
ட்ரீம்ஸ் ஆன் ஃபிரேம்ஸ் சார்பில் தங்கமுத்து , பி கே சுந்தர், கருணா, நடராஜ் ஆகியோர் தயாரிக்க,
முகில், நயனா, சரண், வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் நடிப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி நட்டிகுமார் இயக்கி இருக்கும் படம் எவனவன் . ரசிகனுக்கு எவன் இவன்? பார்க்கலாம் .
காதலி (நயனா) குளிக்கும் காட்சியை மொபைல் போனில் காதலன் (முகில்) படம் எடுத்து வைத்திருக்க, அது தொலைந்து போகிறது . அதை எடுக்கும் ஒருவன் (சரண்) அதில் இருக்கும் வீடியோவைப் பார்த்து விடுகிறான்.
”நான் சொல்கிற வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் உன் காதலியின் வீடியோவை யூ டியூபில் ஏற்றி உலகம் பார்க்கச் செய்வேன்” என்கிறான் .
காதலியின் மானம் காப்பாற்ற வேண்டி அப்படியே செய்கிறான் காதலன்.
மனைவி பற்றிய தப்பான எண்ணத்தை அதிகாரிக்கு ஏற்படுத்துவது , ஒரு அரசியல்வாதி மீது செருப்பு வீசச் சொல்வது இப்படி பல வேலைகள் .
அவன் ஏன் அப்படி செய்யச் சொல்கிறான் ? அந்த நபர்களுக்கும் போனை எடுத்தவனுக்கும் என்ன சம்மந்தம்? மேற்படி செயல்களை செய்ய அவன் , இந்தக் காதலனை பயன்படுத்துவது ஏன் என்பதே எவனவன் .
கேமரா வைத்த செல்போன், கொஞ்சம் வக்கிர மனம், கொஞ்சம் அலட்சியம் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை சொல்லும்படியாக ஆரம்பிக்கும் படம் ,
ஒரு நிலையில் வில்லன் போல தெரிந்தவனை நல்லவனாக காட்டும் விதம் அருமை . சின்னச் சின்ன திருப்பங்கள் ஈர்க்கிறது
நடிப்பில் முகிலும் சரணும் சிறப்பு . அதே போல விசாரணை அதிகாரிகளாக வரும் வின்சென்ட் அசோகன் , சோனியா இருவரும் நன்றாக நடித்துள்ளனர் . நாயகி ஓவர் டோஸாக இருக்கிறார் . பாடல்கள் ஈர்க்கவில்லை .
எடுத்துக் கொண்ட கதையை தன்னால் முடிந்தவரை சிறப்பாக சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் நட்டிகுமார் .
ஆனால் வெற்றிக்கு அது போதுமா?