்பிள்ளை அல்ல இன்னொரு பெண் ( அனுஷா பிரபு) . அவர்கள் இருவரும் தன் பால் ஈர்ப்பு கொண்ட லெஸ்பியன் ஜோடி.

கூட வந்திருக்கும் நபர் (கலேஷ்) மகளிடம் காதல் சொல்லித் தோற்றுப் போனவன்.எ னினும்  பெண் – பெண் காதல் ஜோடியை புரிந்து கொண்டு உதவுபவன்.

அதிர்ந்து போகிறாள் தாய் .  

இன்னொரு பெண்ணோடு வாழும் கணவனை ( வினீத்) அழைக்க, அவனும் வர, 

அவர்கள் எல்லோரும் லெஸ்பியன் காதல் ஜோடியை மாற்ற முயல நடந்தது என்ன என்பதே படம்.

ரோகினி,, லிஜா மோல் ஜோஸ், வினீத்  எல்லோரும் அற்புதமாக நடித்துள்ளனர் .  கேரக்டருக்கு என்றே செஞ்ச ஆள் போலப்  பொருத்தமாக இருக்கிறார் அனுஷா பிரபு . சிறப்பாக நடித்துள்ளார் . 

எனினும் கொஞ்சம் மிஸ் ஆனாலும் கோமாளிக் கூத்தாகப் போக வாய்ப்புள்ள கேரக்டரில் மிக சிறப்பாக நடித்துள்ளார் கலேஷ். 

ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் ஷாட் ஸ்டைல் மற்றும் மேக்கிங் , கண்ணன் நாராயணனின் இசை, இயக்குனருடன் இயைந்த  டேனி சார்லஸ் படத் தொகுப்பு யாவும் சிறப்பு . 

ஆனால் திரைக்கதையில்தான் ஏகப்பட்ட அலட்சியங்கள் மற்றும் சமாளிப்புகள் . 

லெஸ்பியன், ஹோமோ செக்ஸ், மூன்றாம் பாலின நபர் இதெல்லாம் மற்ற வீடுகளில் பார்த்தால் புரட்சி பேசும் நபர்கள்,  அவர்கள் வீட்டில் அப்படி ஒரு நபர் இருந்தால் தலை கீழாக மாறுவார்கள் . அவர்களது சமூக மறுமலர்ச்சி வேடம் கலையும். 

ஒரு  தாய்க்கும் தகப்பனுக்கும் தங்கள் மகள் ஒரு லெஸ்பியன் என்பது தெரிய வரும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான் கதை  .

ஆனால் இயக்குனர் இதை  மற்ற வீடுகளில் நடந்தால் எந்தப் பார்வையில் பார்ப்போமோ,  அந்த மேடைப் பேச்சு  வாய்ச் சவடால் பாணியில் பார்த்து இருக்கிறார்.

அது ஒரு பரிதாபம் என்றால் இந்த லெஸ்பியன் கதையை பெரிய விஷயம் என்று எண்ணி,  அதற்கு வித்தாக அமைந்த கிளைக் கதைகளில் கோட்டை விட்டு இருக்கிறார் .

இந்தப் பெண்களது உறவை நியாயப்படுத்த பெற்றோர்களை கிண்டல் செய்வது மாதிரியான  காட்சிகள் வருவது தவறு .

மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் பல காலம் கழித்து  வீட்டுக்கு வருகிறான் . ”சரக்கு எங்க இருக்கு/”  என்று கேட்கிறான் “கப் போர்டுல கீழ”  என்கிறாள் கணவன் மீது கடும் கோபத்தில் இருக்கும்  மனைவி . ஏனென்றால் அவளும் வீட்டிலேயே மது வாங்கி அருந்தும் பழக்கம் உள்ளவள்.

படம் சம்மந்தப்பட்ட பலரும் மலையாளிகள் என்பதால் அங்கே நடப்பதை இங்கே சகஜமாகக் காட்டும் காட்சி கண்டிக்கத்தக்கது . இப்பவே மதுவால் மாநிலம் அழியுது . இந்த சூழலில் பெண்ணும் சகஜமாகப் குடிக்கும் காட்சியை, விமர்சனமே  இன்றி  ஜஸ்ட் லைக் தட் வைத்து விட்டுப் போவதை ஏற்க முடியவில்லை.

ஒரு ஆண் பெண் காதல் ஜோடியை அவர்களது பெற்றோர் ஏற்கவில்லை….. உடனே அந்த காதல் ஜோடி தங்கள் காதலின் வலிமையைக் காட்ட பெற்றோர் முன்பே கட்டிப் பிடித்து லிப் கிஸ் அடித்துக் கொள்கிறது … என்ற ஒரு காட்சியை வைத்தால் அது நன்றாக இருக்குமா? கண்டிப்புக்கு ஆளாகும் அல்லவா?

அப்படி இருக்க இந்தப் படத்தில் லெஸ்பியன் பெண்கள் மட்டும் அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டு லிப் கிஸ் அடிப்பதை எந்தப் பார்வையில் பார்ப்பது? . ஆணாதிக்க மனநிலை அந்த காட்சியை ரசிக்கும் என்ற குயுக்தி தானே?. அதுவே படம் சொல்லும் கருத்துக்கு எதிரானதுதானே? . 

முதல் குழந்தை பிறந்த போது அம்மா வலியால் துடித்தாளாம். எனவே அடுத்த குழந்தை உருவானபோது அந்தக் கருவை அவள் கணவனுக்குத் தெரியாமல் கலைத்தாளாம். (இதெல்லாம் மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்கிற கதை.) 

அதனால் கோபம் கொண்டு அந்தக் கணவன் மனைவியையும் மகளையும் பிரிந்து,  ஒரு டீச்சரோடு போய் விட்டானாம் . அந்த டீச்சருக்கு பிள்ளை இல்லையாம். இந்த அம்மா அந்த டீச்சரிடம் , ” அதெல்லாம் குழந்தை பெத்தவளுக்குதானே தெரியும் ” என்று குத்திக் காட்டுவாளாம். 

அய்யா… எங்க இருந்துய்யா வர்றீங்க நீங்க எல்லாம் .. அப்ரசன்ட்டிகளா!

பிரசவ வலி கொஞ்சமும் இல்லாமல் குழந்தை பிறக்க வைக்க ஒரு மருந்து எண்பதுகளில்  அமெரிக்காவில் தயாரான போது அதை எதிர்த்தவர்கள் பெண்கள் . அந்த வலிதான்,  வலி தந்து வரும் உயிர்தான் அந்தத் தாய்க்கும் பிள்ளைக்கும் மொழி இனங்களைக் கடந்து உலகம் எங்கும் ஏற்படுத்தி இருக்கும் பிணைப்பு . அது இல்லாவிட்டால் தாய்ப்பாசம் இல்லாமல் போய் விடும் என்று காரணம் சொன்னார்கள்.

(மருந்தின் பெயர் கூட தெரியும். அது இங்கே வேணாம். காரணம் கொஞ்சம் கூட வலி தாங்க முடியாத உடல் நிலையில் இருக்கும் பெண்களுக்கு அது பயன்படுத்தப்படுவதும் உண்டு  )

இதுதான் யதார்த்தம்.

ஒரு பேச்சுக்கு அந்த அம்மா செய்தது சரி என்றே வைத்துக் கொண்டாலும்,  அதற்காக மனைவி மகளை விட்டு ஓடிப் போனவன் வந்து நியாயம் பேசினால் எப்படி எடுபடும் ? 

இப்படி லெஸ்பியன் பெண்களுக்கு எதிராகப் பேசும் கதாபாத்திரங்களை எல்லாம் அப் நார்மல் அயோக்கியர்களாகக்  காட்டி இந்தக் கதையைச் சொல்லி இருப்பது போங்கு ஆட்டம் . 

வேலைக்காரியின் மகளை அந்த மகளின் கணவன் அடித்துக் கொடுமைப்படுத்துகிறான் என்று முதல் காட்சியில் சொல்லும்போதே அவள் யாருக்கு சப்போர்ட் செய்வாள் என்பது சுலபமாகப் புரிந்து விடுகிறது . எனவே அந்தக் கேரக்டரும் பலவீனப்பட்டு விடுகிறது .

இது கூட  அறிவு சம்மந்தப்பட்ட விஷயம் . இன்னொரு மாபெரும் தவறை இந்தப் படக்குழு செய்து இருக்கிறது . 
இந்தப் படம் ஒரு பெண்-  பெண் தன்பால் ஈர்ப்புக் கொண்ட இருவரைப் பற்றிய கதை என்பது அனைவருக்கும் பொது வெளியில் தெரிந்த ஒரு விஷயம் ஆகி விட்டது . 

ஏனென்றால் அதன் காரணமாகத்தான் இந்தப் படத்துக்கு மக்கள் வந்து குவிவார்கள் என்று இந்தப் படக் குழு  நம்புகிறது. எனவே தான் படக் குழு தனது புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் அதையே மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்திச் சொல்கிறது. 

ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை எப்படிப் போகிறது தெரியுமா?

மகள் காதலிப்பது இன்னொரு  பெண்ணை அல்ல .. வழக்கமான நிகழ்வு போல ஓர்  ஆண் பிள்ளையைத்தான் என்று அந்தத் தாயும் படம் பார்ப்போரும் நினைத்துக் கொள்வது போலவே ஆரம்பித்துப் பயணிக்கிறது . . 

மொத்தப் படமான 108 நிமிடத்தில் இது லெஸ்பியன் காதல் என்பது திரை மொழி புரிந்தோர்க்கு இருபது நிமிடம் கழித்தே புரியும்படியாகவும் பொது ரசிகர்களுக்கு அடுத்த சில நிமிடங்கள் கழித்தே புரியும்படியும் திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது 

அந்த டுவிஸ்ட் வரும்போது ஆடியன்ஸ் அப்படியே அதிர்ந்து ஆடிப் போவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஆரம்பக் காட்சிகளை மாய்ந்து மாய்ந்து எழுதி எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் இவர்களே இது லெஸ்பியன் காதல் படம் என்று கூவிக் கூவி சொல்லி விட்ட பிறகு அதுவே ஓப்பன் சஸ்பென்ஸ் ஆகி , அந்த இருபது நிமிடம் வேண்டாத ஒன்றாகப் போய் விடுகிறது. 

அல்லது தெரிந்த உடன் அம்மா எப்படி ரியாக்ட் பண்ணப் போகிறாள் என்ற அளவில் சுருங்கி விடுகிறது . அம்மா அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதும் புரியும் நிலையில் அது ஒரு  சின்ன சுவாரஸ்யம்  மட்டுமே  என்ற அளவில் குறுகி விடுகிறது . 

அம்மாவுக்குத் தெரியும் காட்சியும் இயல்பாகவே இருப்பதால் அதிலும்  பலன் இல்லை. 

உண்மையில் தன் பால் ஈர்ப்பு விசயத்தில் நம்ம ஊரு யதார்த்தம் என்பது என்ன?

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகள் காலம் தொட்டு,   பள்ளியில் கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை , நண்பன்/தோழி  வீட்டுக்குப் படிக்கப் போவது என்று,

டீன் ஏஜ் வயதில் பெரும்பாலான ஆண்களும்  பல பெண்களும் ஒரு துளி ஹோமோ செக்சுவல் அல்லது லெஸ்பியன் உணர்வை ஒரு நிமிடமேனும் கடந்துதான் வந்திருப்பார்கள். 

பெரும்பாலோனோர் அந்த சில நொடிகளில் அதில் இருந்து விலகி இயல்புக்கு வந்து விடுவார்கள், நான் உட்பட.(என்னை மாதிரிக் காட்டான்களுக்கே இதுதான் நிலைமை என்றால் அழகான பசங்க கதி என்ன என்று யோசித்துப் பாருங்கள்)

கொஞ்ச பேர் கொஞ்ச காலம் அந்த உறவில் இருந்து விட்டு அப்புறம் மாறி இருப்பார்கள் .

கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று ஆன பிறகும் ஹோமோ செக்ஸ் /லெஸ்பியன் உறவில்… ‘அது பாட்டுக்கு அது ; இது பாட்டுக்கு இது’ என்று சந்தோஷமாக இருப்பவர்கள் நிறைய பேர் . 

ஒரு நபர் இன்னொரு நபருடன் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள , ஒரு நிலையில் ஒருவர் இன்னொருவரின் மனைவியைக் கேட்க,  அந்த இன்னொருவர் முதலாம் நபரைக் கத்தியால் குத்திய சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு  கேரளாவில் நடந்து அது செய்தியாகவும் வந்தது .

காரணம் ஹோமோ செக்ஸ் அல்லது லெஸ்பியன் உறவு வேறு ; கணவன் மனைவி உறவு வேறு என்ற புரிதலும் பொறுப்புமே அந்தக் கத்தி குத்துக்குக் காரணம்

உண்மையில் கல்யாணம் குழந்தை குட்டி என்று பெற்று கடமைகளை முடித்த ஆண்களும் பெண்களும் கணவன் மற்றும் மனைவியின் அனுமதியோடு ஹோமோ செக்ஸ் அல்லது லெஸ்பியன் உறவும் வைத்துக் கொள்வது நடக்கிறது .என்று ஒரு கட்டுரை படித்த ஞாபகம் கூட இருக்கு.  

கணவன் மனைவிக்கு இடையேயான செக்ஸ் உறவுக்கு பாதிப்பு இல்லை எனில் கணவனின் ஹோமோ நண்பர்கள் குறித்து பல  பெண்கள் கவலைப்படுவது இல்லை. அதே மனைவிக்கு ஒரு லெஸ்பியன் உறவு இருந்தால் பல ஆண்களுக்கு அதை விட சந்தோஷமோ கொண்டாட்டமோ இல்லை என்பதே உண்மை நிலவரம்  

அதை விடுத்து ஒரு பெண்ணுக்கு ஆண்கள் தொட்டால் அருவருப்பாக இருக்கிறது . ஒரு ஆணுக்கு பெண்கள் தொட்டால் அருவருப்பாக இருக்கிறது என்பது ஸ்பெஷல் கேஸ். படத்தில் வரும் அனுஷா பிரபு கதாபாத்திரமும் அப்படித்தான். அது பொது உடமை லிஸ்டில் வராது . 

இது சொல்லப் பட வேண்டிய கதையே அல்ல. இதை இயக்குனரே வினீத் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் மூலம் ஒத்துக் கொள்கிறார். 

இதை எல்லாம் முன்னிறுத்தி என்னிடம் ஒரு முழு ஸ்கிரிப்டே இருக்கு 

உண்மை இவ்வளவு விசயங்களில் இருக்க, 

லெஸ்பியன் ஹோமோ உறவுகள் விசயத்தில் ஒரு மீச்சிறு விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு…
‘ உங்களுக்கு லெஸ்பியன் உறவோ ஹோமோ உறவோ இருந்தால் கல்யாணமே பண்ணிகாதீங்க . அப்படியே வாழ்ந்து செத்துப் போங்க ‘ என்று ஒரு விசயத்தை சொல்வதும் அதற்கு சில கூறு கெட்ட

துணைப் பாத்திரங்களை முன்னிறுத்துவதும் அரை வேக்காடுத்தனம் . பிள்ளை வேண்டும் என்றால் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்பது எல்லாம் பலவீனமான சப்பைக்கட்டு  வாதம் .

இப்போதே மாறி வரும் எலக்ட்ரானிக் வாழ்க்கை முறையால் மலட்டுத்தன்மை அதிகரித்து போகப் போக குழந்தை பிறப்பு விகிதம் குறையும் சூழலில் இப்படி ஹோமோ-  லெஸ் உறவு ,( சரி… பெண் பெண் காதல் … ஆண் ஆண் காதல்… நேசம்.. பாசம்… பற்று.. வரவு.. பாக்கி,  டெபிட்… டிவிடென்ட் …  போதுமா? ) மூலமும்  அது பாதிப்புக்கு ஆளாகும்

ரோம சாம்ராஜ்யம் அழிந்ததற்கு கிரேக்க அதிபர் டாலமி மூன்று காரணங்களைச் சொல்கிறார்

1. பலமான எதிரியான கிரேக்கர்களுடன் நடந்த தொடர் போர்கள் 2. ரோமானிய ஆண்கள் மத்தியில் அளவுக்கு மீறி பெருகிய ஹோமோ செக்ஸ் வாழ்க்கை . அதாவது பெண்ணோடு நோ  செக்ஸ்.3.  பாண்டி நாட்டின் முத்துக்களை வாங்குவதில் ரோமானியப் பெண்கள் காட்டிய அதீத ஆர்வமும் அதனால் சீர்குலைந்த ரோமானியப் பொருளாதாரமும் . 

மூன்றாவது காரணம் நமது பெருமையாக இருக்கலாம் . ஆனால் இங்கே இப்போது இரண்டாவது காரணம் முக்கியமானது .  மூன்றாம் உலக நாடுகளின் பலமே அதன் மேன் பவர் தான். அதைக் குறைக்க மேற்கத்திய நாடுகள்  பல, சதிகளை செய்கின்றன . அதில் ஒன்றுதான் இது போல ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பதும் . இதன் பின்னால் சில மத அமைப்புகளும் உண்டு . 

கிட்டத்தட்ட இந்தப் படமும் அதையேதான் செய்கிறது . 

விபத்தாக சூழல் காரணமாக அல்லது  டீன் வயதில் வரும் பாலுணர்ச்சிக்கு, 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் கதையாக, 

விரும்பி கூட லெஸ்பியன் அல்லது ஹோமோ செக்ஸ் உறவில் சிக்கி, 

பின்  அதில் இருந்து மீண்டு  வர நினைப்பவர்களையும் 

ஒருவேளை அது உண்மைக் காதலாக இருந்தாலும் ஒரு காதல் தோல்வி போல அதைக் கருதி ஜீரணித்து இயல்பான வாழ்க்கைக்கு  திரும்பி உற்பட நினைப்பவர்களை எல்லாம்…

”அதெல்லாம் தப்பே இல்ல. நீ கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க வேணாம் . இப்படியே ஜாலியா இருந்துட்டு செத்துப் போ என்று உசுப்பேத்திக் குட்டிச் சுவராக்கும் வேலையையே இது போன்ற படங்கள் செய்யும் . 

ஒரு ஆணுக்கு கடைசி வரை வரும்  பால்யகாலந் தொட்ட  தோழனை விட , ஒரு பெண்ணுக்கு பள்ளிக் காலம் முதல் கடைசிக் காலம் வரை   இருக்கும் தோழி என்பது ஒரு வரம். மாபெரும்  வரம். அப்படி அன்போடு இளம் வயதிலேயே அமையும் தோழிகளை லெஸ்பியன் போன்ற உறவுகள் மூலம் கெடுத்துக் கொள்வது மடமை.

தவிர இந்தப் படத்திலேயே சொல்வது போல ஹோமோ லெஸ்பியன் உறவுகள் எப்போதும் கூட வராது . ஒரு நிலையில் போய் விடும் . அல்லது ஆள் மாற்றிக் கொண்டே போகும் .

கல்யாணம் முடிந்து வேற்று ஊருக்குப் போகும் தன் தோழியை இனி பார்க்க முடியாது என்ற வருத்தத்தில் அவள் போகும் மாட்டு வண்டியின் பின்னாலேயே அழுது கொண்டு வரும் ஓர் உடல்சாரா மனம் நிறைந்த உண்மையான காதல் தோழியை  மண் வாசனையில் இரண்டே காட்சிகளில் காட்சிப்படுத்தி இருப்பார் பாரதிராஜா . இயக்குனர் இமயம்ன்னு நாங்க ஒண்ணும்  சும்மா சொல்லல . நான் எல்லாம் சாதரணமா ஒத்துக்கற ஆளா?

அதன் பின்னர் அப்படி ஓர் உறவை சொல்லும் வக்கு இங்கே யாருக்கும் இல்லை.

எடுக்கிறார்களாம்  படம்.

மொத்தத்தில் காதல் என்பது பொது உடமை … கடமை  போல பசப்பும்  கயமை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *