பிளாக் மெயில் @ விமர்சனம்

ஜே டி எஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜூ  அஷ்வினி , ரமேஷ் திலக், முத்துகுமார் , ரெடின் கிங்ஸ்லி, ஹரிப்ரியா இசை நடிக்க மு.மாறன் இயக்கி இருக்கும் படம். 

மகளான சிறுமியின் விருப்பம் முக்கியம் என்பதால்,  பல பெரிய சந்திப்புகளை கேன்சல் செய்துவிட்டு  தொழிலதிபர் அசோக் (ஸ்ரீகாந்த்) மனைவி பிள்ளையோடு காரில் மலை வாசஸ்தலம்  செல்ல, 

எதிரில் காரில் மோதுவது  மாதிரி வந்து செயற்கையாக தன் காரை இடித்துக் கொள்ளும்   நபர் (ரமேஷ் திலக் ) வம்பிழுக்க , பிரச்னை முடிந்து காரில் வந்து பார்த்தால் மகள் காரில் இல்லை.பிரச்சனை செய்தவன் போய் விட,  மகள் கடத்தப்பட்டு இருப்பதாக உணர்கிறது தம்பதி 

நேர்மையாக வாழ்வது இனி பயன் இல்லை என்று நம்பும் இளைஞன் மணி ( ஜி வி பிரகாஷ் குமார்) , மருந்துக் கம்பெனி  என்ற பெயரில் மணி மூலம் பார்சல் பார்சலாக கோகையின் போதைப்பொருள் கடத்தும் முதலாளி (முத்துக் குமார்).  உள்ளே இருப்பது  போதைப் பொருள் என்பது மணிக்கு  தெரியாது . அது போதைப் பொருள் கடத்தல் முதலாளியின் ( முத்துக்குமார் ) ஏமாற்று . முத்து குமாருக்கு ஒரு பேக்கு நண்பன் மற்றும் சலுகை உள்ள ஓர் அடியாள்  ( ரெடின் கிங்ஸ்லி)

மணி அவன் காதலியை(தேஜூ அஷ்வினி) காதல் காலத்திலேயே கர்ப்பமாக்கி விட கஷ்டத்திலும் பிள்ளையைப் பெற்று வளர்க்க அவர்கள் முடிவு செய்கிறார்கள். 

தொழிலதிபர் மனைவிக்கு கல்யாணத்துக்கு முன்னாலேயே,  ஒரு உறவில் இருந்த அயோக்கியன் இப்போது அவளிடம் பெரும் தொகை பணம் கேட்கிறான். கணவனை மீறி அவளால் தர முடியாத நிலை . தராவிட்டால் முன்பு எடுத்த நிர்வாண புகைப்படத்தை நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான். மகள் கடத்தப்பட்ட நிலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுக்க முடிவு செய்தபடி அவனை சமாளித்துக் கொண்டு இருக்கிறாள் மனைவி .. 

முதாளிக்காக மணி கொண்டு போகும் பார்சல் வழியில் தொலைந்து போக, மணியின் கர்ப்பிணிக்  காதலியை கடத்திய முதலாளி ”அந்தப் பார்சலோ அல்லது அதன் மதிப்பான ஐம்பது லட்ச ரூபாயையோ கொடுத்து விட்டு, உன் காதலியை மீட்டுக் கொள்” என்று அவளை கடத்தி விடுகிறான் . அவனுக்கும் மற்றவருக்கும் காதலியை விருந்தாக்கி விடுவான் என்ற நிலை .

மணியின் நெருங்கிய நண்பன் ஒருவன் மலைவாசஸ்தல வழியில் கார் மோதல் நடிப்பின் மூலம் வம்பிழுத்தவன் அவன்தான் . அவன் மனைவி ஒரு நல்ல ஆட்டோ டிரைவர் (தேஜூ) .   

இந்நிலையில் கள்ளக் காதலன்,  தொழில் அதிபரின் மனைவியிடம் ” உன் மகளை கடத்திக் கொடு .அதை வைத்து ரெண்டு கோடி கேட்டு உன் புருஷனை  மிரட்டி பணம் பெற்றுக் கொள்கிறேன் .உனக்கும் பிரச்னை இல்லை.  இல்லை எனில் உன் நிர்வாணம் … இன்டர்நெட்டில் .. ம்ம்ம்ம் ..”என்கிறான். 

மகள் காணமல் போன நிலையில் அந்தக் கடத்தலை முன்னாள் காதலனே செய்து  இருக்கிறான் என்ற சந்தேகம் அவளுக்கு உண்டு . தொழில் அதிபரின் உயர் போலீஸ் அதிகாரி நண்பர் (சாஜி ). குழந்தை கேசை அவர் அன்- அபிஷியலாக விசாரிக்க, 

குழந்தைக்கு என்ன ஆனது ?நடந்தவை என்ன என்பதே படம். 

எல்லாவற்றையும் விட பணமும்  முக்கியம் என்று பெரும்பாலான கேரக்டர்கள் நம்ப , மேலே சொன்ன  கேரக்டர்கள் எல்லாம் ஒவ்வொரு சூழ்நிலையில் என்ன செய்தது என்பதை நல்ல திருப்பங்கள் , சுவையான காட்சிகள்  குறிப்பிட வேண்டிய வசனங்கள் என்று  360 யோசித்து அடர்த்தியாக எழுதி,  நெகிழ வைக்கும் கிளைமாக்சோடு  படத்தை முடிக்கிறார் இயக்குனர் மாறன்  ஓர் இயக்குனராக நல்ல ஷாட்கள் வைக்கிறார். 
அவர் இடத்தில் நின்று பார்த்தால் அட ஆச்சரியப் பட வைக்கிறது  இந்த ஒழுக்கமும் நேர்த்தியும் மாறனைப்  பாராட்ட வைக்கிறது. 

ஆனால் மறுபக்கம் ரசிகன் நிலையில் நின்று பார்த்தால்”  ஏம்பா எல்லாருமே தப்பா-  பொறம்போக்கா இருக்காங்க , திருப்பம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு எல்லா கேரக்டர்களையும் வைத்து யோசித்து யோசித்து நுணுக்கி நுணுக்கி எழுதிக் கொண்டே போகிறீர்கள். நாங்க யாரை எதுக்கு பாலோ பண்றது ? யாரைப் பின்பற்றி படம் பார்ப்பது” ஆடியன்ஸ்  என்ற சலிப்புக்கு ஆளாகிறான் . இடைவேளைக்குப் பிறகு இது அதிகம். 

இயல்பாக ஆரம்பித்து பரபர விறுவிறு என்று சூடேறும் திரைக்கதை இரண்டாம் பகுதியில்  அதீத திருப்பங்கள் ,கேரக்டர்களின் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளால்  சலிப்பை ஏற்படுத்தி சர்ரென்று இறங்கிக் கொண்டே வந்து கிளைமாக்சில் ”ஒகே மாறா..”  என்று சொல்லும்படி இருக்கிறது . 

ஆனால் இன்றைய ஒரு கமர்ஷியல் தியேட்டரிக்கல் வெற்றிப் படத்துக்கு இது மட்டும் போதுமா?

மணி கேரக்டரில் மணியாகப் பொருந்துகிறார் ஜி வி பிரகாஷ். சட்டென்று தடுமாறுவது, திரும்புவது எரிச்சலாவது என்று.. உடல் மொழிகள் அருமை .

முத்துக்குமார், ரெடின் , ரமேஷ் திலக் , தேஜு அஷ்வினி கவனிக்க வைக்கிறார்கள்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு மொக்கை தியேட்டரிலும் கூட நன்றாக இருக்கிறது 

சாம் சி எஸ் சின் பின்னணி இசையும் டெம்போ ஏற்றுகிறது . சபாஷ் 

பெற்ற மகள் கடத்தப்பட்ட நிலையில்,  என்ன சூழ்நிலை என்றாலும் அவள் கள்ள காதலன் சொல்படி எல்லாம் ஆடுவது என்பதில் அவள் தரப்பு நியாயம் இருந்தாலும், அதன் பின்னர் அவள் மகளுக்காகத் துடிப்பது , அந்த  சென்டிமென்ட் செட் ஆகவில்லை. படத்தின் முதல் பலவீனம் இது 

அதே போல படத்தில் அடிப்படை லாஜிக் மட்டும்தான் பார்க்கவேண்டும் .எல்லா விசயங்களுக்ககும் காரண காரியம் பார்த்து அதற்கு எல்லாம் ரீசன் சீசன் சொல்லி படத்தின் திரைக்கதையில் பல காட்சிகளை டேட்டா பேஸ் ஆக்கக் கூடாது . ”ஓஹோ… அப்படியா” என்பதற்கான மேட்டர் ஆப் ஃபேக்ட் தவிர  ஒரு லெவலுக்கு மேல் சூப்பர் லாஜிக் பார்ப்பதால் படம் பாழாகும். கேட்ட பார்த்த எல்லா விசயங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருத்தால் எப்படி?

வாழ்க்கையே அப்படி இல்லையே. 

ஏன் என்று தெரியாத போகிற போக்கில் நடக்கிற சம்பவங்கள்தான் வாழ்க்கை, சினிமா இரண்டுக்கும் மேஜிக்கை கொண்டு வரும். 

ரசிகன் படம் பார்க்க வருகிறான். அல்ஜீப்ரா பார்க்க அல்ல. 

அந்தக் கள்ளக் காதலன் குணதிசயமும் அதீத திருப்பங்களால் ஒரு நிலையில் நகைப்புக்கு இடமாகிறது. 
வீடியோவில் குழந்தை பார்க்கும் தாய் பிறகு ஒரு நிலையில் கள்ளக் காதலன் குழந்தை என்னிடம் இல்லை என்பதையும் உடனே ஏற்கிறாள் . அடிப்படை லாஜிக் பார்க்காமல் …..
 

ஜுகல் பந்தி, பிங்கி பிங்கி பாங்கி திரைக்கதையால் திருப்பங்களால்  அது வரை சில கதாபாத்திரங்கள் போட்ட முயற்சிகள், அவர்கள்  உணர்வுகள் எல்லாம் பலமிழக்கிறது. விழலுக்கு இறைக்கும் நீராகிறது.  அந்தக் காட்சிகளால் பயன் இல்லாமல் போகிறது . இப்படி பல காட்சிகள் தேவை இல்லாமல் திரைக்கதைக்குள் . 

ஒரு நிலையில் ” திருப்பங்கள் போதும் பிளீஸ்’. தலை சுத்தி வாந்தி வருது”  என்று  சொல்ல வைக்கிறது . 

ஒரு  கதையை நல்ல பிள்ளையாக சொல்வது மட்டும்  இன்று போதாது.  சுவாரசியம், சென்சேஷன் வேண்டும் . 

நம்ம கதை என்ன? அதன் திரைக்கதை எவ்வளவு  நீளத்தில் இருக்க வேண்டும் அதற்கு ஏற்ப காட்சிகள், கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். 

பிடித்த கூல்ட்ரிங்க்ஸ் கூட தாகத்தோடு குடிக்கும் போது தேவாமிர்தமாக இனிக்கும் . ‘அட நல்லா இருக்கே ‘என்று இன்னொரு பாட்டில் குடித்துப் பாருங்கள். முதல் பாட்டில் கூல்ட்ரிங்க்ஸ் போல அது சுவைக்காது . காரணம் முன்னது ஹெவி. பின்னது திணிப்பு.

வயிறு மிதந்து விட்டால் வாழைப்பழமும் புளிக்கும் என்பது சொலவடை 

தங்க ஊசி என்றாலும் கண்ணில், ஒரு கதையின் பையில் திரைக்கதை எவ்வளவு கிழியாமல் தாங்கும் .

ஆடியசுக்கு சுமை சலிப்பு ஏற்படுத்தாத அளவு என்ன என்ற திட்டவிட்டம்  வேண்டும் 
பிளாக் மெயில்… ஓவர் டோஸ். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *