பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக் களத்தில் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றிக் குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, டைரக்டர் லஷ்மண், இமான், வி.டி.வி.கணேஷ் ஆகியோரின் கூட்டணியில்
‘போகன்’ படத்தை மிகப் பிரமாண்டமான செலவில் தயாரித்துள்ளது பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம். இதில் ஜெயம் ரவி டபுள் ஆக்ட்டாக ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
இதேபோல் அரவிந்த்சாமியும் ஹீரோ – வில்லன் என இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒரே வேடம்தான். ஆனால் இரு, வேறு குணாதிசயங்களை வெளிக்கொணரும் வேடங்கள் இருவருக்கும்.
நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ், ‘ஆடுகளம்’ நரேன், அஸ்வின், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று அதாவது நாளை மறுநாள் உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் லஷ்மண் பேசும்போது, “ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் படம் இது. ஆனாலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும்.
காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும்.‘நாம் பார்க்கும் அனைத்தும் பார்ப்பதை போலவே இருக்காது….’ என்ற கருத்தை உணர்த்துகிறது இந்தப் படம்.
இந்த படத்துக்கான ‘டமால் டுமீல்’ பாடல் சமீபத்தில் யு டியூபில் வெளியிடப்பட்டபோது மிகக் குறைந்த கால அவகாசத்தில் லட்சணக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது.
அதேபோல், ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் ‘போகன்’ படத்தின் டீசர், மிகக் குறுகிய காலத்தில் 10 லட்சம் ரசிகர்களை சென்றடைந்தது
‘இந்த பூனை தெரியுமா… முத்து செய்த பெட்டியில்…’ என்று ஜெயம் ரவியும் – அரவிந்த் சுவாமியும் போதையில் பாடும் பாட்டோடு நிறைவு பெறும் ‘போகன்’ படத்தின் டீசர், ஒரு மர்ம முடிச்சை போட்டிருக்கிறது…!
‘வஞ்சிகோட்டை வாலிபன்’ படத்தின் ஜெமினி கணேசன் – பி.எஸ்.வீரப்பா – பத்மினி ஆகியோரை நினைவு கூறச் செய்யும் வகையில் இந்தப் படத்தின் போஸ்டர்களில்
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்ஸிகா மோத்வானி ஆகியோரின் புகைப்படம் பதிவாகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
‘யார் இந்த ‘போகன்’ என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அது ஜெயம் ரவியாக இருக்கலாம்; அல்லது அரவிந்த் சுவாமியாக இருக்கலாம்…
ஏன் ஹன்சிகாவாகக்கூட இருக்கலாம்…. ‘போகன்’ யார் என்பதை ரசிகர்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்வார்கள்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் லக்ஷ்மன்.




