ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் சார்பில் ஜான் பீட்டர் எஸ் எம் பிலிம் பேக்டரி சார்பில் ஆர் ராஜ்குமார் ஆகியோர் தயாரிக்க, விமல் , சூரி, ஸ்ரிதா ராவ், கே ஜி எப் ராம், தேவதர்ஷினி , நமோ நாராயணன் நடிப்பில் கே வி நந்தா இயக்கி இருக்கும் படம்.
மலேசியா பாரில் வேலை பார்க்கும் தமிழ்நாட்டு இளைஞன் (விமல்) ஆட்குறைப்பு காரணமாக வேலை இழக்கிறான் . அவன் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது .
சொந்த ஊரில் அவனும் அவன் நண்பன் ஒருவனும் ( சூரி) சேர்ந்து செய்யும் அடாவடிகள் காரணமாக உறவும் ஊரும் சேர்ந்து கைக்காசு போட்டு அவனை மலேசியாவுக்கு அனுப்பி இருக்கும் .
திரும்ப ஊருக்குப் போனால் ஊர் அவனை உள்ளே விடாது என்ற நிலையில், மலேசிய நண்பன் ஒருவன் (ராமர்) ஊர் நண்பனுக்கு போன் போட்டு , ‘ உன் நண்பனுக்கு மலேசிய லாட்டரியில் பத்துகோடி ரூபாய் விழுந்து இருக்கிறது. அதான் ஊருக்கு வருகிறான். ஆனால் பணம் வர சில மாதங்கள் ஆகும் ” என்று கூறி விட , அவன் அதை ஊரில் எல்லோருக்கும் பரப்பி விட, ஊருக்கு வரும் இளைஞனை ஊரே வரவேற்கிறது. கொண்டாடுகிறது.
பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் ஆக்குகிறது . அவன் விரும்பிய மாட்டு டாக்டர் ( ஸ்ரிதா ராவ்) அவனை விடும்புகிறாள் .மகளைக் கட்டித் தர முடியாது என்று சொன்ன அக்காவும் மாமாவும் ( தேவதர்ஷினி – நமோ நாராயணன்) ” காட்டிக்காட்டி, வச்சுக்க ” என்கிறார்கள்.
லாட்டரி பொய் வெளிப்படுவதற்குள் ஊருக்கு நிறைய நன்மைகளை பிரசிடெண்ட் ஆக செய்கிறான் . ஏரி குளங்களைத் தூர் வாருகிறான் கிராமத்து வீதிகளுக்கு சாலை போடுகிறான் . மக்களுக்கு அரசுப் பணத்தில் உதவுகிறான்
மழை பொய்ப்பதற்கு காரணம் ஊரில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் என்று அறிந்து அவற்றை வெட்ட முயல்கிறான் . ஊரெங்கும் நிறைய சீமைக் கருவேல மரங்களை , விதை விதைத்து வளர்த்து வெட்டி விறகாக்கி ,அதனால் மழை இல்லாத நிலையில் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் மக்களை தனது செங்கல் சூளை வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தாதாவின் (கே ஜி எஃப் ராம் ) பகையை சம்பாதிக்கிறான் .
கருவேல மரங்கள் இல்லாமல் போனால் மழை பெய்யும் ; மக்கள் விவசாயம் செய்ய முடியும் . செங்கல் சூலை கூலி வேலைக்கு ஆட்கள் வரமாட்டார்கள். சூளையில் எரிக்க விறகும் கிடைக்காது என்பதால் தாதா , பிரசிடெண்ட்டின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, ஜெயித்தது யார்?மக்கள் யார் பக்கம் ? லாட்டரிக் குட்டு உடைந்ததா இல்லையா என்பதே படம்.
ஆறு வருடம தாமதமாக ரிலீஸ் ஆகும் படம்.
தமிழ் சினிமா சினிமாஸ்கோப்புக்கு மாறிய காலத்தில் தமிழில் கிராமத்துப் படங்கள் வந்தது அல்லவா. அந்த பாணியில் இருக்கும் படமாக்கல் முறை .
சூரியின் காமெடிகள் இப்பவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன .
உனக்கு பெண் தருவதற்குப் பதில் என் மகளை பாழுங் கிணற்றில் தள்ளலாம் என்ற பழமொழியை, நமோ நாராயணன் செய்து விட்டு சொல்லும் காமெடி ரகளை .
லாட்டரி விசயத்தில் நாயகன் அலட்டிக் கொள்ளாமல் இருக்க, அந்த பொய்யை ஊருக்கு சொன்ன நண்பன் கேரக்டர் அஞ்சு நடுங்கும் சூழலும் கலகல.
ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் இனிமை . அருமை .
எல்லாவற்றையும் விட சீமைக் கருவேல மரம் அது செய்யும் பாதகம் அதை எப்படி அழிப்பது அந்த நிலத்தை எப்படி மீண்டும் விவசாய நிலம் ஆக்குவது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள். அருமை . பாராட்டுகள் ( சீமைக் கருவேல மரத்தில் கட்டி வைக்கப்படும் பசுமாடு சினை பிடிக்காது என்பதில் இருந்தே அந்த மரத்தின் கொடூரம் விளங்கும். அதையும் சொல்லி இருக்கலாம் )
ஆனால் முதல் பாதி முழுக்க ஹீரோ போலவே வெட்டியாய் படத்தை சுற்ற விட்டு விட்டு இரண்டாம் பாதியில் பின்பாரம் ஏறிக் கிடப்பது போல சீமைக்கருவேல மர விசயத்தைக் கையில் எடுத்தது பக்குவமில்லாத திரைக்கதை அமைப்பு.
ஆரம்பம் முதலே அதை ஒரு விசயமாக சொல்லி இருந்தால் படத்தின் கனம் ஏறி இருக்கும் .