டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அய்வா என்டர்டைன்மெண்ட் சார்பில் ரவீந்திரன் மற்றும் சுதர்ஷன் தயாரிக்க ரியோ, வர்த்திகா, முனீஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், தாஃபியா அபு நடிப்பில் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காதலுக்கோ கல்யாணத்துக்கோ பெண்ணே கிடைக்காத ராமுக்கு (ரியோ), அழகான ஒரு காதலி (வர்திகா) கிடைக்கிறார் . அவனது அம்மா (மாளவிகா அவினாஷ்), அப்பா ( சேத்தன்) , தங்கை ( தாஃபியா அபு) ஆகியோருக்கே அது பெரிய ஆச்சரியம்.
பெண்ணுக்கு அம்மா (தீபா வெங்கட்),தாய்மாமா ( மகாபா ஆனந்த்) தாத்தா (காத்தாடி ராமமூர்த்தி) பாட்டி உண்டு.
” வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஆறு மணிக்கு மேல் எங்கும் வெளியே வரமாட்டேன். போன் பேச முடியாது. மெஸேஜ் கூட கஷ்டம்” என்கிறாள் காதலி .
நல்ல குடும்பம் என்று மகிழ்கிறது பையன் குடும்பம் .
அதே போல ராமுக்கு அதே பெயரில் ஒரு நண்பன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) உண்டு . அவனை எப்போதும் இரவில் மட்டுமே ராமால் சந்திக்க முடியும்.
ஆறு மணிக்கு மேல் காதலியை பார்க்கவே முடியாது என்பது ராமை உறுத்த, ஒரு நிலையில் வம்படியாக பார்க்க முயலும்போதுதான் அந்த உண்மை தெரிகிறது.
காதலியின் குடும்பத்தில் எல்லோரும் ஏலியன்கள் !
காதலி, தாய்மாமன், தாத்தா, பாட்டி எல்லோரும் பகலில் பெண் என்றால் இரவில் ஆணாகவும் , பகலில் ஆண் என்றால் இரவில் பெண்ணாகவும் மாறி விடுவார்கள் என்பது அப்போதுதான் ராமுக்கு தெரிகிறது.
காதல், நட்பு எல்லாம் என்ன ஆனது என்பதே படம்.
ஆரம்பக் காட்சிகள் இயல்பாக அழகாக இருந்தன. சிறப்பாக இயக்கி இருந்தார் இயக்குனர் .அந்தக் காட்சிகளில் ரியோ தனக்கே உரிய பாணியில் ரசித்து நடித்து இருந்தார்.
வர்திகா மைதா மாவு அழகி, ரசிக்க வைக்கிறார்.
ராமின் தங்கையாக வரும் தாஃபியா அபு லவ்லியாக நடித்து இருக்கிறார்.. பாராட்டுகள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தீபா வெங்கட் ! மிக சிறப்பான நடிப்பு.
மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு ரம்மியம். அங்கித் மேனன் இசை,சிவாவின் படத் தொகுப்பு இவையும் ஓகே தான்.
சில வாரங்களுக்கு முன்பு டபுள் ஆக்குபன்சி என்று ஒரு படம் வந்ததே. அந்தப் படமும் இந்தப் படமும் வேறு ஏதோ ஒரு ஒரிஜினல் வெளிநாட்டுப் படத்தில் இருந்து ‘வந்திருக்கின்றன’
எனினும் ட்ரீட்மென்டில் மாற்றம் இருக்கிறது. ஆனால் எப்படி அந்தப் படத்தில் அது பலன் தரவில்லையோ. அப்படி இந்தப் படத்திலும் பலன் தரவில்லை. காரணம் காட்சிகளில் நிறைய ஒற்றுமை.
ராம் என்ற பெயர் இருந்தால் முன்னேறவே முடியாது என்ற வசனத்தின் மூலம் சம்முவத்துக்கு ஏதோ சேதி சொல்கிறார்கள்
இடைவேளைக்கு அப்புறம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முனீஷ்காந்த் கேரக்டரை எல்லாம் புதுசா இறக்கி நிரப்புகிறார்கள்.
அதுவும் போதாமல் ஏதேதோ காட்சிகள்…
அசந்தர்ப்பமாக ஒரு கல்யாண கும்பல் பாடல் எல்லாம் வருகிறது.
கடைசி திருப்பம் வரை சுலபமாக யூகிக்க முடிகிறது. ஆனால் அது வருவதற்கு தலையைச் சுற்றி மூக்கை தொடுகிறார்கள்.
மொத்தத்தில் ராம் அண்டு லீலா.. ராம் இருக்கார்.. லீலைதான் இல்லை