டை நோ சார்ஸ் @ விமர்சனம்

கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க, உதய் கார்த்திக் , ரிஷி, மாறா, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், சாய் பிரியா தேவா, மானக்ஷா , அருண், தாரா சீலன் நடிப்பில் எம் ஆர் மாதவன் எழுதி பாடல்களும் எழுதி இயக்கி இருக்கும் படம் டை நோ சார்ஸ் (Die No Sirs ) . 

தாதாக்கள்,  அடியாட்கள் மோதிக் கொள்ளும் ஒரு களம். 

தனக்குப் பார்க்கப் போன பெண் (யாமினி சந்தர்) , தன் நண்பனை (மாறா) விரும்புவதை அறிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்கும் உயிர் நண்பன் ஒருவன் (ரிஷி) . 

திருமணம் செய்து கொண்ட நண்பன் மீது, தங்களுக்கு தலைமை தாங்கும் தாதாவின் எதிரியான இன்னொரு தாதாவின் மைத்துனனை கொன்ற வழக்கு இருக்கிறது . எதிரி தாதா கொடுத்த அழுத்தம் காரணமாக கொலை செய்த நபர்களை ஜெயிலுக்குப் போய் இருந்து விட்டு வரச் சொல்கிறார் லோக்கல் ஏரியா தாதா. கல்யாணம் ஆன புதிதில் நண்பன் ஜெயிலுக்குப் போக வேண்டாம் என்று , மாற்றாக தானே ஜெயிலுக்குப் போகிறான் கல்யாணம் செய்து வைத்த நண்பன். 

ஜெயிலுக்குப் போகும் தியாகி நண்பனின்  அம்மாவுக்கு (ஜானகி சுரேஷ்) இதில் விருப்பம் இல்லை என்றாலும் தம்பி ( உதய் கார்த்திக்) அண்ணனின் நட்பையும் நண்பனையும் மதிக்கிறான். அந்தத் தம்பிக்கு ஒரு காதலி (சாய் பிரியா தேவா) 

தனக்காக நண்பன் ஜெயிலுக்குப் போன நிலையில் திருந்தி வாழ முயல்கிறான் கணவன் . 

ஆனால்  ஒரு நிலையில் லோக்கல் தாதாவுக்கும் எதிரி தாதாவுக்கும் ஒரு வியாபார ஒப்பந்தம் வர, அந்த எதிரி தாதா வீட்டுக்கு  , திருந்தி வாழும் நண்பனையே துணைக்கு அழைத்துப் போகிறான்  உள்ளூர் தாதாவின் கையாள். 

அங்கே அந்த தாதாவின் கையாள் (தாராசீலன்) உண்மையை சொல்ல , எதிரி தாதா  வாளை எடுக்க , சில இழப்புகள் ஏற்பட  அதன் விளைவாக , ஜெயிலுக்குப் போன நண்பனின் தம்பி களம் இறங்க நடந்தது என்ன என்பதே இந்த டை நோ சார்ஸ் (எனக்கு மரணம் இல்லை அய்யாமார்களே .. என்று பொருள். டைனோசார் பற்றிய வசனம் , காட்சிகளும் படத்தில் வருது )

இந்தக் கதைக்கான களத்தை பின்புலத்தை கட்டமைப்பதில் அபார வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் எம் ஆர் மாதவன் . சிறு சிறு கதாபாத்திரங்கள் வரை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் முகங்களும் அவர்களிடம் வேலை வாங்கி இருக்கும் விதமும்  அட்டகாசம் .

பெரும்பாலும் கசகசவென்று  கூட்டமும் கும்பலும் குழுவுமாக ஆட்கள் நிறைந்து கிடக்கும் காட்சிகளே படம் முழுக்க வருகிறது . அதை இயக்குனர் கையாண்டு இருக்கும் விதம் அருமை என்றால் ஜோன்ஸ் வி ஆனந்தின் கேமரா தன் பங்குக்குப் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறது. 

வலம்புரி நாதனின் கலை இயக்கமும் பாராட்டுக்குரியது 

உதய் கார்த்திக் படம் முழுக்க உற்சாகமாக நடிக்கிறார் . கேரக்டராகவே வாழ்கிறார் மாறா . ரிஷி அவ்வளவு பொருத்தம். வித்தியாசமான தோற்றம் முக பாவனைகளில் ஈர்க்கிறார் யாமினி சந்தர் . ஜானகி சுரேஷ் சிறப்பு. சாய் பிரியா தேவா வழக்கமான சினிமா கதாநாயகியாக கவனம் கவர்கிறார் . 

எதிரி தாதா கிளியப்பனாக நடித்து இருக்கும் பாபு  மிரட்டுகிறார் .  உள்ளூர் தாதாவாக நடித்து இருக்கும்  மானக்ஷா அப்படியே இருக்கிறார்  

முதலாளி தாதா அடித்தாலும் உதைத்தாலும் வாங்கிக் கொண்டு கொலைகாரனைக் காட்டிக் கொடுக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் அசத்தி இருக்கிறார் தாரா சீலன். 

லாஜிக் Die yes Sirs என்று சொன்னாலும்,  கல்யாணமான நண்பன் எதிரி தாதா வீட்டில் சந்தேகத்துக்கு ஆளாவதில் துவங்கி மாட்டிக் கொள்ளும் காட்சிகள் வரை இதயத் துடிப்பை எகிற வைக்கிறார்கள் அதிரி புதிரி ஏரியா அது .

அதற்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் தேவையான காட்சிகள் வசனனங்களை மட்டும் வைத்து ஒரு திரைக்கதை செய்து இருந்தாலே சும்மா தெறிக்க விட்டிருக்கலாம் .

ஆனால் அந்த சூழலையும்  சிறப்பாகக் கையாளத் தெரியாமல் அதற்குப் பிறகும் சரியான திரைக்கதை இல்லாமல் படம் தறிகெட்டுப் போகிறது . 

இன்னொன்று … படம் முழுக்கப் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் . பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் முடிந்து நாம் வீட்டுக்கு வந்த பிறகும் தியேட்டரில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். முடியல . மியூசிக் டைரக்டர் போபோ சசியை எல்லாம் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு வார்த்தை தப்பா பேச முடியாது. எங்கயாவது கேப் விட்டால்தானே அவர் வாசிக்க முடியும்?

ஒரு படத்தில் வசனம் நீக்கமற நிறைந்து இருக்கலாம். இந்தப் படத்தில் இருப்பதை விட அதிக வசனம் கூட இருக்கலாம்.  தப்பில்லை. ஆனால் என்ன பேசுகிறோம் என்பது முக்கியம் அல்லவா?

ஒரு நகைச்சுவைக்காக , கைத்தட்டலுக்காக ,  ரசிகர்களிடம் இருந்து விசில் வாங்குவதற்காக கேரக்டர் , சூழல் இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு வெளியே போய் சுவையான வசனங்கள் வைப்பது கூட கமர்சியல் சினிமாவில் தப்பில்லை. ஆனால் வெளியே போனால் சீக்கிரம் திரும்பிடணும் இல்லையா?  இவர்கள் வெளியே போகிறார்கள் . வீட்டை விட்டு நாட்டை விட்டு பூமியை விட்டே வெளியே போய் விடுகிறார்கள். அதனால்தான் வசனங்கள் அவ்வளவு அலுப்பைத் தருகிறது. 

மானசீகமாக இந்த திரைக்கதை வசனத்தை ஒரு உலுக்கு உலுக்கினலே தேவை இல்லாதது எல்லாம் கொட்டி இருக்கும் . பிறகு தேவையான காட்சிகளில் மட்டும் இன்னும் விவரணை அழுத்தம் கொடுத்து கவனம் செலுத்தி இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் 

தவிர காப்பாற்றப்பட வேண்டியவனே காசுக்கு கொடூரமாக கொலை செய்தவன்தான் என்பதும் ஒரு பெரிய மைனஸ்.  

எனினும் படத்தில் ஆங்காங்கே வரும் சில திருப்பங்கள் , சுவாரஸ்யங்கள், பாராட்டுக்குரியவை .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *