மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில் நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம்
இந்தயாவில் இருந்து கோகினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணிக்கு போன வரலாறு பலருக்கும் தெரியும் .
இந்தப் படத்தின் கதையின்படி அப்படிப் போனது ஒரு வைரம் அல்ல இரண்டு வைரம். ஒரு வைரத்தை மகாராணிக்கு கொடுத்த பிரிட்டிஷ் அதிகாரி அடுத்த வைரத்தை தானே அமுக்கிக் கொள்கிறார் . அது ரகசியமாகவே இருந்து , பின்னாளில் இந்திய அரசியல்வாதியின் பினாமியாக லண்டனில் உள்ள ஒரு நபர் கைக்கு வருகிறது . அதை இந்தியாவுக்கு கடத்தி வரும் வழியில் அதைக் கைப்பற்ற ஒரு போலீஸ் அதிகாரி திட்டமிடுகிறார் .
ஆனால் அதற்கு முன்பே அதை ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி அமுக்கிக் கொள்கிறார் . அவரிடம் இருந்து அதை திருட போலீஸ் அதிகாரி நினைக்கிறார் .
அதற்கு ஒரு எமகாதகன் வேண்டும் (?) என்பதால் எம் எல் எம் , பக்தி, பேச்சுத் திறமை இவற்றின் மூலம் பலரை ஏமாற்றி காசு சம்பாதிக்கும் ஒரு எமகாதகனை (நட்டி நடராஜ்) நியமிக்கிறார்கள் .
கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் இருந்து அதையும் பணத்தையும் எடுக்கும் அவன் , வைரத்தை ஓரிடத்தில் புதைத்து விட்டு போலீசிடம் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு வைரம் இல்லை என்கிறான் . எனினும் அவனை நம்பாத போலீஸ் அடி உதை என்று பின்னி எடுக்கிறது .
அதை எல்லாம் தாங்கி சில மாதங்கள் கழித்து விடுதலை ஆகி, வைரத்தைப் புதைத்த இடத்தில் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய சாமியார் ஆசிரமம் இருக்கிறது . அது எம் எல் ஏ (முத்துராமன் ) கண்ட்ரோலில் இருக்கிறது .
எம் எல் ஏ மகளை (ஷாலினி) காதலிக்கும் ஒருவன் (முகேஷ் ரவி) அதற்காக எம் எல் ஏ விடம் உதவியாளனாக இருக்கிறான் . ஆனால் எம் எல் ஏ விடம் இருந்து எமகாதகன் பணத்தை திருட , உதவியாளனை விரட்டி அடிக்கிறார் எம் எல் ஏ .
அந்த இளைஞனையும் தன்னிடம் ஏமாந்த மாதிரியே மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு நபரையும் ( சிங்கம் புலி ) துணையாக வைத்துக் கொள்ளும் எமகாதகன் , தான் இமயமலையில் இருந்து வந்த சாமியார் என்று சொல்லி அந்த ஆசிரமத்தை கையில் எடுக்கிறான் .எம் ஏ ஏ வையும் நம்புகிறான் . அவரது பெரும்பணத்தை சாமியார் வசம் கொடுக்கிறார் . வாய்ப்புத் தேடி வந்த ஒரு சீரியல் நடிகையை வளைக்கிறார் சாமியார் . சாமியாரை அம்பலப்படுத்த பணத்துக்காக பிரபலங்களின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் ஒரு யூ டியூபர் ( டி எஸ் ஆர்)
தான் வைரத்தைப் புதைத்த இடத்தில்தான் இப்போது ஆசிரமத்தின் முக்கிய சிலை இருப்பதை அறிந்த சாமியார் ஒரு நள்ளிரவில் அந்த கருவறையை உடைத்து தோண்டிப் பார்க்க அங்கே தான் புதைத்த வைரம் வைக்கப்பட்ட பெங்குவின் பொம்மை இல்லை.
அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் .
எம் எல் எம் சீட்டிங், ஏமாற்று சாமியார் என்று யார் வந்தாலும் மக்கள் நம்புவது , பேச்சுத்திறமை உள்ள ஓர் அயோக்கியன் எந்த சூழலிலும் தான் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கிறான், அரசியல்வாதி சாமியார் உறவு , சாமியார் லீலைகள் என்று படத்தின் அடிப்படை விஷயங்கள் சுவாரசியமானவையே
சதுரங்க வேட்டையை ஞாபகப் படுத்தும் இந்தப் படம் ( ஹீரோயிக் வில்லன் அதே நட்டி நடராஜ் என்பதால். அதனால்தான் அவரை ஹீரோவாகவே போட்டு இருக்கிறார்கள்) எனவே சதுரங்கவேட்டையோடு ஒப்பீடு தானாகவே வருகிறது (ஒருவேளை நாயகன் நாட்டி இல்லை என்றால் கூட இந்த ஒப்பீடு வந்திருக்காது )
இந்தக் காரணத்தாலே அடிப்படையில் திரைக்கதையில் சதுரங்க வேட்டையை மிஞ்சி இதன் திரைக்கதை இருக்க வேண்டும். அது முடியாவிட்டாலும் ஓரளவாது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். ஆனால் சதுரங்க வேட்டை படத்தின் மலிவுப் பதிப்பு இணைப்பு போல ஒரு படம்
ஆனால் ஒன்று. அந்த சதுரங்க வேட்டையில் மிக சாதரணமாக நடித்திருந்த நட்டி நட்ராஜ் இந்த கம்பி கட்ன கதை படத்தில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் .
படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , “22 ஆண்டுகளாக நான் உருவாக்கிய கதை இது” என்றார் சதுரங்க வேட்டை படம் வெளிவந்தே பதினோரு ஆண்டுகள் ஆகிறது . அதற்கு பதினோரு வருடம் முன்பிருந்தே தயாரிப்பாளர் ஆசைப்பட்ட படம் இது எனில் அது ஒன்றும் தப்பு இல்லை. ஆனால் பதினோரு வருடம் முன்பு சதுரங்க வேட்டை என்ற படம்தான் வினோத் என்ற அஜீத் விஜய் இயக்குனரையும் நட்டி நடராஜை ஹீரோவாகவும உருவாக்கிய படம் என்னும்போது , அடுத்த பதினோரு ஆண்டுகள் கழித்து அதே நட்டியை ஹீரோவாகப் போட்டு எடுக்கும்போது திரைக்கதையில் சும்மா தெறிக்க விடும்படி பதினோரு வருடத்தில் எழுத வைத்து இருக்க வேண்டும் . அது இல்லை.
படத்தில் வரும் அடிப்படை விஷயங்கள் இன்றும் சுவாரஸ்யமானவைதான் என்றாலும் முருகானந்தம் திரைக்கதையில் நேர்த்தி அப்டேட்டிங், என்று எதுவும் இல்லை. அவரின் வசனங்கள் சில இடங்களில் வாய் விட்டு சிரிக்கவும் சில இடங்களில் புன்னகைக்கவும் வைக்கிறது . ஆனால் பல நேரம் வசனங்கள் வெகு சாதாரணமாக போகின்றன. ஆனால் அவர் காமெடி என்று ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் . காமெடியே இல்லை. படத்தில் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடம். அந்தக் காட்சிகளை மொத்தமாக தூக்கினால் படத்தின் அதிக நீளம் குறையும் .
இது போன்ற குறைகளால் MRM ஜெய் சுரேஷின் ஒளிப்பதிவு , சதீஷின் இசை இவை பலன் தரவில்லை. கலை சிவகுமார் , இசை சதீஷ், எடிட்டர் பாசில் இன்னும் கொஞ்சம் விடாப்பிடியாக இருந்திருக்கலாம் . கலை இயக்குனர் சிவகுமார் பாராட்டுப் பெறுகிறார் . (அதற்கு தயாரிப்பாளரும் காரணமாக இருந்திருக்கலாம் )
படத்தின் இரண்டாவது கதாநாயகனான முகேஷ் ரவிக்கு ஆரம்பத்தில் அழகிகளோடு சிக்ஸ் பேக்கில் குளித்துக் கொண்டு எக்சர்சைஸ் செய்து கொண்டு ஒரு பாட்டுப் பாடுகிறார் . அனேகமாக அவர் தயாரிப்பளருக்கு நெருங்கியவராக இருப்பார் என்று நம்பப்படுகிறது . அது தப்பில்லை.
ஆனால் இந்தக் கேரக்டருக்கு எதுக்கு அந்தப் பாட்டு ? அப்புறம் கனவு என்று சொல்வது எல்லாம் எந்தக் கால உத்தி?
மேலும் அந்த கேரக்டருக்கு எதுக்கு சிக்ஸ் பேக். ஏனெனில் கிளைமாக்ஸ் ஃபைட்டிலும் நட்டிதான் ஸ்கோர் செய்கிறார்
படம் போகப் போக எப்படா முடியும் என்று தோன்றுகிறது . அவ்வளவு நீளம் . அவ்வளவு பேச்சு. சிறு சிறு திருப்பங்களும் முடியும் போது சாதாரணமாக முடிகின்றன .
ஒரு படம் என்றால் அதில் குற்றவாளி வில்லனோ அல்லது ஹீரோவோ ஒரு நிலையில் திருந்தினான் அல்லது தண்டிக்கப்பட்டான் அல்லது செத்துப் போனான் என்று சொல்வது ஒரு படைப்பின் கடமை அல்லவா?
இப்போதெல்லாம் சினிமாவில்தான் நியாயம் ஜெயிக்கிறது . அதையும் கொன்று விட்டால் எப்படி ?
இந்தப் படம் பார்த்து வெளியே வரும் யாருக்கும் , ‘ தக்காளி… யாரை ஏமாத்தியாவது சம்பாதிக்கணும் டா” என்ற வெறி வரவும் வாய்ப்பிருக்கிறது
அதுக்கு எதுக்கு தம் பிடித்து கம்பி கட்டணும்?
எனினும் இதன் அடிப்படைக் கதை சுவாரசியமானதுதான் . இந்த மாதிரி கதைன்னா ரொம்ப பிடிக்கும் என்பவர்கள் இந்தப் படத்துக்கு போய் வரலாம்.
மொத்தத்தில் கம்பி கட்ன கதை .. நம்பி பணம் (டிக்கெட்) கட்டுவது உங்க விருப்பம்