செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம், இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார், ஸ்ரீநிதி , மீனாட்சி, மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கும் படம்.
ஹலூசினேஷன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சிறு வயது முதலே கணிதத்தில் வல்லவனான ஒருவன் (விக்ரம்), அறிவு ஜீவிக் கூலிப்படையாக ஆகி, உலகம் எங்கும் உள்ள பிரபலங்களை கணிதம் மற்றும் வேதியியலைப் பயன்படுத்திக் கொலை செய்கிறான். அவனது இளம் வயது வாழ்வு, உறவு ,அவற்றின் தொடர்ச்சியால் நிகழும் சம்பவங்களும் விளைவுகளுமே கோப்ரா .

கோப்ரா என்பது நாகப்பம்புகளிலேயே அறிவும் சீற்றமும் கொண்டது .
அண்ணன் தம்பிகளாக கதிர்வேலன் மற்றும் மதியழகனாக ரசிக்க வைக்கிறார் விக்ரம். மூத்த சகோதரனை அவனது நடுத்தர வயதை ரசித்து காதலிக்கும் ஸ்ரீநிதி கதாபாத்திரத்தின் பக்குவமும் நிதானமும் அழகு.
குற்றவாளிகளைப் பிடிக்க வரும் இன்டர்போல் ஆபீசராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இஃர்பான் பதான் சிறப்பு .
கணித மாணவியாக மீனாட்சி உற்சாகமாக நடிக்கிறார் . கமிஷனரின் மகளாக வரும் மிருணாளினியும் நைஸ்.

அற்புதமான இசையால் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார் லலித் குமார் .
கடைசியில் குண்டடி பட்டு நாயகன் தள்ளாட , அவனோடு ஹலூசினேஷன் உருவங்களாக வருபவர்களும் தள்ளாடுவது நல்ல டைரடக்டோரியல் டச். சபாஷ் அஜய் ஞானமுத்து .

குழப்பமான திரைக்கதை, தெளிவில்லாத கதாபாத்திர வடிவமைப்புகள், வித்தியாசமாகத் துவங்கும் படத்தை வழக்கமான அரைத்த மாவுக்குள் அடைக்கும் தன்மை, ஒரு ஆங்கில ஷார்ட் ஃபிலிமை அப்படியே காப்பி அடித்து போலீஸ் விசாரணையின் போது ஹலூசினேஷன் பாத்திரங்கள் பேசுவது, காரணமில்லாத சண்டைகள், டன் கணக்கில் லாஜிக் குறைபாடுகள், பொறுப்பில்லாத முடிவு ஆகியவை குறைபாடுகள் .