ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் கதிரேசன தயாரிப்பில், அருள் நிதி, பவித்ரா மாரி முத்து , கிஷோர் , ஜெயபிரகாஷ் , தனம், நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கும் படம்.
காவல்துறையில் பயிற்சி பெறுவோருக்கு பயிற்சியின் கடைசி அங்கமாக குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாத வழக்கு ஒன்றைக் கொடுத்து விசாரணை செய்யும் வகையில் இளம் காவல் அதிகாரி ஒருவருக்கு ( அருள்நிதி) பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் ஒரு தம்பதி கொலை செய்யப்பட வழக்கு கொடுக்கப்படுகிறது .
வழக்கு விசாரணையில் அவருக்கு நேரும் காதல், அமானுஷ்ய , கொலை செய்யப்பட்டவர்களுக்கும் தனக்குமான தொடர்பு என்ன என்பது குறித்த நிகழ்வுகளே டைரி .
ஒரு இடத்தில் ஒரே சமயத்தில் அதற்கு முன்பு தொடர்பு இல்லாத மனிதர்களுக்கு நிகழும் மரணங்களைக் கொண்டு அமைக்கப்படும் கதைகள் சில வந்திருக்கும் வேளையில் அதே பாணியில் வந்திருக்கும் சிறப்பான கதை கொண்ட படம். அருள்நிதி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் .சிறப்பாக நடித்திருக்கிறார் முதல் பாதியில் சில காட்சிகளே அவர் வரும் அளவுக்கு, இயக்குனருக்கு கொடுத்து இருக்கும் சுதந்திரம் பாராட்டுக்குரியது .
மேக்கிங்கில் அசத்துகிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன் . பஸ்சின் கியர், நகரும் சக்கரம் என்று குட்டி குட்டி குளோசப்களை வைத்து மிரட்டுகிறார்
ஆரம்பக் காட்சியில் ஊட்டி மலைப் பகுதியில் குளிர் இரவில் கார் ஒன்று போக, சட்டென்று வரும் முழு இருள் திரையில் வலது பக்கம் மட்டும் ஒரு வெள்ளிக் கோடு விழ, அடுத்த நொடியில் அது கார் வெளிச்சத்தில் ஒளிரும் சாலையோர உலோகத் தடுப்பு என்று உணர வைக்கும் ஷாட்டில் இருந்து படம் முழுக்க பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். பஸ்சுக்குள் வைத்து இருக்கும் ஷாட்கள் அருமை
ரான் எத்தன் யோகனின் பின்னணி இசை அதிர வைக்கிறது , நல்ல விதமாகத்தான்
ஒலி வடிவமைப்பும் அருமை . பிரச்னை என்ன வென்றால் ஒரு நல்ல கதையை திரைக்கதையால் கெடுத்து வைத்து இருக்கிறார்கள் . ஆரம்பக் காட்சி ஈர்க்க, அப்புறம் ரொம்ப நேரம் சோதனை.. திடீர் என்று அந்த பஸ் எபிசோட் துவங்க, இதுவரை நாம் பார்த்த படம் எங்க போச்சு என்ற கேள்வி வருகிறது .
இதற்கெல்லாம் பதிலாக அர்த்தமுள்ள இரண்டாம் பகுதியின் இரண்டாம் பகுதி வரும் போது , அதற்குள் அலுப்பு ஏற்பட்டு விடுகிறது . அந்த அளவுக்கு முதல் பாகத்தில் நீட்டி முழக்கி விட்டார்கள் .
ஒரு காட்சியை அல்லது ஷாட்டை அழுத்தமாக உணர்த்துவது தப்பில்லை. ஆனால் அதற்கும் ஓர் அளவு இருக்கு இல்லையா? அதையும் மீறி நீள்கிறது ஷாட்கள்.
கதையை டைரியில் சிறப்பாக எழுதி இருக்கிறார்கள்