பற்றிக் கொள்ளுமா’ டீசல்’?
**************************************
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் , ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் , சாய் குமார், அனன்யா , கருணாஸ் ரமேஷ் திலக் , சச்சின் கடேகர் , விவேக் பிரசன்னா , தங்கதுரை, விஜய் டிவி தீனா , நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கும் படம் .
விலை ஏறினால் அப்புறம் பெரிதாக இறங்க வாய்ப்பில்லை என்ற பொருட்களில், தங்கத்துக்கும் திரவத் தங்கம் என்று போற்றப்படும் பெட்ரோலுக்கும் நிரந்தர இடம் உண்டு.
அதுவும் அன்றாட மனிதர்கள் மற்றும் குடிமைப் பொருள் போக்குவரத்துக்கு பயன்படும் பெட்ரோல் டீசலின் விலை உயர்வு எல்லா பொருட்களில் விலை உயர்வுக்கும் காரணமாகி மக்களை வாட்டி வதைக்கும் . எலெக்ஷன் சமயத்திலும் அரசுகளுக்கு பெரிதாக ஏதேனும் அவப்பெயர் ஏற்படும் போதும் மட்டும், கிலோ மீட்டர் கணக்கில் ஏறும் பெட்ரோல் டீசல் விலை ஒரு சில சென்டிமீட்டர் அளவில் இறங்கும். தேர்தல் முடிந்த பிறகோ அல்லது மக்கள் சமாதானம் ஆகி விட்டாலோ மீண்டும் மீட்டர் கணக்கில் ஏறும் . அதில் பழைய சென்டிமீட்டர் அளவு விலை குறைப்பு, ஆவியாகிவிடும்.
பெட்ரோல் டீசல் இவற்றின் தாய்ப் பொருளான குரூட் ஆயிலில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய், கேசோலின், ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் , எல்பிஜி கேஸ், தார் இப்படி பல பொருட்கள் கிடைக்கின்றன .
இந்த எரிபொருட்கள் இப்படி தொடர்ந்து விலை உயர்ந்து மக்கள் தலையில் இடியாக விடிவதற்குள்…
குரூட் ஆயில் முதல் டீசல் வரை பிரித்து எடுத்து பெட்ரோல் பங்குக்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு, பணத்துக்காக மக்களை பெரிய அளவில் பாதிக்கும் மனசாட்சியற்ற செயல்கள்… .
இவற்றை ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனைகளும் கலந்து சொல்லும் படம்தான் டீசல்.
”இந்தப் படத்துக்கு ஏன் டீசல் என்று பெயர் வைக்க வேண்டும். பெட்ரோல் என்றும் வைக்கலாமே/” என்று கேட்டபோது. ”பெட்ரோல் விலை உயர்வு வாகன உரிமையாளர்களை மட்டுமே பெரும்பாலும் பாதிக்கும் . ஆனால் டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களும் விலையேறி , நடந்து போகிறவர்கள், பஸ்ஸில் ;போகிற ஆட்களையும் அது பாதிக்கும்” என்று இயக்குனர் சண்முகம் முத்துசாமி சொன்னது சரியான பதில் தான் .
1979 ஆண்டு (தமிழகத்தில் எம் ஜி ஆர் ஆட்சி. , டெல்லியில் ஜனதா கட்சியின் சார்பில் மொரார்ஜி தேசாயும் அப்புறம் சரண் சிங்கும் பிரதமர்களாக இருந்த வருடம் ) சென்னையில் திருவிற்றியூரில் இருந்து எண்ணூர் வரை பிரம்மாண்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன . பல கிலோ மீட்டர் நீளம் உள்ள அந்தக் குழாய்கள் மண்ணுக்கு அடியில் பாதிக்கப்பட்டாலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டும் அது தரைக்கு மேலே இருக்கும் . கப்பலில் இருந்து வரும் குரூட் ஆயில் அங்கிருந்து குழாய் வழியாக அனுப்பப்பட்டு பின்னர் சேகரிக்கப்பட்டு பெட்ரோல் டீசல் இவை எல்லாம் பிரிக்கப்படும் .
இது நடைமுறைக்கு வந்த காரணத்தால் அந்த ராட்சஷ குழாய் இருக்கும் அந்தப் பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது . வறுமை சூழ்கிறது .
இதனால் கோபம் கொண்ட ஒரு நபர் (சாய் குமார்) சில மீனவர்கள் உதவியோடு , நிலத்துக்கு மேல் இருக்கும் குரூட் ஆயில் குழாயில் இருந்து குரூட் ஆயிலை பல்லாயிரக்கணக்கான லிட்டர் அளவில் திருடுகிறான் .
அந்த நபரின் நண்பன் ஒருவன் அவனுக்காக உயிரையே விட, அந்த நண்பனின் மகனை சொந்த மகனாக வளர்க்கிறான் . வளர்ப்பு அப்பா மேல் சொந்த மிகுந்த பாசமாக இருக்கும் அந்த மகன் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க,(ஹரீஷ் கல்யாண்) அவன் ஆயில் கடத்தலில் வளர்ப்பு அப்பாவுக்கு உதவியாக இறங்க , மேலும் சிறப்பாக பெரும் அளவில் கடத்தல் நடக்கிறது .
பல்லாயிரக்கணக்கான லிட்டர்களில் கடத்தப்படும் குரூட் ஆயில் பம்பாயில் பெரும் தொழில் அதிபராக இருக்கும் பதானி… , சாரி, சாரி,பதான் (ஆமா .. அதான்.) என்பவருக்கு அனுப்பப்பட , அவர் குரூட் ஆயிலை பிரித்து மற்ற பொருட்களை விற்று அவர் லாபம் பார்த்துக் கொண்டு, இவர்கள் அனுப்பிய குரூட் ஆயில் அளவுக்கு மட்டும் பெட்ரோல் டீசலை மட்டும் , ஆயில் திருடும் நபர்களுக்கு அனுப்புவார் .
இந்த பெட்ரோலும் டீசலும் பெட்ரோல் , எரிபொருள் துறையால் கொடுக்கப்படும் பெட்ரோல் டீசல் அளவுக்கு அப்பாற்பட்டு, நேரடியாக பெட்ரோல் பங்குக்கு நாயகனாலும் வளர்ப்பு அப்பாவாலும் அனுப்பப்படும். அதில் அரசுக்கு பணம் போகாது என்பதால் , அதில் கிடைக்கும் பணம் பெட்ரோல் பங்க் முதலாளிகள், கடத்தல் நாயகர்கள் , மும்பை பதானி … மறுபடியும் சாரி பதான், ஆகியோருக்கு போகும் .
வளர்ப்பு அப்பாவுக்கும் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த நாயகனுக்கும் வரும் லாபத்தில் பெரும்பகுதி, இந்த குரூட் ஆயில் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களுக்கு போய்ச் சேரும் .
இது தவிர விமானத்துக்கு பயன்படும் ஒயிட் பெட்ரோலை முப்பது டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைய வைத்து அதை ஐஸ்கட்டி போல மாற்றி , மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கட்டி என்று காட்டி அதையும் கடத்துகிறான் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த நாயகன்.
இந்த நிலையில் இந்த குரூட் ஆயில் கடத்தலில் தானும் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறேன் இன்னொருவன் (விவேக் பிரசன்னா) . அவனுக்கு பக்க பலமாக இருக்கிறார் ஆணவம் பிடித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (வினய் ராய். – போலீஸ்காரர் என்று சொன்னாலே புரியுமே என்கிறீர்களா? அதுவும் சரிதான்)
அவன் ஆசைப்படுவதில் கூட தப்பில்லை , கேசரி பொடியைக் கலந்து கலப்பட பெட்ரோல் தயாரித்து நாயகன் மற்றும் வளர்ப்பு அப்பாவின் பெட்ரோல் டீசல் போகும் லாரிகளிலேயே ரகசியமாக அனுப்புகிறான் அவன் . அதனால் வாகனங்களின் என்ஜின் கெட்டுப் போய் பெட்ரோல் பங்குகளில் பிரச்சனை வருகிறது .
நாயகன் மற்றும் வளர்ப்பு அப்பாவிடம் பங்க் உரிமையாளர்கள் கோபப்பட நாயகன் கலப்பட பெட்ரோல் நபரை பிடிக்க, அவனுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் வர , அது நாயகன் இன்ஸ்பெக்டர் பகையாகிறது. இரு தரப்பும் சண்டைகள் நடக்க,
ஒரு நிலையில் மும்பை பதான் சென்னையில் ஒரு மாபெரும் தனியார் துறைமுகத்தை உருவாக்கி, அங்கே குரூட் ஆயில் தட்டுப்பாட்டை உருவாக்கி , டீசல் பெட்ரோலுக்கு மக்களை அலைய விட்டு அரசைப் பணிய வைத்து தனது சூரிய மின்சாரம் திட்டத்தை எல்லா மக்கள் தலையிலும் திணித்து பல கோடி கோடிகள் சம்பாதிக்க திட்டமிடுகிறான் . எனவே கலப்பட பெட்ரோல் நபருக்கு ஆதரவாக மாறுகிறான் பதான் . அவனுக்கு ஆதரவாக குரூட் ஆயில் குழாயில் இருந்து இரண்டாயிரம் கோடிலிட்டர் குரூட் ஆயில் கடத்துகிறான் அந்த கலப்பட பெட்ரோல் நபர் .
பதானியின் திட்டம் நிறைவேறினால் சென்னையில் மீனவர்கள் மீன் பிடிக்கவே முடியாத நிலை ஏற்படும் . நடந்தது என்ன என்பதே டீசல்.
1979 துவங்கி 2014 ஆம் ஆண்டு ( தமிழகத்தில் ஜெயலலிதாவும் பின்னர் ஓ. பன்னீர் செல்வமும் முதல்வர்கள்… மத்தியில் மன்மோகன் சிங்கும் அப்புறம் மோடியும் பிரதமர்கள். ) முடியும் திரைக்கதை.
உண்மையில் மிக புதுமையான சிறப்பான ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகள் நிறைந்த நடந்த, உண்மைகளுக்கு நெருக்கமான, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்கும் கதை .
பொழுதுபோக்கு என்ற போதை மட்டும் கலையின் நோக்கம் அல்ல. நியாயத்துக்குத் துணை நிற்பதும், , மக்களுக்கு பயனளிக்கும் அறிவூட்டும் வேலையை செய்வதும் அதன் பொறுப்புதான் என்ற கருத்தியலுக்கு வலுவூட்டும் கதை .
இதற்காக பல வருடங்கள் ஆராய்ந்து தரவுகளைத் திரட்டி எழுதிய இயக்குனர் சண்முகம் முத்துசாமிக்கு வாழ்த்துகள் .
இனம் மொழி , வர்க்கம் , அப்பாவி ஏழை ஜனங்கள் , வடக்கு தெற்கு வன்மை அரசியல்.. இவை குறித்த சண்முகம் முத்துசாமியின் புரிதலும் தெளிவும் நிலைப்பாடும் கொண்டாடத்தக்கது .
மிக உழைத்து அவர் கொடுத்திருக்கும் பிலிம் மேக்கிங்கும் கவர்கிறது .
நாயகன் ஹரீஷ் கல்யான் தனது ‘டெண்டர்’ காதலன் என்ற என்ற இமேஜில் இருந்து முழு ஆக்ஷன் ஹீரோ என்றும் சந்திரமுகியாக மாறி இருக்கும் படம் இது . நடனம் , சண்டை எல்லாம் அசத்தல். நடிப்பும் மேம்பட்டு இருக்கிறது .
படத்தின் சிறப்பான கதைக்கு கதைக்கு எந்த வகையிலும் உதவாத ஒப்புக்கு சப்பாணி காதலை கேரக்டர் அதுல்யா ரவிக்கு . . அது கூட ஓகே . ஒரு காட்சியில் அதுல்யாவுக்கு ஒரு குளோசப் போடுகிறார்கள் . நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ”ப்ப்ப்ப்ப்ப்ப்பா….வை” பல மடங்கு டெசிபல்களில் நம்மை அறியாமலே சொல்ல வேண்டிய நிலைமை. . அப்படி ஒரு தப்பான குளோசப் . புதுசா சுவருக்கு சுண்ணாம்பு அடிக்க கற்றுக் கொள்பவர் போல அப்படி ஒரு மேக்கப்.
ஒரு பெண்ணென்றும் பாராமல் ….. !
காதல் காட்சிகளை எம் எஸ் பிரபுவும் மற்ற ஆக்ஷன் காட்சிகளை ரிச்சர்ட் எம் நாதனும் ஒளிப்பதிவு செய்தார்கள் என்று இயக்குனர் பேட்டி கொடுத்ததன் அடிப்படையில் பார்த்தால் , ரிச்சர்ட் நாதன் அட்டகாசமான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தின் டோன், கலர், ஃபிரேமிங், அதன் மூலம் கடலையும் கடல் புறத்தையும் உணர் வைப்பது , இரவின் மர்மத்தைக் காட்டுவது என்று அசத்தி இருக்கிறார்(கள்) ரிச்சர்ட் எம் நாதன் (மற்றும் எம் எஸ் பிரபு)
தமிழ் சினிமாவின் சிறந்த நூறு மெலடி பாடல்களை விருப்பு வெறுப்பின்றி தொகுத்தால் அதில் ஒன்றாக வரும் தகுதியில் ” கண்கள் ஏதோ பேச..” (படம் சித்தா) பாடலைக் கொடுத்த திபு நினன் தாமஸ் இசை இந்தப் படத்திலும் அபாரம் .
அது போலவே வரும் மெல்லிசைப் பாடல்கள் குத்துப் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசையிலும் ஈர்க்கிறார் . குறிப்பாக கடலில் நாயகனை சந்தித்து விட்டு நாயகி பிரிந்து வரும் காட்சியில் அந்த பின்னணி இசை பின்னாடியே போய் விடுகிறது மனசு .
தளபதி படத்தில் வந்த ராக்கம்மா கையத்தட்டு பாட்டு ஒரு நிலையில் சட்டென்று மெலடியாகி ”புங்கித்த புருவமும் …”என்று சோபனா வருவாரே அதே பாணியில் தில்லு பாரு ராஜா பாட்டில் அதுல்யாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்
கலை, இயக்கம் சண்டைக் காட்சிகளும் அருமை .
நடிப்பில் சாய் குமார் அசத்தி இருக்கிறார் . வினய் ராய் கேரக்டரின் வன்மை குணத்தை சிறப்பாக சுமந்து ரசிகனுக்கு கடத்துகிறார் . கலப்பட பெட்ரோல் ஆளுக்கு தன் மனைவி கையால் சோறு போட்டு அவள் முன்னாலேயே அவனை அடிக்கும் காட்சி அபாரம் .
சச்சின் கடேகர் நடிப்பும் சிறப்பு .
பத்திரிகையாளர் சந்திப்பில் மூணாறு ரமேஷ் சொன்னது போல நடிகர் சங்கத்தில் பாதிப் பேர் படத்தில் இருக்கிறார்கள் . நாசர் , காளி வெங்கட் , போஸ் வெங்கட் இவர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற நிலைக்கு கொஞ்சம் மேலான கேரக்டர்களில் .. இல்லை இல்லை ரோல்களில் வந்து , ”வாம்மா மின்னல்…. ” போலப் போகிறார்கள் .
இப்படியாக தமிழில் ஒரு பான் இந்தியா படத்தை எடுத்துள்ளார்கள். (தெலுங்கு , இந்தியில் படம் மொழி மாற்றமும் ஆகிறது ) பாத்துக்குங்க பான் கார்டில் எதுவும் பிரச்னை வந்து விடப் போகிறது
தங்கதுரையும் விஜய் டிவி தீனாவும் ”நீ சிரிச்சா சிரி…. சிரிக்கலைன்னா போ. எனக்கென்ன?” என்ற ரீதியில் அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டு போய்விடுகிறார்கள் . ஆடியோ லான்ச் களில் இவர்கள் பேசும்போது வரும் நகைச்சுவை கூட நடிக்கிற படங்களில் ஏன் வருவது இல்லை என்ற ரகசியம் மட்டும் நமக்குப் புரியவே இல்லை
படத்தின் பெரிய பிரச்சனை திரைக்கதைதான் .
இதுபோன்ற சமூக அக்கறை உள்ள கதைகளைக் கொண்ட படங்களில் முதலில் எதைப் பற்றிய படம் என்பதை லேசாக கோடு போலக் காட்டி விட்டு ,
ஒரு வணிக ரீதியான படத்துக்கு தேவையான காதல் செண்டிமெண்ட் பாசம் எல்லாவற்றையும் தேவைப்படும் அளவுக்கு மட்டும் சட்டு புட்டென்று காட்டி விட்டு ,
மக்களை ஈர்க்கிற, மக்களுக்கு முக்கியமாக சொல்ல வேண்டிய , ஆரம்பத்தில் சற்றே சொல்லி விட்டு வந்த முக்கியக் கதைக்கு வந்து விட வேண்டும் . அப்படி வந்து விட்டால் , விட்டால் அப்புறம் திசை மாறாமல் பரபரவென்றோ அழுத்தமாகவோ சரியான பாதையில் திரைக்கதை பயணிக்க வேண்டும் .
ஆனால் இந்தப் படம் ஆரம்பக் காட்சிகளில் ஆர்வத்தை தூண்டி விட்டு அப்புறம் ஆயிரம் முறை ரசிகர்கள் பார்த்த வழக்கமான சினிமாக் காட்சிகள் எனும் கடலில் மிதக்க ஆரம்பித்து விடுகிறது . இப்படி முதல் பாகமே சுரத்துக் குறைய இரண்டாவது பாகத்தில் கொஞ்சம் சுரத்து அப்புறம் வழக்கமான காட்சிகள் என்று படம் போகிறது .
சாப்பாட்டு தட்டில் ஊறுகாய் இருக்க வேண்டிய அளவு சாதமும், சாதம் இருக்க வேண்டிய அளவுக்கு ஊறுகாயும் இருந்தால் எப்படி இருக்கும் ?
ராமாயணத்தில் சீதையைப் பார்த்து வரும் அனுமன் ராமனிடம் ”சீதையைக் கண்டேன்” என்று சொல்லவில்லை . ஏனெனில் சீதையை என்று சொல்லும் அந்த ஒரு நொடி நேரத்தில் கூட ராமன் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதறக் கூடாது என்ற அக்கராய். அதனால்தான் கண்டேன் சீதையை என்று முதலில் கண்டேன் என்ற வார்த்தையை சொல்வான் . ராமன் மேல் அனுமனுக்கு இருந்த அக்கறை ரசிகன் மேல் திரைக்கதை ஆசிரியருக்கு இருக்க வேண்டும் .
இந்தப் படத்துக்கு பலமாக இருக்கும் விஷயங்கள் சில நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டு விடப்பட , வழக்கமான காட்சிகள் நீட்டி முழக்கி சொல்லப்படுகின்றன . அதிலும் சில முக்கிய விஷயங்கள் பின்னணி குரலில் கடப்பது அநியாயம் .
உண்மையின் அடிப்படையில் சொல்லப்படும் கதைகளில் காட்சிகளும் நம்பகத்தன்மை இருந்தால்தான் அது ரசிகனை படத்துக்கு நெருக்காமாக இருக்கும் . இரண்டாயிரம் கோடி லிட்டர் குரூட் ஆயிலை படத்தில் இரண்டு குளோசப்களில் மட்டும் வரும் காளி வெங்கட் கேரக்டர் ஒரு இரவுக்குள் போட்களில் ஏற்றி கடலுக்குள், அதுவும் யாருக்குமே தெரியாமல் ரக ரக ரக ரகசியமாக கடத்தி விடுகிறது என்பது காதில் பூமாலையே போடும் கதை .
இரண்டாம் பகுதியில் எமோஷனலாக வர வேண்டிய காட்சிகள் மேட்டர் ஆப் ஃபேக்ட் ஆகக் கடக்கின்றன . எனவே ஒரு நிலையில் படத்தை எப்ப முடிப்பாங்க என்ற கேள்வி எழுகிறது .
தவிர இது 2014 லேயே படத்தில் சொலப்படும் பிரச்சனை பாதிக்கு மேல் முடிந்தது . இப்போ இவ்வளவு மோசம் இல்லை என்பதும் இந்தப் படத்துக்கு ஒரு பலவீனமே . இப்படி எடுக்கும் போது இன்றைக்கு அதன் விளைவு என்று கனெக்ட் செய்வது முக்கியம் . அதுவும் இல்லை.
இப்படியாக வினய் ராயை விடவும் விவேக் பிரசன்னாவை விடவும் இந்தப் படத்துக்கு பெரிய வில்லன் திரைக்கதைதான் . ஒருவேளை இந்தப் படம் மக்களின் நல்லாதரவைப் பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் திரைக்கதைதான் .
மொத்தத்தில் டீசல் படம் .. ஒரு வெற்றிப் படத்துக்கு நல்ல கதையைப் போலவே சிறப்பான திரைக்கதை முக்கியம் என்பதற்கான பாடம் .