ஹபீபி @ விமர்சனம்

நேசம் என்டர்டைன்மெண்ட் , ஜி கே எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ்,  ஈஷா,  மாளவிகா மனோஜ், அனு  ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன்  , ரேகா குமணன் நடிப்பில் மொஹம்மத் அமீனின் கதை வசனத்தில் மீரா கதிரவன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம்.

ஹபீபி என்ற சொல்லுக்கு அன்பே என்று பொருள் 

தென் தமிழ்நாட்டில்,  தறி நெய்வதே பரம்பரைத் தொழிலாகக் கொண்ட  ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பத் தலைவர் முகமது யூசுப்  (கஸ்தூரி ராஜா). அவரது மனைவி மம்மது (ஜெயஸ்ரீ பினுராஜ்). யூசுப் மகன் சையது அபுதாஹிர்  (ஈஷா) மற்றும் மகள்கள்.. ஒரு தம்பியும் உண்டு
 
யூசுப்பின் தம்பிக்கு திருமணம் ஆக,   தம்பி மனைவி சாலியாவுக்கு  ( அனு  ஸ்ரேயா ராஜன்) தறியை நமபியே வாழும் வறிய  வாழ்வில் திருப்தி இல்லை.  
 
வேறு தொழில்களுக்கு  முயன்று முடியாமல் போக, அயல்நாடு போய் சம்பாதிக்கும் பழக்கம் சமூகத்தில் அதிகமாகி வந்த சூழலில் , யூசுப்பின் தம்பி  வெளிநாடு போகிறார். 
 
ஆரம்ப காலத்தில் ஆடியோ கேசட்கள் பேசி அனுப்பிக் கொள்வதில் துவங்கி, கால மாற்றத்தில் வீடியோ காலில் பேசிக் கொள்வதே வாழ்க்கை. என்றாகிறது சாலியாவுக்கு. வசதி வருகிறது. ஆனால் குழந்தை இல்லாமல் போகிறது 
 
அபுதாகிருக்கு சின்ன வயசு முதல் சகா பள்ளி மாணவி  நிலோபர் (மாளவிகா மனோஜ்) மீது காதல். அவளுக்கும் விருப்பம் இருந்தும் அன்றைய சூழலில் அவர்களது  ஒரு சந்திப்பு,  மூன்றாம் பார்வையில் தவறாகப் படும் சூழல் ஏற்பட , அதை மாற்ற மாபெரும் பழி சுமக்கிறான் அபுதாகிர். கல்யாண ஆசை துறந்து வெளிநாடு போய்  சம்பாதிக்கிறான் .
 
இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்ற சூழலில் அவனுக்கு பெண்  பார்க்கின்றனர். வயது காரணமாக பெண் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் அவனுக்கு வெளிநாடு போக விருப்பமும் இல்லை. 
 
மிகுந்த தேடலுக்கு பிறகு,  பரந்த வாசிப்பு அனுபவமும் சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு பெண் (தனாஸ்ரீ சுதாகரன்)  நிச்சயம் செய்யப்படுகிறார். 
 
சம்பாதித்த பணத்தை சகோதரி திருமணம்  உள்ளிட்ட செலவுகளுக்கு  அபுதாஹிர்   செலவு செய்த நிலையில்,  அவன் திருமணத்துக்கு தேவையான பணம் கேள்விக்குறியாகிறது. அதில் ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள் , விரிசல்கள் …
 
தமிழ் இஸ்லாமிய சமூகத்தில்,  பல குடும்பங்களில் , வறுமையை ஒழிக்க உறவுகளைப்  பிரிந்து அயல்நாடு சென்று  வாடுவதே வாழ்வு என்றாலும்,  அந்த தியாகங்களுக்காவது பலன் கிடைக்கிறதா என்ற கனமான கேள்வியை நம் இதயத்தில் நிறுத்தி படத்தை முடிக்கிறார்  மீரா கதிரவன்.
 
தென்காசி,  கடையநல்லூர் பகுதி  வாழ் நெல்லைத் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, பின்புலம், கலாச்சராம், பண்பாடு , ஆண்களின் தொழில் போராட்டம் ,பெண்களின்  இயங்குதளம், தலைமுறை மாற்றங்களின் சிந்தனை வேறுபாடுகள்…. இவைகளை வைத்து இது வரை தமிழ் சினிமா காணாத படத்தை மண் மணத்தோடு கொடுத்து இருக்கிறார் மீரா கதிரவன். 
 
காட்சிகளை அவர் அமைத்து இயக்கி இருக்கும் விதை கவிதை போல இருக்கிறது. 
 
ஓர் இஸ்லாமிய கூட்டுக குடும்பத்தை அதில் ஒவ்வொரு உறவுகளின் உரிமையை- அந்த உரிமையின் எல்லையை – அதன் பரிமாணங்களை அவர் வடித்திருக்கும் விதம் அபாரமானது. படத்துக்கான  முகங்களை அவர் தேர்ந்தெடுதிருக்கும்   நேர்த்தியும் சிறப்பானது. 
 
மிக முக்கியமாக பெண்களின் உலகத்தை அவர் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.  அம்பேத்கார் , பெரியார் ஆகியோரை குறிப்பிட்டு   சுயமரியாதை உணர்வோடு கூடிய  பெண் கதாபாத்திரத்தை உலவ விட்டிருக்கும் விதத்தில் தனித்து ஜொலிக்கிறார் மீரா  கதிரவன்.
 
தறியை ஆணி வேராகக் கொண்டு உருவான ஒரு குடும்பத்தில்- வீட்டில் -அந்த தறியை  உடைத்து தரையில் இருந்து பெயர்த்து எடுக்கும் காட்சியும் அப்போது யூசுப் கதாபாத்திரத்தின் மன அதிர்வுகளும் நம்மை தாக்குகிறது.   
 
அபுதாஹிரின் கல்யாண சச்சரவு காட்சியில்  அத்தனை கதாபாத்திரங்களின் நியாயத்தையும் வெளிப்படுத்தும் எழுத்தும் இயக்கமும் கொண்டாட வைக்கிறது. 
 
நிலோபர் என்ற பெயரை நிலா என்று மண் மொழியில் மாற்றி அழைப்பது ரசனை. 
 
காட்சியின் உணர்வுக் கூட்டலுக்கு உயிர் கொடுக்கிறது சாம் சி எஸ் கொடுத்திருக்கும் இசை ..  
 
தவிர ராமமூர்த்தி இசையில் நாகூர் சலீம் எழுதிய கப்பலுக்கு போன மச்சான் என்ற புகழ் பெற்ற தனிப் பாடலை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் மீரா கதிரவன். அதில் வரும் ”எப்பதான் வருவீங்க பாக்குறேன். இரவும் பகலும் தொழுது தொழுது கேக்குறேன் ” என்ற வரிகளில் வரும், ‘ தொழுது’ என்ற வார்த்தை காதலிலும் இஸ்லாமிய  வழிபாட்டிலும் சம அளவில் முக்கியமானது அல்லவா? அந்த வார்த்தையை சரியாகப் பயன்படுத்திய நாகூர் சலீம் பாராட்டுக்குரியவர் 
 
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவின்  நேர்த்தியான ஒளி இருள் பயன்பாடு,  நம்மை காட்சி  நடக்கும் இடத்துக்குள் கொண்டு போய் உட்கார வைக்கிறது. கேரளா மலைக்காட்டுச் சாலைகளை ஒரு ஏரியல் வியூவில் சுற்றிச் சுழன்று உயர்த்தி நிறுத்தும்  ஷாட் உட்பட  பல விதங்களில் சிறப்பான ஒளிப்பதிவு. 
 
படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் காடு மலைகள், ஊர்கள்,  வீதிகள், இடங்கள் ,அப்புன்னி சாஜனின் கலை இயக்கம் யாவும் மிகப் பொருத்தம் 
 
குடும்பத்தலைவர் யூசுப்பாக  மிக சிறப்பாக நடித்துள்ளார் இயக்குனர் கஸ்தூரி ராஜா. .  வாழ்க்கை கொடுக்கும் அடியில் கிட்டித்துப் போகும்  அபுதாஹிர் கேரக்டரில் உணர்ந்து நடித்துள்ளார் ஈஷா. முக்காடு போட்ட நிலவாக மாளவிகா மனோஜ் சிறப்பான பங்களிப்பு. சுயமரியாதைப் பெண்ணாக,  கத்தி வீசும் சிரிப்பில் கவர்கிறார்  தனாஸ்ரீ சுதாகரன் . 
 
குடும்பத் தலைவர் யூசுப்பின் தம்பி மனைவி சாலியாவாக வரும் அனு  ஸ்ரேயா ராஜன் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். கல்யாணப் பெண்ணாக நாணத்தோடு அந்த குடும்பத்துக்குள் நுழைவது முதல் கணவனோடு தொலைதூரக் குடும்பம் நடத்துவது,   அபுதாஹிரின் சித்தி என்ற நிலையில் இருந்து அம்மாவாக மாறுவது வரை, எல்லா கால கட்ட… வயது.. மாற்றங்களிலும் அருமையாக  நடித்துள்ளார் அனு.
 
ஜெயஸ்ரீ பினுராஜ் அந்தக் கேரக்டராகவே மாறி விட்டார். இஸ்மத் பானு,  ரேகா குமணன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள் 
 
கலாச்சார பின்னணி, அயல்நாடு  பிரச்னை இரண்டில் எதை எந்த அளவில் சொல்வது என்பதில் ஒரு தடுமாற்றம் தெரிகிறது. சில காட்சிகள் அழகியலாக இருந்தாலும் வேகத்தடையாக இருக்கின்றன. சில காட்சிகள் துண்டு துண்டாக நிற்கினறன. இயக்குனரின் பின்னணிக்குரல்  மீண்டும் மீண்டும்  வருவதும் படத்துக்குள் இருந்து நம்மை வெளியே இழுக்கிறது. 
 
படத்தின் பெயர் வெகுஜன மக்களை ஏற்கும்படி இல்லை. வேறொரு பொதுப் புரிதல் உள்ள பெயரை வைத்து துணைப் பெயராக ஹபீபி  என்று வைத்திருக்கலாம். இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இருந்தால் வெகு ஜன மக்களை உடனடியாக உள்ளே இழுக்கும் படமாக இது மாறி இருக்கும் 
 
இப்படி சில குறைகள் இருந்தாலும் மிக அழுத்தமான தனித்தன்மை ஒரு பசுமை வாழ்வியல் கொண்ட படமாக வந்துள்ளது ஹபீபி 
 
காண வேண்டிய கலைப் படைப்பு. 
 
மொத்தத்தில் ஹபீபி … டார்லிங் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *