டக்கர் @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம்  தயாரிக்க, சித்தார்த் , திவ்யான்ஷா கௌஷிக், யோகிபாபு, அபிமன்யு சிங் , விக்னேஷ்காந்த் , முனீஷ்காந்த் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கி இருக்கும் படம். 

எப்படியாவது பணக்காரன் ஆகி விடவேண்டும் என்று வெறி  கொண்டு திரியும் ஓர் இளைஞன்(சித்தார்த்) ஒரு கொடுமைக்கார கால் டாக்சி நிறுவன ஓனரின் கம்பெனியில் கால் டாக்சி ஓட்டுகையில் , ஒரு பெண் கடத்தல் கும்பலுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு உதவுகிறான் .
 
அவன் உதவியைப் பெற்றுக் கொண்ட கடத்தல்காரர்கள் அவனை ஏமாற்ற அந்த சண்டையில் கால் டாக்சி சேதமாகிறது . கால் டாக்சி ஓனர் அடித்துத் துவைப்பதோடு டாக்சி சேதத்துக்கான நஷ்ட ஈடாக அடுத்த ஏழு வருடம்  சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொள்கிறார் . தற்கொலைக்கு முயலும் அவன் , எதிர்பாராத விதமாக தன்னை ஏமாற்றிய கடத்தல்காரர்களை பார்க்கிறான். அவர்களை அடித்து உதைத்து அவன் முதலாளியின் காரையே கடத்த,  காருக்குள் அவனுக்கு முன்பே தெரிந்த ஓர் இளம்பெண் (திவ்யான்ஷா கௌஷிக்). அப்பா தனது பிசினஸ் வளர்ச்சிக்காக அவளுக்குப் பிடிக்காத ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க முயல , அதை  வெறுக்கும் பெண். இன்னொரு பக்கம் சிகரெட் , மது , போதை பவுடர்கள் என்று சகலமும் உபயோகிக்கும் பழக்கம் உள்ளவள் .
 
இருவரும் மனம் போன போக்கில் காரில் பயணிக்க, கால் டாக்சி ஓனரும் கடத்தல் கும்பல் தலைவனும் (அபிமன்யு சிங்) இருவரையும் தேட,  அப்புறம் நடக்கும் சம்பவங்களே படம். 
 
கார்த்திக் ஜி கிரிஷ்ஷின் படமாக்கல் சிறப்பாக இருக்கிறது பெண்ணைக் கடத்தி வைத்துக் கொண்டு கடத்தல்காரன், அவளுக்கு ஆசைப்படும் பணக்காரன், பெண்ணின் தந்தை இருவரிடமும் ஒரே நேரத்தில் ஏலம் விடும் பாணியில் பண பேரம் பேசுவது போன்ற வித்தியாசமான காட்சிகளும் உண்டு . சேஸிங் காட்சிகளை அட்டகாசமாக எடுத்து இருக்கிறார்கள் . ”உயிர் போயிடும்கற பயம் போயிட்டா மனுஷன் என்ன வேண்ணா செய்யலாம்” போன்ற வசனங்களும்  கவனிக்க வைக்கின்றன.
யோகி பாபு விக்னேஷ் காந்த் மட்டுமல்லாது கடத்தல் அடியாட்கள் மூலமும் அவ்வப்போது புன்னகைக்க வைக்கும் காமெடிகள் வருகின்றன. 
 
படத்தின் ஆகப் பெரும் பலம் நிவாஸ் பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் . பாடல்கள் இனிமையும் நிறைவுமாக வழிந்தால்  பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து உயிரூட்டுகிறது  
 
வாஞ்சி நாதன் முருகேசனின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் கவிதை.  ஒவ்வொரு பிரேமும் அவ்வளவு அழகு.  தினேஷ் காசியின் ஆக்ஷன் காட்சிகள் அதகளம் . படத்தில் அவை தனித்துத் தெரிகின்றன. உதயகுமாரின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது. ஜி வி கௌதமின் படத் தொகுப்பும் மிக சிறப்பு 
அந்த சாக்லேட் (பாய்)  பேப்பரை சுருட்டி கடாசி விட்டு முதல் முறையாக கரடு முரடான பாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் சித்தார்த் . அதுவும் அந்த கால் டாக்சி  ஓனரை அடித்து வீழ்த்தி  விட்டு  லாங் ஷட்டில் ஸ்லோ மோஷனில் நடக்கும் ஒரு நடை மாஸ். 
 
திரையில் அவ்வளவு அழகாக இருக்கிறார் திவ்யான்ஷா கௌஷிக். ”உடம்புக்கு மேலேதான் தோல் போத்தி இருக்கே ? அதுக்கு மேலே ட்ரெஸ் எதுக்கு?” என்று  சொல்லி நம்ப வைத்து  நடிக்க வைத்து இருக்கிறார்கள் அவரை . சென்சாரே பல இடங்களில் நடு நடுங்கி டிஜிட்டல் ரப்பர் வைத்து அவர் உடல் பாகங்களை அழித்து மறைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
கதையில் புதுமை சிரத்தை என்று எதுவும் இல்லை என்றாலும் முதல்பாதி சரியான காட்சித் தொகுப்புகளால் நன்றாக இருக்கிறது , இது போன்ற கதைகளுக்கு திரைக்கதைதான் முக்கியம் என்ற நிலையில் இரண்டாம் பகுதியில் நாயகன் நாயகி இருவரும் எப்படி மனம் போன போக்கில் காரில் போகிறார்களோ திரைக்கதையும் அப்படியே திரிகிறது . 
கடைசி அரைமணி நேரக் காட்சிகளை எல்லாம் இதுவரை ஆயிரம் படங்களில் பாத்தாச்சு. 
 
ஒன்று அரைத்த மாவையே அரைக்கிறார்கள். அல்லது செக்சுக்கு பிறகு காதல் வருகிறது என்பது போன்ற காட்சிகளை சமைக்கிறார்கள் . 
 
கல்யாணக் கோலத்தில் வந்து தேர்வு எழுதும் பெண்களை செய்திகளில் பார்க்கிற நமக்கு கல்யாண கோலத்தில் சிகரெட் பிடிக்கும் பெண்ணைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் கிரிஷ்  . ”ரூம் போடு. செக்ஸ் வேணா பண்ணிக்கோ . ஆனா லவ் எல்லாம் வேணாம்” என்று  நாயகி பேசும் வசனம் எல்லாம் மா… மாபெரும் சமூக சேவை!  ஏதோ இயக்குனரால்  முடிஞ்சது 
தமிழ்நாட்டில் எங்காவது அப்படி ஒரு கொடுமைக்கார அயல்நாட்டைச் சேர்ந்த – நூடுல்ஸ் சாப்பிடுகிற – கால் டாக்சி ஓனரை யாராவது பார்த்தால் சொல்லவும்.  எக்சிபிஷனில் வைக்கணும்  
 
மொத்தத்தில் டக்கர்…..
 
இரண்டாம் பகுதி திரைக்கதையில் இன்னும் ஒரு கியர் போட்டு தூக்கி இருந்தால் நாமும் டக்கர் என்று சொல்லி இருக்கலாம். 
 
ஆனால்  ‘டக்’ கும் இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *