பாம் (BOMB)@ விமர்சனம்.

கெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் , சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, மற்றும் பலர் நடிக்க, மணிகண்டன் மாதவன்,  அபிஷேக் சபரிகிரீசன் கதை திரைக்கதையில் விஷால் வெங்கட் இயக்கி இருக்கும் படம் .

ஆதிக்க சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வாழும் அருகருகான இரண்டு கிராமங்கள் . பாலம், குடிநீர் என்று அரசுத் திட்டங்களை நிறைவேற்ற இரண்டு ஊரின் ஒத்துழைப்பும் தேவை . 

ஆனால் சாதி ஆதிக்க உணர்வு காரணமாக ‘நமக்கு நல்லது நடக்காட்டியும் பரவால்ல ‘ என்று சாதி கெத்தில் வாழும் ஆதிக்க சாதி. அதை தடுக்க முடியாமல் தவிக்கும் தாழ்த்தப்பட்ட சாதி ஊர். 

எதற்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் சட்சட்என்று கைநீட்டுவதும் , நியாயம் என்றாலும் எதிர்க்க முடியாமல் இவர்கள் கெஞ்சி தன்மையாக பேசிக் கொண்டு கோபப் படாமல் இருப்பதும் அங்கே சராசரி நிகழ்வுகள் 

ஊருக்கு நல்லது செய்ய வந்த கலெக்டரின் (அபிராமி) சிறிய நியாமான செயலையே தப்பாகப் பார்த்து,  சாதி வெறியைக் காட்டி பிரச்னையை வளர்த்து அவரையே தெறிக்க ஓட வைக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவனுக்கும் ( அர்ஜுன் தாஸ்) முற்போக்கு எண்ணமும் –  மனிதர் எல்லோரும் சமம் என்று அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களோடு அன்பாகப் பழகி , ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு தொடர்ந்து மனு போடும் ஆதிக்க சாதி கிராம நபர் ஒருவனுக்கும் (காளி வெங்கட்) ஆழமும் அர்த்தமும் பொதிந்த – யாராலும் உடைக்க முடியாத நட்பு. 

முற்போக்கு இளைஞனின் தங்கைக்கும் ( சிவாத்மிகா) தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும் பரிச்சயத்துக்கு மேலான புரிதல்.

”இந்த ஊரில் இருக்கும் வரை நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதிதான் . வா நாம ஊரை விட்டே போய்விடலாம் ‘ என்கிறான் தாழ்த்தப்பட்ட நாயகன். 

”இந்த  ஊரில் இருந்து இரண்டு ஊரையும் ஒன்றுபடுத்தி நல்லது நடக்க வைத்து விட்டு இந்த மண்ணில்தான் சாவேன் . நீயும் இங்கேதான் இருக்க வேண்டும்” என்கிறான் முற்போக்கு இளைஞன் . 

‘ஆனால் எந்த நல்லது செய்ய நினைத்தாலும் நம்ம ஆட்களின் சாதி வெறி அதை தடுக்குதே’ என்ற விரக்தியில் அவனுக்கு அதீத குடிப் பழக்கமும் , அடிக்கடி பின் புறமாக சத்தமாக வாயு வெளியேறும் உடல் நிலையும் உண்டு . 

‘இந்த சாதி வெறி மண்ணில் ஊரில் என் பிள்ளை  பிறப்பதை விட, நான் மலடியாவே  இருந்துக்கிறேன்’ என்று நினைக்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண், 

ஆதிக்க சாதி பாட்டி ஒருவர் மீது (குலப்புள்ளி லீலா)ஆத்தா என்ற  பாசம் இருந்தாலும் , அவரது மகனின் சாதி வெறி நடவடிக்கைகளால் அந்தப் பாட்டியை தவிர்க்கும்- மலடாக இருக்கவே நினைக்கும் பெண்ணின் கணவனான –  ஒரு  தாழ்த்தப்பட்ட இளைஞன் ….

என்று திரைக்கதை நிறைய கேரக்டர்கள். 

தாழ்த்தப்பட்ட ஊர் சிறுவன் ஒருவன் தூக்கத்தில் நடக்கும் வியாதியில் ஆதிக்க சாதி ஊர் சென்று, அந்த ஊரின் சாதிப் பெருமை நாற்காலியில் கால் வைத்து உறங்கி விட , அரசுக் கட்டிலில் உறங்கிய மோசிக்கீரனாருக்கு கவரி வீசி நின்ற சேர மண்ணின் மரபில் வந்த கூட்டம்,  இப்போது நேர் மாறாக  ஒன்று செய்கிறது 

ஆதிக்க சாதியால் கொடூரமாக தாக்கப்படும் சிறுவன் காலில் கொடும்  சூடு வைக்கப்படுகிறான் .  தடுக்கப் போன முற்போக்கு இளைஞனுக்கும் ஆதிக்க சாதி ஆட்களாலேயே அடி உதை. 

முற்போக்கு இளைஞனின் நடவடிக்கைகளை புரிந்து கொண்ட கலெக்டர் ஊருக்கு உதவ நினைக்க, ‘அப்படி நடந்து விட்டால் சாதி கெத்து போய்விடும்’  என்று எண்ணும் ஆதிக்க சாதி தலைவர் (சிங்கம் புலி) , அவரது மகன் (ராட்சஷன் சரவணன்), 

 வன்முறையை வளர்த்து அதில் சுயலாப கட்சிலாப மீன் பிடிக்க நினைக்கும் அரசியல்வாதி (நாசர்) ஆகியோர்…
 ஆதிக்க சாதி இளைஞனை கொன்று பழியை தாழ்த்தப்பட்ட ஊர் மீது போட்டு, சாதிப் பிரச்னையை வளர்க்க திட்டமிடுகிறார்கள் . 

இந்த நிலையில் குடிபோதையில் முற்போக்கு இளைஞன் மயங்கி செத்து விட, அவன் உடலில் இருந்து பின்புறமாக தொடர்ந்து வாயு  சத்தமாக – உடல் குலுங்க அடிக்கடி  பிரிய, அவன் மரணம் அடைந்து விட்டான் என்று சிலரும் , இல்லை என்று நண்பனும நினைக்க,  குழப்பம். 

இந்த நிலையில் இறந்த நபரின் உடலை எத்தனை பேர் சேர்ந்தாலும் தூக்க முடியவில்லை – தாழ்த்தப்பட்ட நண்பனைத் தவிர !  அவன் கூட எப்போது எதற்காக எந்த நோக்கத்தில் பாடியை தூக்க முடியும் – தூக்க முடியாது என்ற நிலைமை. 

சாதி வெறியில் அடித்துக் கொண்டாலும்  இரண்டு தரப்புக்கும் சாமி, குல தெய்வ பக்தி அதிகம்.

ஊரில் திருவிழா துவங்கும் நேரத்தில் சாவு விழ , தீட்டு என்று சொல்லி  முற்போக்கு இளைஞன் உடலை ஊருக்கு வெளியே வைக்க சொல்கிறது   ஆதிக்க சாதி . 

பிணத்தை தனது ஊருக்கு கொண்டு போய் சடங்கு செய்ய தாழ்த்தப்பட்ட இளைஞன் நினைக்க , ”என்ன இருந்தாலும் அவன் அந்த சாதிக்காரன்தானே நமக்கும் திருவிழா தீட்டு முக்கியம்” என்கிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் . 

வேறு வழியின்றி நண்பனின் பிணத்தோடு தாழ்த்தப்பட்ட ஊர் நாயகனும் , இறந்தவனின் தங்கையும் அந்த ஊருக்கும் வெளியே பிணத்தோடு அனாதையாக உட்கார , 

முற்போக்கு இளைஞன் காட்டிய அன்பை -செய்த உதவிகளை நினைத்துப் பார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் , முற்போக்கு இளைஞன் உடலுக்கு மரியாதை செய்கிறது . 

தொடர்ந்து பாடியை தூக்குவது முடியாமல் போவது என்று ;மேஜிக்கல் ரியலிசம்’  தொடர , முன்னோர்கள் கூறிய சாமி வரும் பாடல் இப்போது நடந்து விட்டதாக எண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆதிக்க சாதி மக்களும் முற்போக்கு இளைஞனின் உடலை குல சாமியாக பார்க்கிறார்கள் . 

அது ஒரு இயல்பான குடிபோதை மரணம்தான் என்று ஆதிக்க சாதியும் அரசியல்வாதியும் நிரூபித்து இந்த ஒற்றுமையை தடுக்க முயல, செத்துப் போன அண்ணனை அப்படியே சாமியாக்கி ஊர்களை ஒற்றுமையாக்க , அவனது தங்கை நினைக்கிறாள். அண்ணன் செத்து விட்டான் என்பதை நண்பனுக்கு புரிய வைத்து ” நான் சொல்வதுதான் நல்ல  தீர்வு ”என்கிறாள். அவனும் ஏற்க , 

நடந்தது என்ன?  ஜெயித்தது யார்? ஏன் ? எப்படி என்பதே படம் . 

‘கும்பிடறேன் சாமி’ என்ற வார்த்தைதான் ஆதிக்க சாதியின் சாதி கெத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் தாழ்த்தப்பட்டதை ஒத்துக் கொள்ளும் உணர்வுக்குமான ஆதி வேர்.. 

ஆனால் ஒரு உயர் சாதி இளைஞனை நிஜமாகவே கும்பிட வேண்டிய சாமி ஆக்கி , அதை அனைத்து சாதி  மக்களும் ஏற்கும் சூழலை உருவாக்கி நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட் . இது அவரது கிரியேட்டிவ் இன்டலிஜென்ஸ் என்று பார்ப்பதும் இன்டலிஜென்ட் அர்ரகன்ஸ் என்பது பார்ப்பவர் பார்வை. 

ஆனால் பொதுப் புத்தியில் மனோதத்துவ ரீதியாகவும் சினிமா டெக்னிக் காகவும் பார்த்தால் ‘ சபாஷ் தம்பி.. உன் செய்கையைப் போற்றுகிறேன்” என்றே இயக்குனர் விஷால் வெங்கட்டைப் பார்த்து சொல்ல வைக்கிறது. 
பரியேறும் பெருமாள் படத்தில் கிளைமாக்சில் மட்டும் பயன்படுத்தப்பட்ட  இந்த – ஆதிக்க சாதியின் மன நசாட்சியைத் தூண்டும் உத்தி இந்தப் படத்தில் பாரிய அளவில் நிறைய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு முக்கிய பலம். 

பிளீஸ் இயக்குனரே ..  நீங்களும் கர்ணன் எடுக்கப் போய் விடாதீர்கள்.  நியாய அநியாயம் என்பதை விட , மேலும் யாரும்  அடித்துக் கொண்டு சாக வைக்க வேண்டாம் . நாம் மன சாட்சியையே தொடர்ந்து தூண்டுவோம் தம்பி . போராளிகளுக்கே இந்த உணர்வு புரியும். போற வர்றவனுக்கு எல்லாம் புரியாது . 

நன்றி உணர்வோடு முற்போக்கு இளைஞன் உடலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் இழவு சிறப்பு செய்ய வரும் காட்சியில் நம்மை அறியாமல் நம் கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் . அசத்திட்டீங்க தம்பிகளா . 

அர்ஜுன்தாசின் குரலை வைத்து,  கொஞ்சம் ஜில் தட்ட வைக்கும் காட்சிகள் அமைத்து இருந்தாலும் அது நல்ல உத்திதான் . 

மிக சிறப்பாக நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ் . நடிப்பு , உடல் மொழிகள், வசன மாடுலேஷன் மற்றும் இடைவெளிகள் என்று சிறப்பான பங்களிப்பு. 

கையாலாகாத முற்போக்கு குடிகார நபராக , இரண்டாம் பகுதி முழுக்க பிணமாக,  சிறப்பாக நடித்துள்ளார் காளி வெங்கட். 

இராட்சன் சரவணன் முகம் காட்டி சிறப்பாக நடித்துள்ளனர் .  மிக இயல்பான நடிகன். சிவாத்மிகா , நாசர் , சிங்கம் புலி, கொளப்புள்ளி லீலா, மற்றும் பலர் சிறப்பான பங்களிப்பு . 

நடிகர் நடிகையரிடம் வேலை வாங்கத் தெரிகிறது இயக்குனருக்கு .  அது முக்கியம்.

கிராமத்து சடங்குகளை சிறப்பாக காட்டி இருக்கிறார் இயக்குனர் . முற்போக்கு நண்பன் தாழ்த்தப்பட்ட இளைஞனிடம்  பேசும்போது டேய் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி சத்தமாக பேசுவான் . இவனோ வாடா போடா என்பதை கம்மியாகப் பயன்படுத்தி மென்மையாக தன்மையாகத்தான் பேசுவான். நெருங்கிய நட்பிலும் கூட சாதி வெறியின் வாசனை இருக்கும் என்று சொல்லும் அந்த டயலாக் உத்தி அபாரம்.

யாருப்பா அது? எங்கிருந்தாலும் வந்து பாராட்டை வாங்கிப் போகவும். 

டி இமானின் இசை ஒகே . 

ராஜ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு நல்ல பெயிண்டிங் மாதிரியான டோ ன் கொடுப்பதோடு , மேஜிக்கல் ரியலிசத்துக்கு ஏற்ற ஒரு தன்மையும்  கொடுத்து , சரியான ஒளிக் கசிவு , இருள் ஆளுமை எல்லாம் சேர்த்து அசத்தி இருக்கிறது. 

மனோஜ் குமாரின் கலை இயக்கம் சிறப்பு. 

கடவுள் பற்றிய அவரவர் புரிதல் பற்றிய பார்வை மேட்டிமை மிக்க எழுத்து.  வசன கர்த்தா மகிழ்னனுக்கு பாராட்டுகள். 

பிரச்னை என்னவென்றால்….

இது ரொம்ப சீரியஸ் – சிந்திக்க வேண்டிய படம். பின்புறம் வாயு பிரியும் மேட்டரை  வைத்து படத்துக்கு பாம் என்று பெயர் வைத்து இதை ஒரு காமெடி படம் போல அதிகமாக சித்தரித்தது சரியான உத்தி இல்லை.  

தவிர  ஒரு நோஞ்சான் கொசு அதீத களைப்பில்,  கடிப்பது போல கிச்சு கிச்சு மூட்டிப் போவது போலவே படத்தில்  காமெடி இருக்கிறது . கொஞ்சம் ஹிஹிஹி..  சில மென் புன்னகைகள் காமெடி என்ற பெயரில் 

படத்தில் நன்றாக வாய் விட்டு சிரிக்கிற –  பம்பார்டிங் அதிரடி ஆன காமெடி என்று எதுவும் இல்லை . நம்மளா பாத்து அப்பப்ப சிரிச்சுக்க வேண்டியது தான்.  இதுக்கு எதுக்கு காமெடி படம்னு ஈயம் பூசுறீங்க?

தியேட்டரிக்கல் காமெடி இன்று இல்லை. ”அரே அல்லா .. தேங்காயில் குருமா வைக்கலாம் . பாம் வைக்கலாமா ?” என்பது போல வெடிச்சிரிப்பு வர வைக்கும் படி எழுத ஆள், இன்றும்  இருக்கிறது . ஆனால் அதை ஏற்கும் இயக்குனர்கள் இல்லை . 

குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு அந்த சென்ஸ் இல்லை. தங்கள் அறிவுக்கு ஏற்றவர்களே அவர்களுக்கு இயக்குநர்களாகத் தெரிகிறார்கள். அது போன்றோருக்குதான் கூப்பிட்டு கூப்பிட்டு வாய்ப்புக் கொடுக்கிறார்கள் . 
அப்புறம் போட்ட பணம் கூட வரல என்று புலம்ப வேண்டியது . 

ஒரு நிலைக்கு  மேல் காட்சிகளை திணித்துக் கொண்டே போய் நீட்டித்துக் கொண்டே போய் ஆடியன்சை களைப்பாக்குகிறார்கள். 

வெயிலில் ரொம்ப நேரம் வேலை செய்ய முடியாது . குறைந்த நேரத்தில் சீக்கிரம் சட்டு புட்டுன்னு செய்யணும் செய்யணும் . கொஞ்சம் நன்றாக கிளைமேட் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இழுக்கலாம் . அதே ஜில் என்று இருந்தால் இன்னும் மேலும் கொஞ்சம் இழுக்கலாம். 

நம்ம கதை வெயிலா, பதமா குளிரா என்ற புரிதல் இயக்குனருக்கு வேண்டும் . சரியான சமயத்தில் ஆடியன்சை அவிழ்த்து விட்டு விட வேண்டும் . சிக்கிட்டான் என்பதால் சிதைக்கக் கூடாது.

இந்த அறிவும் இப்போது பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இல்லை .  பணம் மட்டும் போட்டால் நல்ல படம் வந்து விடாது. காக்கா கூட்டம் தான் வரும். 

என்ன சொல்கிறோம் என்பது போலவே எப்படி சொல்கிறோம் என்ற உத்தியும்  செம்பாதி  முக்கியம் 
இந்தப் படத்திலும்  யாரால் எப்போது எங்கே படத்தை முடிப்பாங்களோ  என்ற பயமும் பதட்டமும் வருகிறது.

ரன்னிங் ரேசில் தயாரான பொசிஷனில் இருக்கும் ஓட்டப்பந்தய வீரன் போல ஆடியன்ஸ் வெளியே போக தயாராக இருக்கும் நிலை. அவன் தப்பாவே இருந்தாலும் நாம அவனுக்குத்தான் படம் எடுக்கறோம். 

பிளாக் காமெடி என்ற பெயரில் செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுப்பது , படத்தின் மிக மெதுவான பாய்வு…  இவை சோதிக்கிறது . 

திரைக்கதை சும்மா கிண்ணென்று இழுத்துக் கட்டப்படவில்லை. 

அன்று போல மக்களுக்கு சினிமா இன்றும் முதல் பொழுது போக்கு இல்லை. கடைசி பொழுது போக்குதான் . 
எனினும் கருத்தியல் ரீதியாக, சமூக அக்கறையாக,  சினிமாவாக , எமோஷனலாக இந்த  வாரத்தில் முதலிடம் பெற்ற படம் பாம்தான் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *