பேட்டரி @ விமர்சனம்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி. மாதையன் தயாரிக்க,  செங்குட்டுவன் , அம்மு அபிராமி, எம் எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், யோக் ஜேபி நடிப்பில் மணிபாரதி இயக்கி இருக்கும் படம். 

வாக்கிங் போகும் ஒரு பெரியவர் மார்பில் வலி வந்து விழுந்து இறக்கிறார் .
 
மார்புப் பகுதியில் சுடப்பட்டு சில கொலைகள் நிகழ்கின்றன. சுடப்பட்ட புல்லட் முதுகுப் பகுதியில் துளைத்துக் கொண்டு வெளியே வந்ததற்கான அடையாளம் இல்லை. 
 
விசாரணையில்  இருக்கும்  இன்ஸ்பெக்டர் (யோக ஜேபி) , புதிதாக பணியில் சேர்ந்து ஆர்வமுடன்  செயல்பட்டு  குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முயலும் இளம் அதிகாரியை ( நாயகன் செங்குட்டுவன்)  சரியாகப் பணியாற்ற விடாமல் தடுக்கிறார். 
 
ஒரு இளம் பெண் (அம்மு அபிராமி) இதய நோயால் பாதிக்கப்பட்டு குணமான சிலரைத் தேடி அலைகிறார் 
 
இளம் அதிகாருக்கும் இளம் பெண்ணுக்கும் காதல் . 
 
கொலைகளும் காரணங்களும் என்ன .. அதன் பின்னணியில் உள்ள குற்றம் என்ன என்பதே பேட்டரி . இதய நோயாளிகளுக்கு பேஸ் மேக்கர் பொருத்துவது சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தை வித்தாகக் கொண்டு கதை பண்ணி  இருக்கிறார்கள் . 
 
ரவிவர்மா பச்சையப்பனின் திரைக்கதையில் ஐஸ் புல்லட் , எலும்பு புல்லட் என்று  சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு . நடந்த குற்றத்தை நடித்துப் பார்த்து குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் விதமும் அபாரம் . 
 
 இரண்டு டம்ளரில் இரண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு ஒவ்வொரு டம்ளரிலும்  உள்ள ஒரு ஸ்ட்ராவை ஒரே நேரத்தில் உறிஞ்சி இரண்டு டம்ளரில் உள்ள வெவ்வேறு பானங்களை ஒரே நேரத்தில் குடிக்கும் ஐடியா அசந்தர்ப்பமாக வந்தாலும் அடடே. 
 
லிஃப்ட்டில் ஐஸ் கிரீம் சிதறி விழுந்து உருகி ஓடிக் கொண்டு இருக்க , அங்கே இருக்கும்  போலீசிடம் போனில் பேசும் கொலைகாரன் , “இந்த லிஃப்ட் இப்போ அறுந்து விழுந்தா நீ என்ன ஆவ தெரியுமா ?” என்று கேட்கும்போது,  அந்த ஐஸ்கிரீமை காட்டுவது…  போன்ற ஒரு சில இடங்களில் டைரக்ஷன் ‘டச்’களால் கவர்கிறார் இயக்குனர் மணிபாரதி 
 
படத்தின் பலம் இவையே . வசனங்களில் கூர்மையும் ஈர்ப்பும் இல்லை.  ஹீரோவே தயாரிப்பாளர் என்பதால் மேக்கப் தூக்கலாகப் போட்டுக் கொண்டார் போல . அம்மு அபிராமி ஒகே. பல நடிகர்கள் செயற்கை நடிப்பு , வசன உச்சரிப்பு , தவறான தொனி இவற்றால் படுத்தி எடுக்கிறார்கள் . இதனால்  பல காட்சிகள் நேர விரயமாக மாறுகின்றன. 
 
கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவும் சித்தார்த் விபினின் இசையும் பழுதில்லை . 
 
படத்தின் முக்கிய விழிப்புணர்ச்சி விசயமாக சொல்லப்படும் தகவலின்  விளைவு, வீரியமான  காட்சிகளால் விஷுவலாக அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும். இந்தப் படமே அதற்குத்தான். அப்படி இருக்க  அதை  நடந்த விசயத்துக்கான விளக்கமாக மட்டும் உரையாடலில் கடத்தி  விட்டுப் போவது அதிர்ச்சி.
 
பேட்டரி ….. டெலிவரியின் போதே சார்ஜ் கம்மி 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *