TURM புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் உமா மகேஸ்வரி தயாரிக்க, லிங்கா , அறிமுகக் கதாநாயகி சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி ,சாய் தீனா, சாரா, அபிஷேக், சரத் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் எழுதி இயக்கி இருக்கும் படம் . மும்பையை கட்டி ஆண்ட மாபெரும்– போதைப் பொருட்கள் உள்ளிட்ட – கடத்தல் மாபியா தலைவன் பெயர் தாவூத் (என்பது உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.)
இந்தப் படத்தின் கதைப்படி, தாவூதுக்கு இந்தியா முழுக்க கடத்தலுக்கான வலைப் பின்னல் இருக்கிறது. பலப்பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியில் நடந்த ஒரு பெரிய கலவரத்தில் தாவூதுகும் பங்கு இருக்கிறது.
சென்னைக்கு வரும் தாவூதின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை எப்போதும் பத்திரமாக சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பி பணம் பெற்று தாவூதுக்கு அனுப்பி அதற்கான பங்குத் தொகையையும் பெறுபவன் மூர்த்தி (சாய் தீனா)
அந்த இடத்துக்கு தான் போக ஆசைப்படுகிறான் விசாகம் (அபிஷேக்). விசாகத்தின் நம்பிக்கையான கையாள் ஜானி (சரத் ரவி). ஜானியின் சகலத்துக்குமான பெண் டேனி( சாரா ஆச்சர்)
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எல்லாம் பக்திமான் என்று பெயர் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் குளித்து பூஜை முடித்து குடிக்கும் பழக்கம் உள்ள மணியை (சாரா) நண்பனாகக் கொண்ட -கடனுக்கு வண்டி வாங்கி கேப் கார் ஓட்டிக் கொண்டு , வட்டி கட்ட முடியாமல் கடன் கொடுத்தவனிடம் (சேரன் ராஜ்) அடிக்கடி அடி வாங்கும் கேப் ஓட்டுநர் தம்பிதுரை (லிங்கா)
ஒரு முறை தம்பிதுரையின் காரில் டேனி ஏற பேச்சு வளர்ந்து , பேச்சு நீள. தம்பிதுரை தனது கடன் பிரச்னையை சொல்ல , ஜானியிடம் சொல்லி பண உதவி செய்வதாக சொல்கிறாள் டேனி. அப்படியே அவள் ஜானியிடம் சொல்ல, அவன் கோபப்படுகிறான் .
அதன் பிறகு தம்பிதுரையை பார்க்கும்போது எல்லாம் முறைக்கிறான். ஒரு நிலையில் தம்பிதுரை அப்பாவி என்பதை உணர்ந்து ஜானி சமாதானம் ஆகிறான்.
தாவூதின் சரக்கை யார் கைப்பற்றிக் கடத்தி சரியான முறையில் அனுப்பி, விற்று தாவூத்திடம் நல்ல பெயர் வாங்குவது என்பதில் மூர்த்திக்கும் விசாகத்துக்கும் போட்டி தீவிரம் அடைகிறது.
வழக்கமான ஆட்கள் போனால் பிரச்சனை என்பதால் நம்பிக்கையான ஒரு புது ஆளை ஜானியிடம் தேடச் சொல்கிறான் விசாகம் .
இந்த நிலையில் மூர்த்தி ஆட்கள் ஜானியைக் கொல்ல வர, தம்பிதுரை ஜானியைக் காப்பாற்றுகிறான். தம்பிதுரையையே நம்பகமான ஆள் என்று விசாகத்திடம் சொல்கிறான் .
அதை ஏற்றுக் கொண்ட விசாகம், தம்பிதுரையிடம் “சும்மா காரில் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவது சுலபம் என்று நினைக்காதே, மூர்த்தி ஆட்கள் மூலமோ வேறு ஆட்கள் மூலமோ சரக்கு மிஸ் ஆனால் , நம் யாரையும் தாவூது உயிரோடு விட மாட்டான்” என்கிறான்
தம்பிதுரை சரக்கை கொண்டு போய் கொடுத்தானா? அந்தப் பையில் போதைப் பொருள்தான் இருந்ததா? தம்பிதுரை விசாகத்துக்கும் ஜானிக்கும் உண்மையாக இருந்தானா? மூர்த்தி விளையாடிய ஆட்டம் என்ன? தாவூத் உண்மையிலேயே யார் என்பதே படம் .
முன்னூத்தி எழுபதாவது முறையாக மீண்டும் ஒரு போதை மாபியா கதை .
கஷ்டமான சூழ்நிலையிலும் ஏழைகளுக்கு உதவும் (அதில் ஒரு PLAY இருக்கு) அப்பாவி – நல்ல கேப் டிரைவர் கேரக்டரில் லிங்கா கச்சிதம் . பொருத்தமான நடிப்பு .
சீனியர் தாதாவாக சாய் தீன மிரட்டுகிறார் .
படத்தின் கதாநாயகி ஹீரோவின் நாயகன் அல்ல. போதை தாதா அடியாள் ஜானியுடன் , டாக்டர், விமானப் பணிப் பெண், அமெரிக்காவின் FBI போலீஸ் என்று விதமான கெட்டப்களோடு போய் ரகசிய உறவாடுபவர் .
டைரக்டர் நாட்டுக்கு நல்லது எதையோ சொல்ல முயல்கிறார்.
கேப் டிரைவர்களால் பயணிகளுக்கு வரும் பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன . ஆனால் இந்தப் படத்தில் கேப் டிரைவர்களுக்கு பயணிகளால் வரும் பிரச்சனைகளை காமெடி தூவி சொல்லி இருப்பது பிரம்மாதம்.
சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரின் ஒளிப்பதிவு, ராகேஷ் அம்பிகாபதியின் இசை ஆர் கே ஸ்ரீகாந்த் ஓடத் தொகுப்பு ஆகியவை வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது .
முதல் பாதி தெளிவாகப் போகிறது . ஆனால் இரண்டாம் பகுதியில் திரைக்கதை என்னும் கேப் கார், மேடு பள்ளம் சேறு சக்தி கல்லு முள்ளு என்று பாராமல் கண்ட ரூட்டில் கண்ட மேனிக்கு ஓடி ஆடி கலகலத்து நிற்கிறது .
ஒரு நிலையில் கிளைமாக்ஸ் எளிதில் எல்லோருக்கும புரியும்படி இருக்க, அதனால் அதையும் அரைகுறையாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.
வழக்கமான கதை , நேர்த்தி இல்லாத திரைக்கதை இவற்றால் சரக்கே இல்லாத வெற்றுக் காகித மூட்டை போல பல்லிளிக்கிறது படம்.
தாவூத் … போலி சரக்கு