சன்மூன் கம்பெனி தயாரிப்பில் ராஜ்கமல் , மானஸா, ஹரி , திவ்யா , கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி அன்புமதி இயக்கி இருக்கும் படம் சண்டிக்குதிரை .
இது சவாரிக் குதிரையா ? இல்லை நொண்டிக் குதிரையா ? பார்க்கலாம் .
கிராமத்துக் கோவில்களுக்கு தேவையான மண் குதிரை செய்யும் வேலை செய்பவன் ரவி (ராஜ்கமல்). பாட்டியின் அரவணைப்பில் வளரும் கீர்த்திக்கும் (மானசா ) அவனுக்கும் காதல் .
கீர்த்தியின் தோழி சுதா ( திவ்யா) சுதாவுக்கும் கோகுல் என்ற இளைஞனுக்கும் (ஹரி) காதல்
சுதாவுடன் சற்றே எல்லை மீறும் கோகுல் அதை போனில் படம் பிடித்து வைக்க, அந்த வீடியோ எல்லாருக்கும் பரவ ,சுதா தூக்கில் தொங்குகிறாள் . எல்லோரும் கோகுலை குற்றவாளி என்று நினைத்து அடிக்கின்றனர் .
ஆனால் சுதா தற்கொலை செய்து கொள்ளவில்லை . அது ஒரு கொலை என்பது தெரியவருகிறது .
அவளை கொலை செய்தவன் கீர்தியையும்ம் கொலை செய்ய முயல்கிறான் .கொலைகாரன் யார் என்பதை ரவி கண்டு பிடிக்கும்போது என்ன நடக்கிறது என்பதே இந்த சண்டிக் குதிரை .
சின்னத்திரை புகழ் ராஜ்கமல் ஹீரோவாக ஆர்வமாக நடித்து உள்ளார் . கீர்த்தி குறும்பும் குழந்தைத்தனமுமாக (கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் கூட ) கவர்கிறார்
ஹரி திவ்யா கூட ஒகே .
வார ஸ்ரீ என்பவரின் பாடல்கள் மற்றும் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ஸ்பெஷலாக இல்லை என்றாலும் பொதுவில் இனிமை
அச்சச்சோ ஆசை வச்சேன் பாடலுக்கு மன்மத ராசா பாடல் போல படு வேகமான நடனம் அமைத்து இருக்க வேண்டும் .
கஞ்சா கருப்புவின் காமெடிகள் சிரிக்கும்படி இருந்து இருக்கலாம்.
கொஞ்சம் வெள்ளையாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக திரைக் கதையின் தேவைக்கும் அப்பாற்பட்டு மானஸாவை மீண்டும் மீண்டும்,
ஒரே லொக்கேஷன்களில் வளைச்சு வளைச்சு எடுத்து இருப்பதை குறைத்து இருக்கலாம் .
அந்த மீன் பிடிக்கிற காட்சி எல்லாம்…. ரொம்ப பழைய மீனு கண்ணுகளா !
சுதாவுக்கு ஈ எஸ் பி பவர் இருக்கிறது என்பதை ஆரமபத்தில் சொல்லி விட்டு அப்புறம் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது அநியாயம்..
அதை வைத்து ஒரு நல்ல திரைக்கதை செய்து இருக்கலாம்
ஒரு சஸ்பென்ஸ் படத்தில் யார் குற்றவாளி என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்போது அந்த கேரக்டர் முன்பே படத்தில் நன்கு புழங்குகிற – அதே நேரம் சந்தேகப்பட முடியாத கேரக்டராக இருக்க வேண்டும் .
வல்லவனுக்கு வல்லவன் படத்தில் ஜெமினி கணேசன் வில்லன் என்று தெரிய வரும்போது ஒரு பலத்த அதிர்ச்சி வருமே .. அப்படி !
ஆனால் நேர் மாறாக படத்தின் இரண்டாம் பாகம் முழுக்க தேடப்படும் குற்றவாளி என்று, புதுசாக ஒருவரை காட்டுவது … புஸவாணம்.
மொத்தத்தில் சண்டிக் குதிரை … சண்டிதான் .





