பெத்தி @ விமர்சனம்

விருத்தி சினிமாஸ் சார்பில் வேங்கட கிருஷ்ண கிலாரு , இயக்குனர் சுகுமார் ஆகியோர் தயாரிக்க, ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு,  பொம்மன் இரானி நடிப்பில் புச்சி பாபு சனா என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி ஒரு பகுதி தமிழிலும் எடுத்து இணைக்கப்பட்டு வந்திருக்கும் படம்.

பெத்தி என்றால் ‘பெருசு’, ‘தல’ என்று  பொருள்.

இந்திய அரசு பதிவேட்டிலேயே இடம் பெறாத மலைக்கிராமம் ஒன்றில் வாழும் பழங்குடி மக்கள்.  அந்த ஊரை ஒட்டி போகும்  ரயில்கள் அந்த  ஊரில் நிற்க ஆரம்பித்தால் அந்த ஊரின் தலையெழுத்தே மாறும். ஆனால் இந்திய அரசுக்கு அந்த ஊரும் மக்களும் ஒரு பொருட்டே இல்லை.அவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என்ற எந்த அரசு அடையாள அட்டையும் இல்லை. அவர்கள் இந்தியக் குடிமக்களே இல்லை 

ரயிலை எப்படியாவது  நிறுத்தி விட வேண்டும் என்று தினந்தோறும் சிவப்புக் கொடியை காட்டி நிறுத்த முயலும் சமூக சேவகர் அப்பல  சூரி ( ஜெகபதி பாபு), அதோடு எம் எல் ஏ,  கலெக்டர் , மந்திரி என்று பலரையும் பார்த்தும் பயனில்லை. 

ஊரில் கருப்பட்டி காய்ச்சுவது உட்பட எல்லா வேலைகளையும் செய்யும் பெத்திக்கு (ராம் சரண்) விளையாட்டிலும் ஆர்வம். 

பொப்பிலி, விஜயநகரம் என்று என்று ஊர்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பொப்பிலி சார்பாக பெத்தி அற்புதமாக ஆடுவான் . ஆனாலும் தாழ்ந்த சாதி  என்ற அவமானங்கள் தொடரும். அவன் நன்றாக ஆடினால் அவன் பெயர் வாங்குவதா என்று அவன் அணி ஆட்கள் வேண்டும் என்றே மோசமாக விளையாடி  தோற்றுப் போவார்கள். தவிர அவனுக்கு சம்பளமும் ஒரு ரூபாய் தான். அதற்குப் பெயர் ஆட்டக் கூலி. 

பெத்தி எப்படியாவது கிரிக்கெட்டில் பெரிய ஆளாகி நாட்டுக்காக விளையாடி  ஒரு தனி அடையாளம் பெற்று,  ஊரில் ரயில்களை நிற்க வைத்து ஊரை முன்னேற்றி அந்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட  வேண்டும் என்பது,  பெத்தி,  அப்பல  சூரி இருவரின் வாழ்நாள்  கனவு. 

கிரிக்கெட்டில்  முன்னேற  தீண்டாமை மறுக்கிறது.  தான் நன்றாக விளையாடினாலும் மற்றவர்கள் வேண்டும் என்றே தோற்பதால் பலனில்லை.      

எனவே கவுர் நாயுடு ( ஜெகபதி பாபு) என்ற குஸ்தி வாத்தியாரிடம் குஸ்தி கற்று  முன்னேறுகிறான்.  அங்கே பெத்தியால் தோற்கடிக்கப்பட்ட நபர்,  பெத்தியின் கால்களை உ உடைத்து அவன் முன்னேற்றத்தை தடுக்கிறான். 

மனம் தளராத பெத்தி  மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயத்தில் இறங்குகிறான். அங்கும் அவனுக்கு எதிரான சதிகள். 

பெத்திக்கு வெற்றி கிடைத்ததா? அடையாளம் கிடைத்ததா? அந்த ஊரில் ரயில்கள் நின்றதா? அந்த ஊர் இந்தியாவுடன்  ‘இணைக்க’ப்பட்டதா”? என்பதே பெத்தி 

அட்டகாசமான அருமையான அற்புதமான நெகிழ வைக்கும் கதை .

எவ்வளவுதான் திறமை, அறிவு , ஆற்றல், உழைப்பு எல்லாம் இருந்தாலும் தீண்டாமையும் சாதியத் தடையும்  எளிய மக்களை என்ன எல்லாம் செய்யும் என்று சொல்லும் படம் இது.
பொதுவாக தெலுங்குப் படங்கள் எல்லாம் வட இந்தியாவுக்கு காவடி தூக்கி ஜால்ரா போடும்  இந்தக் காலத்தில் வட இந்திய ஏகாதிபத்தியத்தை இந்தப் படம் கேள்வி கேட்கிறது. ஒரு  வகையில் இட  ஒதுக்கீட்டின் அவசியத்தை சொல்லும் படம் இது. 

ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் புச்சி பாபு சனா. வாய் பிளக்க வைக்கும் உழைப்பு. 

கிரிக்கெட்டில் எதிர் எதிராக ஆட  வேண்டிய இரண்டு அணிகளும் சேர்ந்து,  தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக பெத்தியை வீழ்த்துவது, அப்பல சூரியின்   போராட்டம்,  டெல்லியில் பெத்தி படும் கஷ்டங்கள். என்று பல பகுதிகள் உணர்ச்சி வசப்படவும் நெகிழவும் வைக்கின்றன. 

ஒரு நடிகனால் ஒரே படத்துக்காக, கிரிக்கெட்டர், மல்யுத்த வீரன். கால் இழந்த ஓட்டப்பந்தய வீரன் என்று மாற முடியமா? முடியும் என்று நிரூபித்து உள்ளார் ராம் சரண். பிரம்மிக்க வைக்கும் உழைப்பு நடிப்பு 

கதை நிகழும் இடத்துக்கு நம்மையும் கூட்டிப் போகிறது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. 

பாடல்கள் கொஞ்சம் பல்லிளித்தாலும் பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

நவீன் நூலியின் படத் தொகுப்பும் ஓகே . 

அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பு  பாராட்டுக்குரியது.

கதாநாயகி என்று படத்துக்கு ஒருவர் வேண்டும் என்பதால் இந்தப் படத்துக்குள் தேவையே இல்லாமல் வரும் ஜான்வி கபூர் நிறைய  கவர்ச்சி கொஞ்சம் கண்ணீர் என்று ஜஸ்ட்  கடந்து போகிறார்.  

குஸ்தி வாத்தியாராக சிவராஜ் குமார் கம்பீரம். 

இப்படி பெரிய கேரக்டர்களை அவர்களே பகிர்ந்து கொண்டு , ஜான் விஜய்,போன்ற தமிழ் நடிகர்களுக்கு துண்டு துக்கடா கேரக்டர்களை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். ஆடுகளம் நரேன் பெயர் எல்லாம் டைட்டிலில் இருக்கிறது. படத்தில் இல்லை.மலைக்காட்டுக்குள் காணா போச். 

சுருதிஹாசன் ஒரு பாட்டுக்கு நடனமாடிப் போகிறார்.

பல நல்ல விஷயங்கள் இருந்தும் அதீத   நீளம் , கதாநாயகி கேரக்டர் போன்ற பல தேவையற்ற திணிப்புகள், ஒவ்வொரு விஷயமும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது ,  படத்தை நறுக்கென முடிக்காமல் இழுப்பது, பெரிதாக கனம் தராத கிளைமாக்ஸ் போன்றவற்றால்… 

பெத்தி  ஆகிவிட்டது.  கொஞ்சம்   ‘சின்னதி’   

பேசாமல் தமிழ் பாதிப்புக்கு பெருசு , தல என்று பெயர் வைத்து இருக்கலாம் . பெத்தி என்றேதான் பெரு வைக்கணுமா?

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *