தீயவர் குலை நடுங்க@விமர்சனம்

அருள்குமார் தயாரிப்பில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,  அபிராமி வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா,  சிவாஜி ராம்குமார், தங்கதுரை, ஜி கே ரெட்டி, பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி நடிப்பில் தினேஷ் லக்ஷ்மணன்  இயக்கி இருக்கும் படம்.  

பிரபல எழுத்தாளர் ஒருவர் (லோகு) மனம் வருந்திய நிலையில் காரில் பயணிக்கும்போது, பைக்கில் வந்து மறிக்கும்  அடையாளம் தெரியாத நபரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுகிறார். வழக்கை விசாரிக்க வருகிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி (வேற யாரு? அர்ஜுன் தான்!) தீவிரமாக விசாரணை நடக்கிறது. 
 
மனநலம் பாதிக்கப்பட்ட (!) அம்மாவுடன் (பிரியதர்ஷினி)  வாழும் இளைஞன் ஒருவன் (பிரவீன் ராஜா) மேட்ரிமோனியல் மூலம் தெரிய வந்த பெண்ணுடன் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) பழகிக் கொண்டிருக்கிறான். 
 
போலீஸ் அதிகாரியின் விசாரணையில் எழுத்தாளர் பிரசுரிக்க விரும்பாமல் தனக்கு மட்டும் எழுதிக் கொண்ட ஒரு நாவல் இருப்பது தெரிய வருகிறது.  அம்மாவுடன் வாழும் இளைஞன் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளருக்கும்(சிவாஜி ராம்குமார்)  எழுத்தாளருக்கும் நட்பு இருப்பதும் தெரிய வருகிறது. அங்கு இருக்கும் வாட்ச் மேன்  ஒருவனும் பக்கத்து சலவைக்கடை நபர் ஒருவனும் போலீசுக்கு உதவுகிறார்கள்.
 
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில மாதங்களுக்கு முன்பு  ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தை மாடியில் இருந்து  கீழே விழுந்து மரணம் அடைந்திருப்பது தெரிய வருகிறது . 
 
அது விபத்தா இல்லை கொலையா? கொலை என்றால் ஏன் ? இல்லை என்றால் வேறு என்ன? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலில் அந்த எழுத்தாளர்மட்டுமின்றி,  மேலே சொன்ன கேரக்டர்கள் ஒரு சிலவும்  ஆபத்துக்கும் விபத்துக்கும் மரணத்துக்கும் கொலைக்கும் ஆளாக, குற்றம் நடந்தது என்ன? யார் குற்றவாளி? யார் ஆடியது நாடகம், கடைசியில் யாருக்கு என்ன நடந்தது? சட்டம் நியாயம் தர்மம் எது ஜெயித்தது? என்பதே படம். 
 
தமிழ் சினிமாவில் படத்தின் பெயரை ஆங்கிலம் மட்டுமின்றி செத்த மொழி செத்து அழுகிய மொழி, செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படும் மொழி… இவற்றில் எல்லாம் வைக்கும் இந்தக் கேடுகெட்ட காலத்தில் இந்தப் படத்துக்கு தீயவர் குலை நடுங்க என்று செ(ழு)ந்தமிழ் பெயர் வைத்து இருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள். 
 
எழுத்தாளர் கொலை செய்யப்படும் ஆரம்பக் காட்சியிலேயே  இயக்குனர் தினேஷ் லக்ஷமணனின்  படமாக்கல், சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு, பரத் ஆசீவகனின் இச , லாரன்ஸ் கிஷோரின் ஒளிப்பதிவு என்று எல்லாமும் சிறப்பு. 
 
இந்த சிறப்பு படம் முழுக்க மேக்கிங்கில் இருக்கிறது சபாஷ் . 
 
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அர்ஜுன்.
 
மனைவியோடு ரெசார்ட்டுக்கு போய் ஒருவன் தங்க , அங்கே அவள் பாத்ரூமில் இருக்கும்போது எவனோ எடுத்த வீடியோ இணையத்தில் வர, அதனால் அந்தக் கணவன் மனைவியை விவாகரத்து தரச்  சொல்லி பிடிவாதம் பிடிக்கும் பிரச்னை,  தன்  கவனத்துக்கு வரும்போது போலீஸ் அதிகாரி அதைத் தீர்த்து வைக்கும் காட்சி  எழுத்தின் கம்பீரம். 
 
எழுத்தாளர் எழுதும் நாவ, ல் அதை கண்டு பிடிக்கும் விதம் இவை கூட சுவாரஸ்யம்தான். 
 
காவேரிக் கறை  என்று அந்த நாவலின் பெயர் எழுதப்பட்டு இருக்க, வழக்கமான இப்போது தமிழ்ப் படங்களில் வரும் எழுத்துப் பிழைகள் போல இதுவும் ஒன்று  என்று நினைத்தால் , கறை  என்று எழுதி இருப்பதற்கு காரணம் சொல்வது சிறப்பு. 
 
ஆனால் நதி என்று பார்த்தால்  உருவாகும் கர்நாடகாவில் இருந்து கடல் சேரும் பூம்புகார் வரை அதன் பெயர் காவிரிதான். கா என்றால் சோலை என்று பொருள் . போகும் இடம் எல்லாம் சோலைகளை விரிப்பதால் அது கா விரி . 
 
காவிரியை புராணக் கதைகளில் பெண்ணாக சொல்ல ஆரம்பித்த பிறகுதான் அது காவேரி என்று மாற்றப்பட்டது. 
 
ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான சிறுமி கேரக்டரில் அற்புதமாக ஜொலிக்கிறார்  பேபி அனிகா. 
 
இப்படி  பாராட்ட விஷயங்கள் இருந்தாலும்  திரைப்படமாக ரசிகர்களைக் கவராத தவருகிறது படம்.
 
ஒரு நிலையில் நாம் பார்ப்பது படம் இல்லை; ஒரு நாவல் படிக்கிறோம் என்ற அளவில் சுருங்கி விட்டது. 
 
இந்த பிராங்க் ஸ்டார் ராகுல் காமெடி என்ற பெயரில் எது எதையோ உளறி பார்ப்பவர்களை வெறுப்பேற்றுகிறார். அவர் என்ன பேசினாலும் காமெடி என்று யார் எப்படி முடிவு செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு தடவை கூட காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.  இதில் ஆன்ட்டி  பிரியர் என்ற கேரக்டர் வேறு சகிக்கவில்லை.
 
அர்ஜுனின் அப்பாவாக இரண்டு காட்ச்சிகளில் நடித்துள்ளார் விஷாலின் அப்பாவான ஜி கே ரெட்டி.
 
படத்தின் ஒரு கேரக்டருக்கு அவ்வளவு முக்கியமான ன் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை  போட்டு இருப்பதால் இடைவேளை திருப்பம் மிக சுலபமாக புரிந்து விடும் அபாயம் இருக்கிறது . ஒரு த்ரில் கதைக்கு பொருத்தமான ஆர்ட்டிஸ்டைப் போடுவது அவ்வளவு முக்கியம். 
 
அதுதான் அப்படி என்றால் ஆன்ட்டி  கிளைமாக்சில் வரும் ஒரு திருப்பம் வேண்டாத வேலை. 
 
தவிர இடைவேளைக்கு  பிறகு முழுக்கதையும் எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாகவே இருக்கிறது.  ஒரு வேளை  வேறு ஏதாவது சொல்வார்கள் என்று நம்பினால் அதுவும் நடக்கவில்லை.  மனசுக்குள் நினைத்துக்  கொண்டிருக்கும் காட்சிகள் அப்படியே வருவதும் படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது. 
 
கடைசியில் வரும் சண்டைக் காட்சிகள்  எல்லாம் ரொம்பப் பழைய சினிமா. சீரியஸான விஷயத்தை சினிமாத்தனமாக சொல்லி  முடிக்கிறார்கள் 
 
படம் பார்க்கும்போது ஆரம்பத்தில் ஆர்வ கிராஃப்  சர்ரென்று மேலே ஏறி,  அப்புறம் அப்படியே போய்,  இடைவேளையில் கொஞ்சம் இறங்கி அப்புறம் சற்றே உயர்ந்து , அப்புறம் இறங்கி இறங்கி கீழே போய் அப்படியே நின்று விட்டது. 
 
தீயவர் குலை நடுங்க என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்; ஆனால்  படம் முழுக்க நல்லவர்கள்தான் குலை நடுங்கி கொண்டு இருக்கிறார்கள் .
 
எனவே தீயவர் குலை நடுங்க .. பார்ப்பவர்களைக்  குலை நடுங்க வைக்கிறது. 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *