மதறாஸ் மாஃபியா கம்பெனி @ விமர்சனம்

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுகந்தி அண்ணாதுரை தயாரிக்க,  ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஆராத்யா நடிப்பில் சுகந்தி அண்ணாதுரையின் கதைக்கு,  முகுந்தன்  திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.

 
1999 ஆம் ஆண்டு சென்னையில் கொலை கொள்ளை கடத்தல்  வேலைகளை முறைப்படி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கம்பெனி மதறாஸ் மாபியா கம்பெனி . அதன் தலைவர் பூங்காவனம் (ஆனந்தராஜ்) 
 
மிக புரபஷனலாக இயங்கும் இந்தக் கம்பெனி,  சிறு சிறு குற்றங்கள் செய்த ஆதாரத்துடன் வருபவர்களுக்காக தேர்வு நடத்தி ஆள் எடுக்கும் . அவர்களில் ரொம்ப தைரியமான ஆட்களுக்கு கொலை செய்யவும் கடத்தல் செய்யவும் ‘அசைன்மென்ட்’ கொடுக்கும்.  தைரியம் குறைவானவர்களையும் வேலைக்கு எடுக்கும். தைரியமானவர்கள்  குற்றம் செய்து விட்டு வந்த உடன், ‘செய்தது நாங்கள்தான்..’  என்று சொல்லிக் கொண்டு போலீசுக்கு போய் சரண்டர் ஆவது,  தைரியம் இல்லாத ஆட்களின் வேலை . 
 
உண்மையான குற்றவாளிகள் அடுத்த குற்றச் செயலுக்கு வழக்கம் போலப் போவார்கள். அவர்களுக்காக கைதாகி ஜெயிலுக்குப் போன நபர்களின் குடும்பங்களை மதராஸ் மாஃபியா கம்பெனி பார்த்துக் கொள்ளும். தவிர காவல் துறையில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் ஜெயிலில் இருப்பவர்களையும் கம்பெனி வெளியே கொண்டு வந்து விடும் . 
 
திறமையை வைத்து ஜெயிலுக்குப்  போகும் ஆட்களுக்கு அசைன்மென்ட்  கொடுக்கப்படும் . சரியாக செயல்படாத ஆட்கள் ஜெயிலுக்குப் போகும் பணிக்கு மாற்றப்படுவதும் உண்டு . 
 
இந்த கட்டமைப்பால் கம்பெனி தலைவர் பூங்காவனம்,  ஆயிரம் குற்றங்கள் செய்தும் அவர் மேல் ஒரு F I R கூடப் பதிவாகவில்லை. 
 
பூங்காவனத்துக்கு முறைப்படி ஒரு மனைவியும்  (தீபா) மனநலம்  உடல் ஊனம் கொண்ட மகனும் உண்டு. 
 
தவிர அவருக்கு ரகசியமாக ஓர் ஆங்கிலோ இந்திய மனைவியும் ( சசி லயா) அந்த வழியில் ஒரு மகளும் (ஆராத்யா உண்டு) 
 
அந்த மகள் வேறு சாதிப் பையனைக் காதலித்ததால்,  அவனை பூங்காவனம் சாகடித்து விட, மகளுக்கு அப்பா மேல் கோபம். 
 
பூங்காவனத்துக்கு எதிரிகள் மட்டுமின்றி தன் உடன் இருப்பவர்கள் (ராம்ஸ் உள்ளிட்ட சிலர்) கூட, தன்னை  எப்போது வேண்டுமானாலும் கொல்வார்கள்  என்ற பயமும் உண்டு. 
 
இந்த நிலையில் ‘எப்படியாவது பூங்காவனம் மேல் F I R போடுவதோடு அவனை ஜெயிலில் போடுவேன்’ என்று சபதம் போட்டு விட்டுக் களம் இறங்குகிறார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் (சம்யுக்தா)
 
யார் ஜெயித்தார் யாருக்கு என்ன நடந்தது? என்ன புரிந்தத ? என்பதே படம் . 
 
கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்றாலும் அந்த மதறாஸ் மாஃபியா கம்பெனியின் கட்டமைப்பு அட்டகாசமாக இருக்கே என்று வியந்தால் அப்புறம்தான் தெரிந்தது…..
 
தயாரிப்பாளர் சுகந்தியின் அப்பாவான வழக்கறிஞர் அண்ணாதுரை, வேலூர் பகுதியில் இப்படி ஒரு கம்பெனியை நேரில் பார்த்து இருக்கிறார் என்றும் அதை வைத்தே இந்தக் கதை எழுதப்பட்டு இருக்கிறது என்று.  
 
பூங்காவனம் கேரக்டரில் எதிரிகளையும் துரோகிகளையும் கெத்தாக டீல் பண்ணும் தாதா,  மாற்றுத்திறனாளி மகன் கேலி செய்யும் போது பொறுத்துக் கொள்வது ,  முதல் மனைவியின் கிண்டல்களை கவனிக்காமல் போவது, இரண்டாம் மனைவியிடம் கொஞ்சல்…
 
 அப்படிப்பட்ட பிடித்த மனைவியின் மகள் என்றாலும் காதல் என்று வரும்போது சாதி பார்க்கும் குணம்  (இத்தனைக்கும் இரண்டாம் மனைவி இவர் ஜாதி இல்லை), அவ்வப்போது யார் என்ன செய்வானோ என்று பயப்படுவது…
 
இப்படி சீரியஸ் காட்சிகள் காமெடி காட்சிகள் இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார் ஆனந்தராஜ். அனுபவசாலிகள் ஒரு கேரக்டரை எதிர் கொள்ளும் விதமே சிறப்பு .
 
படத்தில் முனீஸ்காந்த்தை  வைத்து காமெடி டிராக் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள் . சிரிக்கவே முடியவில்லை என்பது கூட பரவாயில்லை. எரிச்சல் வரும்படி இருக்கிறது. 
 
அந்த மாற்றுத் திறனாளி மகன் கேரக்டர் பூங்காவனத்தை ஒரு சில காட்சிகளில் கலாய்க்கும்போது வரும் குபீர் நகைச்சுவையில் (உதாரணமாக அந்த அய்யர் பிண்டம் வைக்கும் காட்சி)  ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பல காட்சிகளை வீணாக்கும் முனீஸ்காந்த் சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகளில் வரவில்லை. . இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. அதை அப்படியே வெட்டி எறிந்தால் படம் பார்க்க வருபவர்களின் குடும்பமே படக்குழுவை மனசார வாழ்த்தும் . 
 
அடியாட்களில் ராம்ஸ் கவனிக்கும்படி நடித்துள்ளார் . தீபாவும் ஸ்கோர் செய்கிறார். 
 
போலீஸ் அதிகாரியாக வரும் சம்யுக்தா உயரம் தோற்றப் பொருத்தம் ஓகே . ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியை அவரால் பர்சனாலிட்டியில் கொண்டு வர முடியவில்லை. போலீஸ் சல்யூட் அடிப்பது காமெடியாக இருக்கிறது.  அந்தக் கேரக்டருக்கு அவரால் நியாயம் செய்ய முடியவில்லை. 
 
திடீரென்று அவ்வப்போது திரைக்கதை ஏதோ  வித்தியாசமாக சொல்ல முயல்வது போல காட்டிக் கொள்கிறது. மீண்டும் வழக்கமான ரூட்டுக்கு வரும்போதுதான் அது பாவ்லா காட்டி இருப்பது புரிகிறது. 
 
ஸ்ரீகாந்த் தேவா இசை,தேவராஜின் படத் தொகுப்பு அசோக் ராஜின் ஒளிப்பதிவு  யாவும் சோபிக்கவில்லை . 
 
அந்தக் கால சினிமா பாணியில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் சமயத்தில் ஆன்ட்டிகள் மற்றும் இளம் பெண்கள் ஆடும் கிளப் சாங் ஒன்று போட்டு  இருக்கிறார்கள் .
 
கிளைமாக்சில் படம் சொல்லும் விஷயம் அபாரமானது . ஆனால் அதை சொன்ன விதமும் அதை சொல்வதற்குள்  படம் பார்ப்பவர்களை அடிக்கும் அடியும்,  அந்த விஷயத்தை உட்கிரகிக்கும் மனநிலையை கெடுத்து விடுகிறது . 
 
கடும்பசியோடு சாப்பிட உட்கார்ந்தவனுக்கு புளித்துப் போன பழைய சோறு, ஊசிப் போன சாம்பார்  எல்லாம் கொடுத்து அவனும் வேறு வழியில்லாமல்  மூச்சு முட்ட சாப்பிட்டு முடித்து வயிறும் நிரம்பி, போதுமடா சாமி என்று  கைகழுவ எழும்போது , ”இந்தாங்க நல்லதா சாப்பிடுங்க ” என்று சுவையான பிரியாணியைக் கொண்டு வந்தால் சாப்பிட்டவனுக்கு எப்படி இருக்கும் ? 
 
படம் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கிறது அந்த நல்ல கிளைமாக்ஸ். 
 
உண்மையில் மதறாஸ் மாபியா கம்பெனி என்ற அந்த கட்டமைப்பு ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒரு நிலை வரை அதை வைத்து வித்தியாசமான வியப்புக்குரிய காட்சிகளை வைத்து, போலீஸ் துறை எப்படி அதே புத்திசாலித்தனத்தை வைத்து எப்படி கம்பெனியை உடைக்கிறார்கள் என்று பிரில்லியன்ட்டாக எழுதி , பூங்காவனத்தை ‘பூமிக்கு’ வர வைத்த,   
 
 படம் முழுக்க காமெடியும் சேர்த்து திரைக்கதை எழுதி இருந்தால் இந்தப் படம் வெற்றி பெற்று இருக்கும். அதற்கு நல்ல திரைக்கதையாளர் தேவை . அது படத்துக்கு அமையவில்லை. 
 
மதறாஸ் மாஃபியா கம்பெனி ..நொடித்துப் போயிருக்கிறது 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *