கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு அவ்வப்போது பிரச்னைக்கு உள்ளாகும் நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பச்சைத் தமிழர், இன மொழி நிலப் பிரச்னைகளில் உடனடியாக வினையாற்றும் கன்னட சினிமாவில் நுழைந்து,
பதினெட்டு கன்னடப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கி விட்டு, பனிரெண்டு படங்களுக்கு கதை திரைக்கதை வசனமும் இரண்டு படங்களுக்கு திரைக்கதையும் எழுதி விட்டு, இரண்டு படங்களை தயாரித்தும் விட்டு …..

இது போதாது என்று தனது படங்கள் நன்றாக இருந்தும் விருதுப் பரிந்துரைகளில் புறக்கணிக்கப்படுவது கண்டு கோர்ட்டுக்குப் போய் நீதி பெற்று, தேசிய விருதுகளில் நடைபெறும் வரம்பு மீறல்களைத் தட்டிக் கேட்டு..
அதோடு கர்நாடகாவில் உள்ள மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் டிக்கட் விலை 120 ரூபாய்க்கு மேல் போகக் கூடாது என்று கர்நாடக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திப் போராடி ….
இப்போது எய்ன்ஃபாக் ஸ்டுடியோஸ் சார்பில் மனோஜ் குமார், பிரதாப் கிருஷ்ணா, ஆகியோர் தயாரிக்க வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சென்றாயன் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தை தனது டி பிக்சர்ஸ் மூலம் சேர்ந்து தயாரித்து, இயக்குவதன் மூலம்….

சினிமா இயக்குநராகி இருபது வருடம் ஆன நிலையில் தமிழுக்கு வருகிறார் என்பது, எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்!
மேற்சொன்ன எல்லா சாதனைகளுக்கும் சொந்தக்காரரான அவர்தான் தயாள் பத்மநாபன்.
மொழி பேதம் பார்க்காமல் அவரை தயாள குணத்தோடு ஏற்று பத்மநாப சாமி போல அலங்கரித்து வைத்த கன்னட சினிமா உலகுக்கும் நம் அன்பு உரித்தாகட்டும். (மேலே துவங்கி இன்னொரு முறை படித்து விடவும்)

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய விழுப்புரததைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் ராதா தம்பதிக்கு மகனாகப் பிறந்து சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக்கில் டிப்ளமா படித்
து பெங்களூர் பி எம் எஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் இஞ்சினியரிங் முடித்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் – இல் பதினைந்து வருடம் பணியாற்றிய பிறகு சினிமாத் துறையில் நுழைந்தவர் தயாள் பத்மநாபன் ..
இவர் இயக்கிய பதினாலாவது படம் ஆகரால ராத்திரி . இந்த கன்னடப் பெயருக்கு அடர்ந்த இருட்டு கொண்ட இரவு என்று பொருள் .

இந்த படத்தின் கதைக்கே நாடு மொழி, கலாச்சாரங்களைக் கடந்த ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
ரூபர்ட் புரூக் என்ற இங்கிலாந்து கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் எழுதிய சோல்ஜர் என்ற கதையை தழுவி கன்னட எழுத்தாளர் மோகன் பாபு என்பவர் ஒரு நாடகம் எழுதினார் . எஸ் கே பகவான் என்ற கன்னட இயக்குனர் அந்த நாடகத்தை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வைத்து படமாக இயக்க எண்ணி இருந்தார் . ராஜ்குமாரும் ஒத்துக் கொள்ள, லடாக்கில் படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் , ” இந்த அளவுக்கு இருட்டில் நடக்கும் காட்சிகள் உள்ள படம் எனக்கு வேண்டாம் ” என்று ராஜ்குமார் விலகிக் கொண்டாராம் .
அந்தக் கதை காத்திருந்தது…. தயாள் பத்மனாபனுக்காக!

கன்னட பிக்பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்ட தயாள் பத்மநாபன் 21 ஆம் நாள் வெளியேற, மேலே சொன்ன கதைக்கு திரைக்கதை எழுதி பிக் பாசில் உடன் இருந்த ஜே கே மற்றும் அனுபமா கவுடாவை வைத்து இயக்கிய படம்தான் ஆகரால ராத்திரி . உடன் இருந்த வேறு சில பிக்பாஸ் போட்டியாளர்களான ஜெயா சீனிவாசன், ஆஷிதா , திவாகர் ஆகியோர் கெஸ்ட் ரோல்களில் நடித்தார்கள் .
தயாள் பத்மனாபனின் அட்டாகசமான திரைக்கதை மற்றும் இயக்கத்தால் படம் பெரும் வெற்றி பெற்றது . SIIMA விருதுகளில் கன்னடத்தில் சிறந்த இயக்குனர் விருதுக்காக முன்மொழியப்பட்டது.

இந்தப் படத்தை தயாள் பத்மநாபனே அனகனக ஓ அத்திடி என்ற பெயரில் சைதன்யா கிருஷ்ணா, பயல் ராஜ்புத் நடிக்க தெலுங்கில் இயக்கி வெற்றி பெற்ற நிலையில் இப்போது அந்த திரைக்கதையை மேலும் செதுக்கி , கொன்றால் பாவம் என்ற பெயரில் இப்போது தமிழில் இயக்கி, தனது தாய்மொழிப்பட உலகுக்குள் இயக்குனராக நுழைந்து இருக்கிறார் தயாள் பத்மநாபன்
( இதற்கு முன்பு சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் முதன் முதலில் இயக்கிய பாரோ பாரோ ரசிகா படம் வா மன்மதா வா என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது . சென்ற ஆண்டு இவர் இயக்கிய ஒன்பத்தனே திக்கு அதாவது ஒன்பதாவது திசை படம் குரங்கு பொம்மை படத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்டது) )

ஒரு தனிமையான வீட்டில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் அதற்கும் முன்னும் பின்னுமான காரண காரியங்களின் விளைவு இவையே இந்த கொன்றால் பாவம் படத்தின் கதை .
படத்தின் டிரைலர் காட்டினார் . மிரட்டலாக இருக்கிறது .
செழியனின் ஒளிப்பதிவு மற்றும் சாம் சி எஸ் இசையில் வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், நாசர், ஈஸ்வரி ராவ் ஆகியோரின் சிறப்பான எக்ஸ்பிரஷன்களில் தயாள் பத்மநாபனின் அதிரடி வசனங்களில் மிரட்டுகிறது டிரைலர்.

“அனுபவத்தோடும் உற்சாகத்தோடும் இளைய புதிய தயாரிப்பாளர்களோடு கரம் கோத்து என் தாய்மொழித் தமிழில் நேரடியாக இயக்குனராக கால் பதித்து உள்ளேன் . தயாரிப்பாளர்கள் மனோஜ் குமார் பிரதாப் கிருஷ்ணா, இருவரும் எனக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் படத்தை இயக்கும் சூழலை ஏற்படுத்தினார்கள் .
வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், சார்லி , ஈஸ்வரிராவ் நடிப்பும் செழியனின் அர்த்தமுள்ள ஒளிப்பதிவும் சாம் சி எஸ் சின் சிறப்பான இசையும் படத்துக்கு பலம் சேர்த்து உள்ளது . இந்தப் படத்தை நான் முன்பே தெலுங்கில் எடுத்து விட்டாலும் இந்த தமிழ்ப் படத்தையும் தெலுங்கில் டப் செய்து கேட்டார்கள். எனவே கொன்றால் பாவம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு திரைக்குப் போகிறது .

விரைவில் கொன்றால் பாவம் படம் உங்களுக்காக திரைக்கு வரும் ”
– உத்வேகம் குறையாமல் பேசுகிறார் தயாள் பத்மநாபன் .
இப்போதே புரியுது . உங்க படம் பேசும் சார்