கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்க ,
ஜீவா , நயன்தாரா, சரத் லோகித் சிவா, கருணாஸ் , ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க ,
பி எஸ் ராம்நாத் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் திருநாள் .
இந்தத் திருநாள் வசூல் வரும் நாளா ? இல்லை வெறும் நாளா ?
பார்க்கலாம்
தான் செய்யும் கட்டை பஞ்சாயத்து தொழிலுக்கு போர்வையாக இருக்க ஒரு கண்ணியமான தொழில் தேவைப்படும் தாதா நாகாவும் (சரத் லோகித் சிவா ) ,
நேர்மையாக தொழில் செய்து முன்னேற விரும்பும் நபர் ஒருவரும் ( ஜோ மல்லூரி )
ஒன்று சேர்ந்து ஆளுக்கு இருபது லட்சம் ரூபாய் போட்டு கோணி வியாபாரம் செய்கின்றனர்.
நாகாவின் கையாள் பிளேடு (ஜீவா ). நேர்மையாளரின் மகள் வித்யா (நயன்தாரா).
இருவருக்கும் காதல் .
வித்யாவுக்கு அப்பா மாப்பிள்ளை பார்க்க , அவர்கள் பெண் பார்க்க வந்திருக்கும் நேரம், அது பற்றி மண்டியில் பிளேடுவிடம் வித்யா பேசிக் கொண்டிருக்க ,
சாக்குக் கட்டுகள் சரிந்து விழுந்து இருவரையும் அழுத்த , ஊரே காப்பற்ற வர,
சாக்குக் கட்டுகளுக்கு அடியில் பிளேடுவும் வித்யாவும் இருப்பதை ஊரே பார்க்க ,
மானம் போகிறது .
தனக்காக நாகா பேசுவான் என்று பிளேடு எதிர்பார்க்க .
‘அப்படிப் பேசினால் அனாதையான பிளேடு தனக்கு சமமாகி விடுவான்’ என்று நாகா சொல்ல
அதைக் கேட்கும் பிளேடு நாகாவின் நிஜ முகம் அறிகிறான்.
இதுதான் சமயம் என்று வித்யாவின் அப்பாவையும் ஏமாற்றுகிறான் நாகா .
விளைவு?
இதுவரை அடிமையாக இருந்த பிளேடு நாகாவுக்கு எதிராக திரும்புகிறான் .
இவர்களின் பிரச்னைக்கு இடையில் , இன்னும் சில ரவுடிகள் …
இந்த எல்லா ரவுடிககளையும் ஒழிக்க நினைக்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் (நீயா நானா கோபிநாத்) எல்லோரும் சேரும்போது …
என்ன நடக்கிறது என்பதே இந்த திருநாள் .
தஞ்சை மாவட்ட பின்னணியில் கோணிப்பை தொழில் என்ற புது களத்தை முன் எடுத்த வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர் ராம்நாத் .
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பார்த்து சலித்த கதாபாத்திரங்கள் காட்சிகள் வந்தாலும் சரியான சந்தர்ப்பத்தில் அவற்றில் வாழ்வியலையும் யதார்த்தத்தையும் கலந்து வித்தியாசப்படுத்துகிறார் .
பிளேடு என்ற பெயருக்குப் பொருத்தமாக , தண்ணிக்குள் இருந்து தப்பிக்கும் ஐடியா,
சாக்குக் கட்டு தொழில் செய்பவன் அப்படியே இலைக்கட்டு தொழிலுக்கு மாறும் லாஜிக் ,
பிளேடுவைக் கொல்ல வந்து “நீயாவது நல்லா வாழு ‘’ என்று மன்னித்துப் போகும் சக ரவுடி (ராமச்சந்திரன்) கதாபாத்திரம்
— என்று இயக்குனரைப் பாராட்ட பல விஷயங்கள் .
சிறப்பு.
உருவத் தோற்றம் செட் ஆகவில்லை என்றாலும் நடிப்பில் பிளேடுவைக் கூர் தீட்ட முயன்று இருக்கிறார் ஜீவா .
ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் போகப் போக வித்யா கேரக்டரை ரசிக்க வைக்கிறார் நயன்தாரா .
அவரை ஷோ கேஸ் செய்யாமல் குறைவான மேக்கப் இயல்பான தோற்றம் என்று பயன்படுத்திய வகையில் இயக்குனருக்கு கூடுதல் பாராட்டுக்கள் .
தனது மனைவியை நாகா சீரழிப்பது கண்டு புழுங்கும் காட்சிகளில் கருணாஸ் ஓகேஸ்!
ராமச்சந்திரன் இதுவரை நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் பெஸ்ட் . வாழ்த்துகள் !
சரத் , மல்லூரி , சாப்பாட்டு ராமனாக வரும் ராமதாஸ் ஆகியோரும் ஒகே .
ஸ்ரீ யின் இசையில் ‘பழைய சோறு பச்சை மிளகாய்’ பாட்டு தலைவாழை இலை சாப்பாடாக ருசிப்பதோடு, மனசின் சாக்குப் பையில் உட்கார்ந்து கொண்டு வீடு வரைக்கும் வருகிறது.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதியும் பாராட்டும்படி இருக்கிறது .
நாகாவை பிளேடு பழிவாங்க இருவருக்கும் இடையிலான விசயங்களே போதும் .
அப்படியிருக்க , கருணாஸ் மனைவி விவகாரம் விலாவாரியாக சொல்லப்படுவது தேவை இல்லாத சுமை .
என்னதான் கமர்ஷியல் என்றாலும் திட்டாதே பாட்டு நிற்கவில்லை .
முடிவில் அழுத்தம் கம்மி .
எனினும் வாழ்வியல் கலந்த கமர்ஷியலாக கவர்கிறது படம்
திருநாள் ….. மிட்டாய் கடை !