டிரினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிக்க, விமல் , ரவிச்சந்திரன் மகன் ஜனா , பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, பொன்னி,ரவி மரியா, புகழ் இருப்பில் எழில் இயக்கி இருக்கும் படம்.
ரவுடிகளுக்கு போலீஸ் அடிமை சேவகம் செய்யும் நூற்றுக்கணக்கான ஏரியாகளில் ஒன்று . ஒரு ரவுடி கொல்லப்பட அதற்கு காரணம் அமைச்சர் ( ரவிமரியா ) என்று நினைக்கிறது இழந்த தரப்பு. அந்த தரப்பு இளைஞன் (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மகன் சத்யா) அமைச்சருக்கே சவால் விடுகிறான் .
அந்த இளைஞனின் நண்பன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (விமல்) .சவால் விட்டபடி அவன் அமைச்சரின் மகனைக் கொல்கிறான். இன்ஸ்பெக்டர் கொலை செய்த நண்பனுக்கு ஆதரவாக இருக்க, வழக்கு விசாரனைக்காக வரும் மேலதிகாரி (பூஜிதா பொன்னாடா) இன்ஸ்பெக்டரின் முன்னாள் காதலி.
காதலியின் தங்கை சவால் இளைஞனின் முன்னாள் காதலி . அவளை ஒரு தரப்பு பாலியல் பலாத்காரம் செய்ய அவள் தற்கொலை செய்து கொள்ள பழி சவால் இளைஞன் மேல் விழ , அது தெரியாமல் பெண் காவல் அதிகாரி அவனை எதிரியாகப் பார்க்க , உண்மைகள் புரிய நடந்தது என்ன என்பதே படம்.
திடீர் என்று சவால் இளைஞனுக்கு டூயட் எல்லாம் வரும்போதே அவர் தயாரிப்பாளர் மகன்தான் என்பது சுலபமாகப் புரியும்.
படம் முழுக்க அழகழகான பெண்கள் . அது தவிர அவர்களுக்கும் வேலை இல்லை. அது கூட பரவாயில்லை . படத்தை எடுத்தவர் நடித்தவர் யாருக்கும் வேலை இல்லை.
நடிகர் புகழுக்கு பெண் வேடம் அவரை தொண்டை கிழிய பெண் குரலில் பேச விட்டு சித்திரவதை செய்து இருக்கிறார்கள் அவரையும் ரசிகர்களையும் .
இந்த எஃபக்ட்தான் வேண்டும் என்றால் உமா ரியாஸ்கான் போதுமே எதுக்கு இந்த மனிதாபிமானமற்ற செயல் .
இந்தப் படத்தை பார்க்கும் ஒரு ரசிகன் அடுத்து ஒரு மண்டலத்துக்கு சினிமா என்ற பெயரைக் கேட்டாலே அலறுவான் .
தேசிங்கு ராஜா 2 …. கழுதை சவாரி
