ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க, நட்டி என்கிற நடராஜ், ராஜாஜி, ராதாரவி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிப்பில்,
ராமு செல்லப்பா எழுதி இயக்கி இருக்கும் படம் எங்கிட்ட மோதாதே. நட்போடு நெருங்கலாமா ? பார்க்கலாம் .
கமல் நடித்த நாயகன் திரைப்படமும் ரஜினி நடித்த மனிதன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியான 1980களின் மத்தியில் நாகர் கோவிலில் துவங்கி திருநெல்வேலியில் தொடரும் கதை
பட ரிலீஸ் சமயத்தில் ஹீரோக்களுக்கு கட் அவுர் பேனர் வரைவது உட்பட சுவர் விளம்பரங்கள் வரையும் பெயிண்டர் வேலை பார்க்கும் நண்பர்கள் இருவர் .
அதில் ஒருவன் (நடராஜ்) ரஜினி ரசிகன் . இன்னொருவன் (ராஜாஜி) கமல் ரசிகன்.
கமல் ரசிகனின் தங்கை (சஞ்சிதா ஷெட்டி) ரஜினி ரசிகனை காதலிக்க அவனுக்கும் பதில் காதல் . கமல் ரசிகனை காதலிக்கும் ஒரு பெண் (பார்வதி நாயர்).
அங்கு உள்ள முக்கியமான தியேட்டர் அதிபர் கம் திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரமுகர் கம் வணிகர் சங்கப் பிரமுகர் கம் அரசியல்வாதி ஒருவருக்கு ( ராதாரவி) வலதுகரமான இருப்பவன் ஒரு ரவுடி (விஜய் முருகன்).
அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை சச்சரவு தகராறுகளில் உள்ளே நுழைந்து குழப்பி இரு தரப்பையும் ஏமாற்றி காசு பார்ப்பது அந்த ரவுடியின் பழக்கம் .
ஒரு நிலையில் ஊரில் பலம் பெரும் ரஜினி கமல் ரசிகர் மன்றங்கள், மக்களுக்கு இடையேயான சண்டை சச்சரவுகளை இலவசமாக தீர்த்து வைத்து நல்ல பெயர் எடுக்க,
வருமானம் மற்றும் மரியாதை பாதிக்கப்படும் ரவுடி அதற்கு காரணமான இந்த பேனர் வரையும் நண்பர்களைக் குறி வைக்கிறான் .
அரசியல் பிரமுகரிடம் நண்பர்கள் பற்றி ரவுடி போட்டுக் கொடுக்க அவர்களுக்கு பிரச்னை வருகிறது இதற்கிடையில் நண்பர்களுக்குள்ளும் சண்டை வர , அந்த பகையை தாதா பயன்படுத்திக் கொள்கிறான் .
அரசியல்வாதியை மீறி ரவுடி செயல்பட, ரஜினி ரசிகனை கொலை செய்யும் சதிக்கு அவனது நெருங்கிய நண்பனான கமல் ரசிகனே துணை போகும் சூழல் ஏற்பட ,,
என்ன முடிவு வரும் என்பது சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன ?
விளம்பரம் வரைபவர்கள் ப்ளஸ் தீவிர ரஜினி – கமல் ரசிகர்கள் என்ற proffession of the charectors மற்றும் அதனால் விளையும் பின்புலம் வித்தியாசமான விஷயம்.. .தாராளமாக சபாஷ் போடலாம்
ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்துள்ளார்கள் என்பதில்தான் பிரச்னையே . முழுக்க முழுக்க பார்த்துப் பழகிய காட்சிகள் மற்றும் கதைப் போக்கு .
ரஜினி ரசிகராக நட்டி நன்றாக நடித்துள்ளார் .கிளைமாக்சில் ரஜினி ஸ்டைலும் செய்கிறார் . கமல் ரசிகராக வரும் ராஜாஜியும் ஒகே .
நாயகிகளில் சஞ்சிதா ஷெட்டி ஜஸ்ட் ஒகே . பார்வதி நாயரை சகித்துக் கொள்ள முடியவில்லை .
எண்பதுகள் காலகட்டம் என்றாலும் திருநெல்வேலிப் பெண்கள் என்ன பல் துலக்காமல் தலையில் வேப்பெண்ணை தேய்த்துக் கொண்டு,
முகத்தில் எண்ணெய் வழிய இளித்துக் கொண்டா இருந்தார்கள் ? என்ன கணக்கோ?
வில்லனாக வரும் விஜி முருகன் நடிப்பில் மிரட்டுகிறார்
நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் இனிமை.. அந்த ரஜினி ஸ்டைலில் வரையும் கிம்மிக்ஸ் காட்சிகள் கலந்த பாடலும் நல்ல ஐடியா . சபாஷ்
ஆனால் அவை தேவையில்லாத இடங்களில் ஆஜர் ஆவதுதான் பரிதாபம் . விளைவு ? படத்தின் கொஞ்ச நஞ்ச ஸ்பீடுக்கும் பிரேக் போடுகின்றன அந்த பாடல்கள்
ரஜினி கமல் ரசிகர்கள் இருவருக்கும் பிரச்னையில் சம இடம் கொடுத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடி இருக்கலாம் . ஆனால் கமல் தரப்புக் காட்சிகள் கம்மியாகவும் டம்மியாகவுமே இருக்கின்றன.
படம் எப்படி முடியும் என்பது முக்கால் மணி நேரத்துக்கு முன்பே வெகு ஜன ரசிகனுக்கு புரியும் நிலையில்தான் திரைக்கதை இருக்கிறது என்பதால் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை .
சக்தி வாய்ந்த — குற்றங்குறை இல்லாத ஹீரோவாக ரஜினி ரசிகன் இருப்பதால் அவனை போட்டுத் தள்ள செய்யப்படும் சதித் திட்டங்கள் எல்லாம் எந்த படபடப்பையும் ஏற்படுத்தவில்லை .
இன்று நாற்பது வயதுக்கு குறைவானவர்கள் எந்த வகையயிலும் தன்னை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியாத வகையில்,
முழுக்க முழுக்க அந்த காலகட்டப் படமாகவே இருக்கும் இந்தப் படத்தில் இன்றைய ரசிகனை ஈர்க்க எந்த விசயமும் இல்லை என்பதுதான் சோகம் .
பொது சமூகத்ததில் நிகழும் விசயங்களின் அடிப்படையில் ஒரு பீரியட் படம் உருவாக்கப்பட்டால்
படத்தின் துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ ,அந்த கால கட்ட பீரியட் கதையால் நிகழ் காலத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும் .
அப்படி சொன்னால்தான் இந்த தலைமுறை ரசிகனும் அந்த படத்தோடு தன்னை தொடர்புப் படுத்திக் கொள்வான் . இல்லாவிட்டால் படத்தோடு ஒன்ற மாட்டான். அன்னியப்பட்டு படத்தைப் புறக்கணித்து விடுவான்
(இதிகாசம், புராணம், வரலாறு , மக்கள் பலரும் அறிந்த செவி வழிக் கதைகள், ஏற்றுக் கொள்ளப்படும் உண்மைக் கதைகள் மற்றும்
நட்பு காதல் உறவு போன்ற அக வாழ்வு விசயங்கள் மட்டும் அடங்கிய கதைகள் ஆகியவை இதில் விதி விலக்கு. இவை பீரியட் படமாக வரும்போது ,
அந்தப் படத்தின் திரைக்கதையில் நிகழ் காலத்தோடு தொடர்புப் படுத்தும் சம்பவங்கள் தேவை இல்லை )
அப்படி இன்றைய தலை முறை ரசிகனிடம் இருந்து அன்னியப்பட்டதாலேயே ஒரு குறிப்பிட்ட காலகட்ட சமூகப் பிரசனைகளை பிரதிபலித்து வந்த ஜீவா, உறியடி போன்ற படங்கள்,
வெகு ஜன ரசிகனை ஈர்க்கவில்லை (அடிப்படைப் பிரச்னை இன்னும் பெரிய அளவில் மாறாமல் இருப்பதால் மாவீரன் கிட்டு தப்பியது)
எனவே உறியடி, ஜீவா அளவுக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தாத இந்த எங்கிட்ட மோதாதே படம் ரசிகனை எப்படி ஈர்க்கும் ?
திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாமே .
எங்கிட்ட மோதாதே … புல் தடுக்கி பயில்வான்!








