யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்க, காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் .
பாண்டிச்சேரியில் நவீன நாடகம் நடத்துகிற- சினிமாவில் நடிப்பவர்களும் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கிற – தரமான நாடகக் குழுவில் இருக்கும்- சேரும் கலைஞர்கள், அவர்களுக்குள்ளும் இருக்கும் சாதியச் சிந்தனைகள், காதல் ஜோடிகளுக்குள்ளும் சாதியம் மற்றும் பாலியல் பாகுபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் அதன் விளைவுகள் இவையே இந்தப் படம்.
சாதிப் பற்று மற்றும் வெறியின் விளைவுகள் எப்படி சமுதாயத்தை தொடர்ந்து பாதிக்கிறது என்பதையும் அதை சாதி ஆணவத்தால் பாதிக்கப்படுவோர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்கிறார் பா ரஞ்சித் .
நிஜமான பெண்ணியப் படம், படத்தின் கதாநாயகியாக வரும் துஷார விஜயனுக்கு அற்புதமான வாய்ப்பை கொடுத்துள்ளார் ரஞ்சித் . அவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
கலையரசனின் கதாபாத்திரமும் நடிப்பும் அபாரம்.
கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது . படத்தின் பெயருக்கு ஏற்ற காட்சிகளிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. . வசனம் நிறைந்த நீளமான படத்தை கவனமாக செதுக்கி இருக்கிறது ஆர் கே செல்வாவின் ஒளிப்பதிவு
நாடகக் காட்சிகளுக்கான உத்திகளும் ஜெய ரகுவின் கலை இயக்கமும் அபாரம்.
டென்மாவின் பாடல்களிசையும் பின்னணி இசை இரண்டும் மிக சிறப்பு.
பொதுவாக தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவான படங்களில் கூட அவர்களை பரிதாபமாக காட்டும் வழக்கத்தை மாற்றி அவர்களை கம்பீரமாக காட்டி இருக்கிறார் ரஞ்சித்
‘உண்மைக் காதல் ஆண் பெண் உறவில் மட்டுமல்ல ஆண் ஆண் உறவு, பெண் பெண் உறவிலும் உண்டு . இரண்டிலும் நாட்டம் உள்ளோரும் உண்டு. எல்லாம் இயல்பான ஒன்றுதான் ‘என்பதோடு . கல்யாணம் குடும்பம் என்ற கட்டுப்பாடுகளை உடைப்பதும் இயல்பான நியாயமே என்கிறது படம்.
தலித்துகள் தமிழ் அடையாளத்தைப் புறக்கணிக்க வேண்டும் , சாதி அடுக்கை உருவாக்கி மண்ணின் மைந்தர்களான சாதிகளுக்குள் ஏற்றத் தாழ்வை உருவாக்கி அவர்களை வெட்டிக் கொண்டு சாக வைக்கிற சனாதனவாதிகள், சாதிச் சண்டை போடுகிற சாதி ஆட்களை விட நல்லவர்கள் .. என்ற ரீதியில் படம் காட்டும் காட்சிகள் பக்குவமற்றவை.
