இந்த நிகழ்வில் ஆர்.பார்த்திபன் “இந்த 33 வருடங்களில் என்னிடம் கிட்டத்தட்ட 100 உதவி இயக்குநர்கள் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் ஸ்பெஷலானவர் எழில். அதனால் தான் எஸ்.எழில் என அவரது பெயரிலேயே ஸ்பெஷல் இருக்கிறது. துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படம் பண்ணுவார் என்று தெரியாத அளவிற்கு என்னிடம் இருந்த போது அமைதியாக இருந்தார்” என்றார்.

ஆர்.கே செல்வமணி பேசும்போது, “டைரக்டர் . யூனியனுக்கு ஒரு இயக்குனர் வந்துவிட்டாலே கிட்டத்தட்ட ரிட்டையர்ட் ஆனது போல தான். அந்த சமயத்தில் ஒரு கதை சொல்லி இது எப்படி இருக்கு என்று கேட்டார். மிகச் சிறப்பாக இருந்தது. அந்த படம் தான் மனம் கொத்தி பறவை.
என்னிடம் சொல்லி 45வது நாளில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காபியை முடித்து ஆச்சரியப்படுத்தினார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் படம் பண்ணுவோம் என்று சொல்லக்கூடிய நம்பிக்கையை கொடுத்தவர் எழில்.
இப்போ உள்ள எல்லா ட்ரெண்டிலிருந்தும் மாறி ஒரு புது விதமான ஜானரில் இருக்கிறது. ஒரு ஜானரில் இருந்து இன்னொரு ஜானருக்கு மாறுவது கஷ்டமான விஷயம். யார் மனதும் நோகாமல் அரசியலையே காமெடியாக சித்தரித்து உள்ளார். என்று கூறினார்.
ஜெயம் ரவி பேசும்போது,“எழில் சார் இயக்கிய படங்கள் பல ஹீரோக்களுக்கு வெற்றியையும் அவர்கள் பயணம் செய்வதற்கான ஒரு வழியையும் அமைத்துக் கொடுத்தது. அதே மாதிரி தான் எனக்கும். அவருடைய பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
எஸ்.எழில் என்றால் எதற்கும் ‘நோ’ சொல்லாத எல்லாத்துக்கும் ‘எஸ்’ சொல்லுகின்ற எழில் என்றுதான் நான் சொல்வேன்” என்று கூறினார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது,“இன்றைய சூழலில் ஒரு நடுத்தர பட்ஜெட் படத்தை எடுப்பதும், அதை மார்க்கெட் செய்வதும் எவ்வளவு சிரமம் என்கிற சூழ்நிலையில் அந்த படத்தின் இயக்குனரை வாழ்த்தி ஒரு படத்தை கொண்டு வருவது என்கிற நல்ல மனதுக்காகவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துகள். எழிலை 25 வருடங்களுக்கு முன்பு இருந்து எனக்கு நல்ல பழக்கம். அவர் எப்படி ஒரு நல்ல கமர்சியல் டைரக்டர் ஆனார், தயாரிப்பாளர்களின் இயக்குனர் ஆனார், நடிகர்களுடன் நல்லுறவில் இருக்கிறார் என்றால் இதற்கெல்லாம் அடிப்படையான முக்கியமான காரணமே நான் தான். 25 வருடங்களுக்கு முன்பு எனது படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தார் எழில். அந்த படத்தில் தான் எப்படி படம் எடுக்க கூடாது என சினிமாவை முழுதாக கற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் எடுத்தேன்.
சினிமாவில் நல்லவர்கள் எல்லாம் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படி ஒரு நல்லவரான தம்பி விமலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாகி அவரை முன்னணி நடிகராக உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் விமல் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய பேராசை” என்று கூறினார்
தனஞ்செயன் பேசும்போது,“எழில் சாரின் படங்களில் நடித்த அத்தனை ஹீரோக்களும் வந்திருந்து இந்த விழா இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது பெரிய அளவில் உள்ள விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அவர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றால் அதற்கு இயக்குனர் எழிலும் ஒரு காரணம்தான்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது, “என் மகன் விஜய் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படம் அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதுபோன்று ஒரு பத்து படங்கள் இருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை சொல்வதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி என்னிடம் இயக்குநர் எழிலை அனுப்பி வைத்தார். அவர் கதை சொல்லிவிட்டு அங்கே செல்வதற்குள்ளாகவே நான் போன் செய்து விஜய்யின் தேதிகள் எப்போது வேண்டும் என ஆர்.பி சவுத்ரியிடம் கேட்டேன்.
நான் கதை கேட்கும்போது விஜய்யின் அப்பா என்கிற எண்ணத்தில் கதை கேட்க மாட்டேன். ஒரு சாதாரண பப்ளிக்கின் மன நிலையில் தான் கதை கேட்பேன். ஒரு சின்சியரான உதவி இயக்குநரின் பார்வையில் சில கேள்விகளை கேட்பேன். அப்படி நான் கேட்ட கேள்விகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அதற்காக படத்தில் பதில் சொன்னவர் இயக்குநர் எழில். இத்தனை வருடங்களாக அவர் இந்த திரையுலகில் இருக்கிறார் என்றால், யார் ஒருவர் தாயை மிகவும் உயர்வாக மதிக்கிறாரோ அவரை கடவுள் உயரத்திற்கு கொண்டு செல்வார். இது என் வாழ்க்கையில் நான் பார்த்தது.
இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் நாம் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள். மனதில் இருப்பதை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். படங்களை இன்னும் கதை சிறப்பாக திரைக்கதையுடன் பண்ணினால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்கின்ற பக்குவம் இல்லை தைரியம் இல்லை. அதேபோல ஒரு கதை சொன்னதும் அந்த இயக்குநரை எழுந்து நின்று கட்டிப்பிடித்தேன் என்றால் அது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்தான். ஆனாலும் துப்பாக்கி கதையைக் கேட்ட பிறகு ஒரு உதவி இயக்குநராக அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து ஒரு கேள்வியை கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர் என்னுடைய கேள்விக்கு படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது.
எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை துள்ளாத மனம் துள்ளும் கதை சொன்ன சமயத்தில் கேட்டபோது அந்த படத்தில் அதற்கான பதிலை சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது விஜய் என்ன பெரிய பெரிய சூப்பர் ஸ்டாரா ? இல்லையே.. அந்த கதை அவரை தூக்கிச்சென்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்கும். காரணம் திரைக்கதை.
இளைஞர்கள் நல்ல கதையுடன் வாருங்கள். உங்களுக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய இயக்குநர்கள் தங்கள் படத்தின் ஹீரோக்களை அப்படி வடிவமைக்க வேண்டும். காரணம் இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின் தொடர்கிறார்கள். படத்தில் ஒரு மூன்று நிமிடம் ஆவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என உங்கள் காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
விமல் ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை செய்து கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் மேலே கீழே என மாறியது. சினிமா என்றால் அப்படித்தான்.. சமீபத்தில் ஓடிடியில் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் சீரிஸ் பார்த்தேன். இவ்வளவு பெரிய நடிகனை சினிமா இப்படி விட்டு வைத்திருக்கிறது ? இவ்வளவு பெரிய நடிகரை நானே ஏன் இத்தனை வருடமாக விட்டு வைத்தேன் என வருத்தப்பட்டேன். அப்படி ஒரு நல்ல நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறார் எழில். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று பேசினார்
இயக்குனர் விக்ரமன் பேசும்போது “ துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்துவிட்டு இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என அவரது எடிட்டரிடம் சொன்னேன். இதை கேட்டுவிட்டு மறுநாளே என் வீடு தேடி வந்தார். அதேபோல சவுத்ரி சாரிடம் சூப்பர் குட் பிலிம்ஸில் இந்த படம் நாட்டாமை படம் போல ஹிட் படமாகும் எனக் கூறினேன். அதேபோல ஹிட்டானது. என்று கூறினார்.
இயக்குனர் கே பாக்யராஜ் பேசும்போது,“நகைச்சுவையை யோசித்து உருவாக்குவது என்பதை விட நம்மை சுற்றிலும் உள்ளவர்களை கவனித்தாலே பல விஷயங்கள் கிடைக்கும். கிழக்கே போகும் ரயில் படப்பிடிப்பின் போது மேட்டுப்பாளையம் அருகில் ராதிகாவை வைத்து பின்னணியில் ரயில் போவது போல ஒரு காட்சி படம் பார்க்க ரிகர்சல் எல்லாம் பார்த்து முடித்து விட்டோம். ஆனால் ரயில் வந்த போது அந்த சத்தத்தில் பின்னணியில் ஒலித்த பாடல் கேட்காமல் ராதிகா நடனமாடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். நாங்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அப்போதுதான் ரயில் சத்தத்தில் பாடல் கேட்காதே என்பதை உணர்ந்ததும் எல்லோருக்குமே சிரிப்பு வந்து விட்டது. மறுநாள் காத்திருந்து அதே காட்சியை ரயிலுக்கு சற்று தொலைவில் இருந்தபடி பாடமாக்கினோம். ” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,* “எழில் என்றாலே அழகான பெயர். இளமை புதுமை என்று அர்த்தம். என்னையே ஒரு நடிகனாக்கி இருக்கிறார் என்றால் பாருங்கள். அதுதான் அவருடைய காமெடி சென்ஸ். உங்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். என்னை வச்சு செய்து விட்டார். வாழ்க்கையில் மறக்க மாட்டேன். இப்போதும் இப்போதும் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி சாரை ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என்று எழில் என்னிடம் கூறினார். 25 ஆண்டுகளாக படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். நான் நடிக்க ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடிக்கட்டும் என விட்டுவிட்டு ரிலாக்ஸ் ஆக அமர்ந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு நடிகரின் மீது நம்பிக்கை வைப்பவர்.” என்று கூறினார்.
நடிகர் ரவிமரியா பேசும்போது,“ சிலர் சொல்வது போல எழில் சார் படப்பிடிப்பில் ஜாலியாக அமர்ந்திருப்பார் நாங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருப்போம் என்பதில் உண்மையே இல்லை. எந்த அளவிற்கு நடிகனிடம் வேலை வாங்க வேண்டுமோ அதை சரியா வாங்குவார்.”என்றார்
இயக்குனர் சரண் பேசும்போது, “எழில் 1300 வெள்ளிக் கிழமைகளைத் தாண்டி இந்த இடத்தில் நிற்கிறார். ஒரு இயக்குனர், ஒரு ஹீரோ இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முக்கியமானது. ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையில் திடீரென ஒரு ஹீரோவோ, இயக்குனரோ டக்கென உருவெடுப்பார்கள். அவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழலும் ஏற்படும். கதை தோற்கலாம், ஆனால் இயக்குநர் தோற்க மாட்டார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னார். அது ஒரு அருமையான வார்த்தை. எழில் மட்டுமல்ல எல்லா இயக்குநர்களுக்கும், இடையில் ஒரு தேக்க நிலை வரும். அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது மிக மிக முக்கியம். பிறகு படம் பண்ணுபவர்களுக்கு எஸ்.ஏ ராஜ்குமார் வித்யாசாகர் இசையில் படம் பண்ணும் வரம் கிடைக்க வேண்டும். இரண்டு வரமும் இவருக்கு கிடைத்திருக்கிறது” என்றார்.
இயக்குநர் செல்லா அய்யாவு பேசும்போது,“தேசிங்கு ராஜா படத்தில் தான் எழில் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். உதவி இயக்குநர்களிடம் கோபப்படாத ஒரு இயக்குநர் அவர்.எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் அதை பக்குவமாக கையாள கூடியவர். அவரிடம் இருந்து அதை கற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.

நடிகர் விமல் பேசும்போது,“தேசிங்கு ராஜா படத்தை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் எழில் சாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். சின்ன கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என யாரையும் வேஸ்ட் பண்ண நினைக்க மாட்டார். அனைவருக்குமே டயலாக் கிடைக்க வேண்டும் என நினைப்பார். அவருடன் எத்தனை படம் செய்தாலும் போரடிக்காது. எப்படி சிலரை இயக்குனர்களின் நடிகர் என சொல்வார்களோ அதேபோல எழில் நடிகர்களின் இயக்குனர், தயாரிப்பாளர்களின் இயக்குநர். அவர் ஐம்பதாவது வருடம் பொன்விழா காண வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
நடிகர் சிங்கம்புலி பேசும்போது, “துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நண்பர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக எழிலின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்கிறாயா என கேட்டு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.. ஆனால் ஒருமுறை மட்டுமே சந்தித்து இருந்ததால் எழிலின் முகமும் அவரது பெயரும் மறந்து விட்டது. படத்தின் பூஜையின் போது அவரிடமே சென்று வேறு ஒரு பெயரை கூறி விசாரித்தேன். அதன்பிறகு நாலு நாட்கள் கழித்த பிறகே அவர்தான் இயக்குநர் எழில் என எனக்கு தெரியவந்தது. அப்படி அந்த படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனது” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் எழில் பேசும்போது,“துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு இப்படி ஒரு பங்க்ஷன் தேவையா என நான் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அந்தப் படத்தை போலவே இந்த படத்திலும் நீங்கள் பணியாற்ற வேண்டும், அதற்காகத்தான் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாக வைத்திருக்கிறேன் என்று சொன்னார். எனக்கு சினிமாவை தவிர வேறு வேலை தெரியாது. அதனால் கொடுத்த வேலைக்கு கடுமையாக உழைப்பேன். என்னுடைய முதல் படத்தில் முதல் இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் போல வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
தேசிங்குராஜா படத்தின் முதல் பாகம் அதுவாகவே ஒரு இயல்பான கதையாக அமைந்தது. இரண்டாம் பாகம் என்று வரும்போது முதல் பாகம் போல வருமா என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். அதில் விமல் ஜாலியாக பண்ணியிருப்பாரே தவிர இந்த அளவிற்கு பக்குவப்பட்டவராக எல்லாம் பண்ணி இருக்க மாட்டார். இதில் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். கூடவே ஜனாவும் மிக அற்புதமாக பண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விமல் ஏற்கனவே கதாநாயகனாக உருவாகிவிட்டார். ஒரு நல்ல படத்தில் நடித்தால் ஜனாவும் திறமையான ஒரு பெரிய ஹீரோவாக வருவார் என வாழ்த்துகிறேன். விமல் இந்த படத்திற்குப் பிறகு வேறு ஒரு உச்சம் தொடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செல்வா தான் இந்த படத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேபோல பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு வித்யாசாகர் என்னுடைய இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படத்தைப் போலவே இந்த படத்திலும் சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் ஜனா தான் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். ஆனால் எந்த இடத்திலும் அவரை ஒரு தயாரிப்பாளர் மகன் என நினைக்க வேண்டாம் என என்னிடம் முதலிலேயே சொல்லிவிட்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அமளிதுமளியாக போய்க்கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லோரும் இது என்ன மீன் மார்க்கெட்டா, இவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதற்கு முன் என்னுடைய எந்த படத்திலும் இந்த அளவு கூட்டத்தை வைத்து படம் இயக்கியது இல்லை. ஆனாலும் அவர்களை வைத்து எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த போது அற்புதமாக வந்திருக்கிறது. இந்த படத்திற்காக ஒர்க்ஷாப் வைத்திருந்தேன். அதில் பங்கேற்றவர்கள் எல்லோரும் என்னை அழ வைத்து விட்டார்கள். அப்படி வாய்ப்பு தேடி வருபவர்களை விட்டு விடக்கூடாது என நினைப்பவன் நான். அதனாலேயே என்னுடைய உதவி இயக்குனர்களிடம் அவர்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுங்கள் என கூறியுள்ளேன்.

இப்போது தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப சுலபம். நிறைய தயாரிப்பாளர்கள் வருகின்றனர். ஆனால் அந்த சமயத்தில் ஒரு ஐந்து, ஆறு பெரிய தயாரிப்பாளர்கள் தான் இருந்தனர். புதிய இயக்குனர்கள் சொல்லும் கதை பிடித்திருந்தால் கூட அவர்களை நம்பி படம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் கதை நன்றாக இருந்தால் சவுத்ரி சார் படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தார். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இப்போது ஒளிபரப்பானாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள். ஒரு படம் தலைமுறையை தாண்டியும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய காமெடி படங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றன.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் படங்கள் பண்ணிய சமயத்தில் விஜய், அஜித் இருவரும் வளர்ந்து வந்த நடிகர்கள்.. பூவெல்லாம் உன் வாசம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் இரண்டு வீடுகள் வேண்டுமென கேட்டேன். புதிதாகவே கட்டிக்கொள் என்றார். ஆனால் செட் தான் போட்டு படம் ஆக்கினேன். இந்த படத்தில் அஜித் சார், ஜோதிகா ஜோடி அழகாக இருந்தது என இப்போது கூட சொல்கிறார்கள், அந்த படத்தில் சிவகுமாருக்கு மருமகளாகவே அவர் நடித்திருந்தார்,
இந்த விழா தொடர்பாக விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது உடனடியாக என்னை வரச் சொன்னார். அவரது பழைய படங்கள், இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக எனது பகிர்ந்து கொண்டார். ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். மனம் கொத்தி பறவை படம் பண்ணும் போது சிவகார்த்திகேயனுக்கு அது கிட்டத்தட்ட முதல் படம். எனக்கு அது ஒரு ரீ என்ட்ரி. அந்த படத்தின் பட்ஜெட்டும் என்னிடம் பெரிய அளவில் இல்லை. என்னுடைய கிராமத்திலேயே வைத்து அந்த படத்தை எடுத்தேன். இரவு நேர படப்பிடிப்பின் போதெல்லாம் அங்குள்ள திண்ணையில் தான் படுத்து தூங்குவார் சிவகார்த்திகேயன். அந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகர். அப்போதே அது அவரிடம் தெரிந்தது. அதனால்தான் இன்று அவர் இந்த உச்சத்தை பெற்றுள்ளார்.
என்னுடைய அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் இயல்பாகவே எனக்கும் அது இருக்கிறது. விக்ரம் பிரபு ரொம்பவே அமைதியானவர். பிரபு சார் என்னை தனியாக அழைத்து, நம்ம ஊர் நேட்டிவிட்டி எல்லாம் தெரியாது.. நீ வச்சு வாங்கிக்க என்று சொன்னார். அதேபோல விக்ரம் பிரபுவும் நான் எது சொன்னாலும் அதை சிறப்பாக செய்வார்.
விஷ்ணு விஷால் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு முன்பாக சில கலைப் படங்களில் நடித்திருந்தார். அதனால் என் படத்தில் நடிக்கும்போது முதலில் இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கும் அவருக்கும் செட்டாகவில்லை. இயக்குநர் செல்லாவிடம் சென்று என்னை ஓவராக பந்தா பண்ண சொல்லி சொல்கிறாரே, கொஞ்சம் மடக்கி வாசித்தால் வேண்டாம் வேண்டாம் என்கிறாரே என்று கூறியிருக்கிறார். ஆனால் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்பு எடிட்டிங்கில் படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்ய ஆரம்பித்து விட்டார். படப்பிடிப்பின் கடைசி நாள் என்று என்னிடம் வந்து முதல் நாள் எடுத்த காட்சியை கூட மீண்டும் படமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த அளவிற்கு நடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்.
என் முதல் படத்திலேயே எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைப்பாளராக எனக்கு கிடைத்தது அற்புதமான விஷயம். ராஜ்குமார் நல்ல கவிஞர், கதாசிரியர். அவர் எழுதிய சில வரிகளை பார்த்து அதிர்ச்சியான வைரமுத்து அதை பீட் பண்ண வேண்டும் என எழுதியது தான் இன்னிசை பாடிவரும் என்கிற பாட்டு. துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பின் முதல் நாளன்றே எனக்கு விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இருந்ததால் படபடப்பு இருந்தது அதனால் முதல் தான் முதல் நாளே துட்டு பாடலை படமாக்கினேன்” கூறினார்.
விழாவில், எழில்25 ஆக எழில் சினிமா வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது.
, எழிலின் முதல் பட இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவருக்கு நினைவு கேட்யம் ஒன்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.
தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப் பட்டது.

தஞ்சாவூர் நன்னிலம் ஊரிலிருந்து வந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஊரிலிருந்து சினிமாவுக்கு பெருமை சேர்த்த டைரக்டர் எழிலின் வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப் பட்டது. முடிவில் எழில் தாயார் மேடையில் கண் கலங்கி நின்றது அனைவரயும் கண் கலங்க செய்தது. அந்த நேரம் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி எழில் தாயாருக்கு சால்வே அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தி பேசினார். எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் ஏறி மரியாதை செய்ததும், வருகை தந்திருந்த டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆ.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சரண், உதயகுமார், சுசீந்திரன், நாஞ்சில் அன்பழகன், கதா.க.திருமா,ரங்கனாதன்,ரவிமரி
யா, சிங்கம்புலி, சந்தோஷ் மற்றும் பல டைரக்டர்கள் மேடையில் மரியாதை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.