தீபக்குமார் தயாரிப்பில் இருவேடம் ரிஷி , கரீனா ஷா, சிங்கமுத்து , ஆதேஷ் பாலா நடிப்பில் கோ. ஆனந்த் குமார் இயக்கி இருக்கும் படம் .
குடும்பப்பாங்கான தோற்றம் மற்றும் இயல்பான அழகுடன் கூடிய மனைவியைக் கொண்ட ஒரு கிராமத்துப் பெரியதனக்காரர் (மூத்த ரிஷி) கவர்ச்சிகரமான அழகுடன் கூடிய ஒரு பெண்ணை மணக்கிறார்.
இரண்டாம் மனைவியின் கொடுமைகளால் முதல் மனைவி இறந்து பல விதங்களில் பாதிக்கப்பட்ட அவர், தன் சிறு வயது மகனிடம், அழகான பெண்ணை மணக்காதே . வெளியே தன் முகத்தைக் காட்டவே கூச்சப்படும் ஒரு நல்ல பெண்ணாக பார்த்து மணந்து கொள்’ என்று கூறிவிட்டு செத்துப் போகிறார் .
வளர்ந்து வங்கியில் மேனேஜராக இருக்கும் அவன் (இளைய ரிஷி) தன் முகத்திலும் அழகு முக்கியமாக இருக்கக் கூடாது என்பதால் சிறு வயதில் ஏற்பட்ட காயத்தை மீண்டும் மீண்டும் கீறி தொடர்ந்து காயமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் . உடம்பை, அழகைக் காட்டி காரியம் சாதிக்க முயலும் பெண்களைக் கண்டித்து திருத்துகிறார்.
இந்த நிலையில் முகத்தில் நீண்ட தடிப்பான கறுப்புத் தழும்புகள் கொண்ட ஒரு பெண்ணை (கரீனா ஷா) சந்தித்து காதலிக்கிறார் . வேலை நிமித்தம் காதலனை தற்காலிகமாக பிரியும் அவள், அவனுக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக எண்ணி வருகிறாள்.
ஆனால் அவள் தழும்பு நீங்கி அழகானதைப் பொறுக்க முடியாத காதலன் மீண்டும் அவள் முகத்தைக் காயப்படுத்தி அசிங்கமாக மாற்ற ரகசியமாக முயல என்ன நடந்தது என்பதே இந்தப் படம்.
சற்றே பக்குவமின்மை தெரிந்தாலும் , இது சொல்லப்பட வேண்டிய கதையா என்ற கேள்வி எழுந்தாலும். இன்னொரு பக்கம் வித்தியாசமான கதை என்பதை மறுப்பதற்கு இல்லை . அதற்கேற்ற கிளைமாக்ஸ் பாராட்டவும் வைக்கிறது
ஆனால் படம் முழுக்க இயல்பாக நடிக்கத் தெரியாதவர்கள் , அல்லது எரிச்சல் ஊட்டும்படி நடிப்பவர்களால் நிரம்பி வழிகிறது . இயக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்களும் நேர்த்தியாக இல்லை.
படத்தின் வண்ணமயமான டைட்டில் அழகு. பாராட்டுக்குரிய கலை இயக்கம். பாடல்கள் பரவாயில்லை ரகம்
சிறப்பான படமாக்கல், திரைக்கதை, கலைஞர்கள் பங்களிப்பு எல்லாம் இருந்திருந்தால் படம் கவனிக்க வைத்திருக்கும்