3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் ‘பார்டர்’ முதல் தோற்றம்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

‘AV31’ என அறியப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா   நடைபெற்றது.  நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல்,

இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய்,  இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.

தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில்  டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்ட படம் இதுதான்.   

பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் பேசுகையில், ‘தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று கோடை மழை பெய்தது.

கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ.. அந்த அளவிற்கு இந்தப் படமும் அபூர்வமான திரைப்படம். இயக்குனர் அறிவழகன் என்பது அறிவு- அழகன் என காரணப் பெயராகிவிட்டது. இதைவிட சிறப்பாக அவரது பெற்றோர்கள் இவருக்கு பெயர் சூட்ட இயலாது.

இந்த கொரோனா காலகட்டத்தில் திரை அரங்கிற்கு வருகை தந்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் காலில் விழுந்து நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கலைகளின் சங்கமம்தான் சினிமா என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அனைத்து திறமைசாலிகளின் இறுதி இலக்கு சினிமாவாக இருப்பதை நினைத்து ஆராதிக்கிறேன். கொண்டாடுகிறேன்.

இன்று பிறந்திருக்கும் ‘பிலவ’ ஆண்டிற்கான அர்த்தத்தில் ‘தாவி குதித்து’ என்ற ஒரு பொருளும் உண்டு. அதேபோல் இந்த ஆண்டில் திரைக் கலைஞர்களுக்கு ‘தாவிக்குதித்து அடையும் வெற்றி போல்’ பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இந்த நாளில் ‘பார்டர்’ படத்தையும், அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ‘அடுத்த சாட்டை’, ‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறேன்.

இப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லையோ.. என்ற ஆதங்கம் என்னுள் உண்டு. அந்த அடையாளத்தை இந்த ‘பார்டர்’ திரைப்படம் பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் என்னுடைய தாயாரின் ஆசீர்வாதமும், வழிகாட்டலும் இருக்கிறது. அவர்கள் என்னை இயக்கும் மாபெரும் சக்தி. இப் படத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், ஏனையவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பார்டர்’ படத்தை மே மாதம் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். ‘என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்,’ இன்னும் ‘ஈரம்: குறையாமல் இருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள். டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக புதிதாக சிந்தித்து வெளியிட்டதற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

இன்றைய சூழலில் திரைப்படங்களுக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு ரசிகர்களை வரவழைப்பதுதான் சவாலான பணியாக இருக்கிறது. அதற்கான பணியை இந்த படக்குழுவினர் மிகப்பொருத்தமாக செய்திருக்கிறார்கள்.

அதனால் இந்தப் படத்திற்கு மிக சிறந்த ஓபனிங் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நடிகர் அருண் விஜய் திரை உலகில் அறிமுகமான முதல் நாளிலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக தெரியும்.

அவருடன் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் பணியாற்றியிருக்கிறேன். கடினமாக உழைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனை அருண்விஜய்  விசயத்தில் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகாலம் அவருடைய தன்னம்பிக்கையை பாதுகாத்து, அவரை வளர்த்தெடுத்த அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்பது ஏவிஎம் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, அருண் விஜய்க்கும் பொருந்தும் என்பதை நிரூபித்து வருகிறார்.

இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபிறகு அருண் விஜயின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை வெளியிடும் பிரபு திலக் பெரிய வெற்றியைப் பெறவேண்டும். அம்மாவின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.’ என்றார்.

இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,’ என்னுடைய படைப்பை காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாக சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதைதான் நான் விரும்புகிறேன்.

அந்த வகையில் ‘பார்டர்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம்.

இத்தகைய சூழலில் என்னுடைய உதவியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கடினமாக உழைத்து  படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது.

எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். இன்று வெளியாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின்  டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.

‘ஈரம்’, ‘குற்றம் 23’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். ‘குற்றம் 23’ பட வெளியீட்டுக்குப் பிறகு இயக்குனர் ஹரி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியது மறக்க முடியாதது.

வினியோகஸ்தர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள் தான் இயக்குனர்களை உற்சாகப்படுத்தும்.

எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் ‘பார்டர்’ இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது.

‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன்.

நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால்தான் சாத்தியமாகிறது. அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.

‘குற்றம் 23’ படத்திற்கும், ‘பார்டர்’ படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார். ‘பார்டர்’ படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம்.

இந்த ‘பார்டர்’ திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். திரை அரங்கிற்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.’ என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசுகையில்,’ ரசிகர்களுக்கும், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘

கைதி’ படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குனர், சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் ‘பார்டர்’ படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு.

என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள்தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார்.

இப் படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்து விட்டது.  இதற்கு முன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று கால கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.  

தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்றதால் இந்த திரைப்படம் இந்தியா முழுமைக்குமான Pan- Indian Film ஆக வெளியாகிறது.என்பது புரிந்தது. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *