சிஜு தமீன்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சிஜு தமீன்ஸ் தயாரிக்க, வெற்றி, ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர் என் ஆர் மனோகர், பார்வதி, டயானா நடிப்பில் அஜயன் பாலா வசனத்தில் விபின் கிருஷ்ணனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, ஸ்யாம்- பிரவீன் இரட்டையர்கள் இயக்கி இருக்கும் படம்.
நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஒரு நபர் ( வெற்றி) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் நண்பனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்று சொல்லத் துவங்குகிறார். ஆனால் திரையில் அவரே ஒரு மருத்துவமனையில் இருந்து எழுந்து , நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு, என்ன செய்வதென்று புரியாமல் ஓட, அவரை போலீஸ் துரத்துகிறது . நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர் ( ரமேஷ் திலக்) அவருக்கு உதவுகிறார் .
அவர் மூலம் தான் ஒரு திரைப்பட உதவி இயக்குனர் என்பதாகவும், படம் இயக்க ஒரு நல்ல தயாரிப்பாளரைப் பெறும் முயற்சியில் இருந்ததாகவும் , தனக்கு ஒரு காதலி (பார்வதி) இருந்ததாகவும் , அவளுக்கு இருபது லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டதாகவும் , அதைப் பெற ஒரு பணக்காரர் ( ஆர் என் மனோகர்) சொற்படி பணக்காரர் மனைவியைக் கொலை செய்ய ஒத்துக் கொண்டதாகவும் , கொலை செய்து விட்டு கிளம்புகையில் பக்கத்து ரூமில் கேட்கும் பெண் குரல் தெரிந்த நபர் போல இருக்க, உள்ளே போனால் பணம் கேட்ட காதலியே பணக்காரரின் மகளாக இருக்க, அவர் ஒரு கள்ளக் காதலனோடு இருக்க, இருவரையும் கொன்று விட்டதாகவும் சொல்லப்பட, மேற்படி பணக்காரார் வந்து , “என் மகளை ஏன் கொன்றாய்?” என்று இவனைக் கொல்ல வர,
யார், எது, எங்கே , என்ன , எவ்வாறு, எப்படி, எதனால், எதன் மூலம், எதற்காக , எந்த நிலையில் , என்ன பயத்தில் , யாருக்கு, யாரால் ……. என்பதே இந்தப் படம் .
படத்தில் முதலில் கவர்வது கவாஸ்கர் அவினாஷின் இசை. டைட்டில் முதலே அவர் ராஜ்ஜியம்.
அடுத்து லொக்கேஷன். அதை அள்ளிக் கொடுக்கும் அர்மோன், மற்றும் கிரண் நுபிடால் இருவரின் அற்புதமான ஒளிப்பதிவு. அதுவும் காதலி நாயகனிடம் பணம் கேட்கும் காட்சியில் முன்னால் தண்ணீர் தொட்டி போன்ற ஒரு சிறிய கட்டுமானம் தெரிய, பின்னணியில் நீல வானம் தெரியும் ஒரு ஷாட் அட்டகாசம். துரத்தில் காட்சியில் மரங்களின் கிளைகளைத தொட்டு பாய்ந்து ஓடும் கேமரா .. ஆகா அபாரம்.
வெற்றி அவரது இயல்பில் நடித்துள்ளார் .
கொஞ்ச காட்சிகளே என்றாலும் பார்வதி அழகு . முதல் நொடி கண்டிப்பான தோற்றம் போல காணப்படும் அவர் முகம் அடுத்த நொடி கனிவாகத் தெரிகிற மேஜிக் அருமை .
நாயகனின் காதலைப் புறக்கணிக்கும் டாக்டராக வரும் டயானா கவர்ச்சிகரமான அழகில் கவர்கிறார் . திரையில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அருமை .
ஆரம்பத்தில் அடுத்ததடுத்து வரும் சுவாரஸ்யங்கள் கமலின் வெற்றி விழா, சூர்யாவின் கஜினி மாதிரி ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று நம்பிக்கையைத் தந்தது .
ஆனால் ஒரு நிலையில் எல்லாருக்குள்ளும் எல்லாமும் இருக்கும் காட்சிகள் வரும்போது படம் பார்க்கும் நாம் பின்வரும் நிலைக்கு ஆளாகிறோம் . (மியூட்டில் போட்டு பார்க்கவும்)
போராடி காப்பாற்ற முயன்றும் ஒரு நிலையில் பரிதாபமாகத் தோற்கிறார் எடிட்டர் சான் லோகேஷ்
படம் பார்க்க வருபவர்கள் மீது கொலை வெறி கொண்டு டுவிஸ்டுகள் அமைத்து எழுதிய வன்மம் தெரிகிறது சாமிகளா…
கொரோனா காலத்தில் எழுதப்பட்ட கதை என்கிறார்கள். கொரோனாவால் இன்னும் என்னென்ன பின் விளைவுகள் இருக்கிறதோ..!
எனினும் .. வித்தியாசமான முயற்சி