சிவ கார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் , பிளே ஸ்மித் ஸ்டுடியோஸ், சவுத் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் சிவ கார்த்திகேயனும் எஸ் விஜய பிரகாஷும் தயாரிக்க, தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் நடிப்பில் டி.ராஜவேல் எழுதி இயக்கி இருக்கும் படம்.
வாடகைக்கு குடியிருக்க வந்தவன் (தர்ஷன்), ஓனரின் பெண்ணைக் (அர்ஷா பைஜூ) காதலிக்க, அவனை விரட்துவதற்காக , சொந்த வீடு உள்ளவனுக்குதான் பெண் தருவேன் என்று ஓனர் சொல்ல, சரி என்று சொல்லிப் போன போன காதலன், செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டை வாங்கிவிட்டு பெண்ணைத் தேடி வர, அப்பா மறுத்தும் பெண் அவனோடு வந்து விடுகிறாள்.
வீட்டுக்கு குடி வந்த பிறகு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் பெண்ணை அதிர வைக்கின்றன . கண்ணுக்குத் தெரியாத சிறுவன் ஒருவன் வரையும் சுவர் கிறுக்கல் ஒவியம், மெல்ல மெல்ல வளர்ந்து இது நானும் என் அம்மாவும் அப்பாவும் வாழும் வீடு என்று உணரவைத்து முடிகிறது .
“வீட்டை விட்டு விட்டு என் வீட்டுக்கே போய் விடலாம்…” என்று மனைவி சொல்ல, ”உன் அப்பா முன் இந்த வீட்டை விட்டு வந்து எப்படி உன் வீட்டிலேயே நான் தங்க முடியும்?” என்று அவன் மறுக்க,
இப்படியாக ஒரு பேய்ப் படத்துக்கே உரிய நானா வித சகல பரிமள பத்ர புஷ்பாணி போல சிறப்பான டெம்ப்ளேட் களோடு வரை படம் நகர்கிறது.
ஒரு நிலையில் ஒரு இடி மின்னல் காரணமாக ஏற்படும் ‘டெசர்ட்’ எனப்படும் – விஞ்ஞானக் கற்பனையான – இணை உலக மாற்றுப் பரிமாண சூழலின் உலக்குக்குள் இவர்களைக் கொண்டு செல்கிறது . (‘டெசர்ட்’னா என்ன என்ற கேள்விக்கு, படத்தில் சொல்வது போல ”இது கூடப் புரியலைன்னா எப்படி/” என்று ரஃப் அண்ட் டஃப் ஆக சொல்வது நல்ல படைப்பாளியின் தன்மை இல்லை . நான் அப்படி சொல்ல மாட்டேன்)
உங்கள் உலகம் போலவே வேறு ஒரு உலகத்தில் உங்களைப் போன்ற ஒருவர் .. நீங்களே கூட இருக்கலாம். இருக்கலாம் என்பது இணை உலகம் .
அதில் மாற்றுப் பரிமாணம் என்பது, உங்கள் குணாதிசயங்களுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக நீங்கள் படும் துன்பம் , மகிழ்ச்சி , அதிர்ச்சி, காதல், காமெடி எதுவும் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் . அல்லது முற்றிலும் மாறாக இருக்கலாம் .
சிம்பிள்…. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலவே இருக்கும் மாற்றுப் பரிணாம நபர் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆவதற்கு கூட தகுதி இல்லாத நபராக இருக்கலாம். அவரிடம் போய் தெய்வமகன் படத்தில் நடப்பது போல நடந்து காட்டுங்கள் என்றால் எப்படி இருக்கும் ? அதுதான்.
இணை உலக – மாற்றுப் பரிமாண நபர் என்பதனை அறிவார்ந்த அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் அது குளோனிங் மாதிரி ! உதாரணமாக கமல்ஹாசன் போலவே இருக்கும் , கமல்ஹாசனின் குளோனிங் நடிப்பில் தர்ஷன் அளவுக்குக் கூட இல்லாமல் இருக்கலாம்)
எதிர்பாராத இடி மின்னல் காரணமாக அந்த ‘டெசெர்ட்’ உருவாக, பத்து வருடம் முன்பு இதே வீட்டில் வாழ்ந்த கணவன் ( காளி வெங்கட்) மனைவி (வினோதினி) சிறுவன் (ஹென்ரிக்) ஆகியோரோடு இந்த இளம் தம்பதிக்கு தொடர்பு உருவாகிறது.
கணவன் மேஜையில் லேப் டாப் வைத்து இருக்கும்போது , அந்த நபர் மேஜையை இழுத்தால் இங்கே லேப் டாப் கீழே விழுந்து உடையும். (இணை உலக மாற்றுப் பரிமாணத்திலும் அதே மேஜை அதே இடத்தில் இருக்கா? ஆம் அந்த மேஜையை வாங்கியது இவரா அவரா? பத்து வருடம் முன்பு அவர் வாங்கிய மேசையை இவர் எப்படி பயன்படுத்துகிறார் கேரன்ட்டி வாரண்ட்டி எல்லாம் கேட்கக் கூடாது . ஒரு பேய்ப் படத்தில் அந்த பேய்க்கு தானாக எல்லாம் தெரியும் என்கிறோம். இன்னொரு பேய் படத்தில் முதுகுக்கு பின்னால் முயல் குட்டி போவது கூட நம்ம பேய்க்கு தெரியாது என்கிறோம் அல்லவா? அதே மாதிரித்தான்)
ஒருவர் ஷவர் பாத்தில் குளிக்கும்போது இன்னொருவர் அருவமாக டாய்லெட் யூஸ் பண்றார் . (நல்லவேளை தண்ணீர் பிளஷ் ஆவது மட்டும் காட்டினார்கள் . இவன் குளிக்கும்போது அவர் பொண்டாட்டி டாய்லெட்டுக்கு வந்தால் என்ன ஆவது என்று எல்லாம் கேள்வி மட்டும் கேட்கக் கூடாது . சாமி கண்ணைக் குத்தும்)
இப்படி காமெடியாக ஆரம்பிக்கும் பிரச்னைகள், ஒரு நிலையில் சீரியஸ் ஆனால் என்ன செய்வது என்பதே படம்.
திருடன் போலீஸ் , உள்குத்து படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு 2018 இல் இயக்கிய படம் , தமிழில் கண்ணாடி என்றும் தெலுங்கில் நினு வீடானி நீடனு நேனே என்ற பெயரில் (உன்னை விடாத நிழல் நான் ) என்றும் உருவானது. 2019 தெலுங்குப் படம் ரிலீஸ் ஆனது . நல்ல பெயர் . அதன் பலனால் அடுத்து கார்த்திக் ராஜு இயக்கிய பேச்சிலர் படம் ஹிட் அடித்து இப்போது தெலுங்கில் ஹாட் கேக் டைரக்டர் ஆகி விட்டார் கார்த்திக் ராஜு . ஆனால் கண்ணாடி படம் லைகா புரடகஷன்சில் இருந்த ஒருவரிடம் சிக்கி சின்னாபின்னமாகி இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. இப்படியாக ஒரு மதுரைக்காரர் தெலுகு தர்சகுடு (டைரக்டர்) ஆன கதை இது .
இந்த கண்ணாடி படம் ஒரு லைனாக ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதன் கதை விவாதத்தில் கார்த்திக் ராஜு எனக்கு தனி இடம் கொடுத்தார் என்பதால் அது எனக்கும் மனசுக்கு பிடித்த படம் . சொல்லப் போனால் கதை விவாதத்தில் என்னை மானசீகமாக கதறவிட்ட படம் அது .திமிரு பிடித்தவன் படத்தின் கண்டினியூட்டி ஷூட்டிங் இருந்ததால் நான் கண்ணாடி , நினு வீடானி நீடனு நேனே இரண்டிலும் ஒரு மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது .
இந்த இணை உலகம் மாற்றுப் பரிணாமம் கதை எல்லாம் விடாமல் அந்தப் படத்தை இயக்கி இருப்பார் கார்த்திக் ராஜு. இயக்கி இருப்பார் , இடைவேளை சும்மா தெறிக்க விடும் . கிளைமாக்ஸ் நெகிழ்த்தும் .
இந்த ஹவுஸ் மேட்ஸ் முதல் பாதி முழுக்க கதை அப்படியே. களம் மட்டும் மாறும்.
ஜி வி பிரகாஷ் நடித்த அடியே படத்தில் இணை உலக மாற்று உலக விசயங்களை வைத்து ஒரு திரைக்கதை செய்து இருப்பார்கள். அதுவும் ஒரு போதாமை நிறைந்த திரைக்கதையால் பெரிதாகப் போகாத படம்.
அடியே படத்தை இடைவேளைக்குப் பிறகு இந்தப் படம் நினைவூட்டுகிறது .
கிளைமாக்சில் கண்ணாடியில் அம்மா செண்டிமெண்ட் , ஹவுஸ் மேட்சில் மகன் செண்டிமெண்ட் .
இது ஒரு பக்கம் இருக்கட்டும் .
அதையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் எப்படி இருக்கு ?
ஆரம்பத்தில் ரிஜிஸ்டர் ஆபீஸ் , லஞ்ச ஊழல் என்று ஒரு சட்டயர் காமெடி குணாதிசயத்தை படத்துக்கு கொடுத்து விட்டு அப்புறம் படம் முடிந்து வீடு வரும்வரை அதைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஒரு நகைச்சுவை ட்ரீட்மென்ட்டை ஆரம்பத்தில் பார்த்து விட்டபடியால் அப்படி எதாவது மீண்டும் வரும் என்றால் கடைசி வரை மீண்டு வரவே இல்லை.
ஆரம்பப் பேய்க் காட்சிகள் ஆயிரம் படங்களில் பார்த்தது என்றாலும் அந்த சில நிமிட ஏரியா பக்கா நேர்த்தி . பேசாமல் அப்படியே போயிருந்தால் கூட தப்பில்லயே என்று இப்போது தோணுகிறது. நம்ம சாதி சனம்தான் பேய்ப்படம் என்றால் எப்படி இருந்தாலும் பார்த்துக் குவிக்க, ரசனையில் ரத்தம் பூசிக் கொண்டு அலையுதே.
புது வீட்டில் வீட்டில் சம்திங் ராங் என்று மனைவி சொல்லச் சொல்ல, அது படம் பார்க்கும் நம் அறிவுக்கே சரி என்றே பட , அனால் கணவன் மட்டும் கணவன் அதெல்லாம் இல்லை என்று ஒரு நிலைவரை சொல்லிக் கொண்டே இருப்பது , தூரதர்ஷனின் ஆரம்ப காலப் பொங்கல் டிராமாவை இப்போது பார்ப்பது போல இருக்கிறது .
மனைவி சொல்வது பொய்யா உண்மையா என்று கண்டுபிடிக்க ஆபீஸ் வேளையில் பகலில் பிசியாக இருக்கும் ஒரு காதல் கணவனுக்கு ஒரு இரவு, அல்லது ஒரு ஞாயிற்றுக்கிழமை போதாதா? ஆனால் ரொம்ப நேரம் மனைவியோடு மல்லுக் காட்டுகிறார். ஏனென்றால் கொஞ்ச நேரம் இழுக்கணும். இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவருக்கு அது தெரியணும்.. திரைக்கதை அப்படி ஒரு டிசைன் .
உண்மையில் இணை உலகம் மாற்றுப் பரிமாணம் என்பது நல்ல விஷயம். அதை வைத்து உலகம் முழுக்க நல்ல படங்கள் வந்திருக்கின்றன.
இந்தப் படத்தின் இயக்குனர் அதை எடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால் கதை நிகழும் இந்தக் களம் என்பது இந்தக் கதையை தாங்கும் அளவுக்கு இல்லை. உண்மையில் அடியே படத்தின் களம் சூழல் இதை விடவே சிறப்பாக இருந்தது .
நாயகி அர்ஷா பைஜூ படத்தின் பெரும் பலம். அழகி. நடிப்பு . உடல் மொழிகள் யாவும் பிரமாதம்.
ஓர் இடைவேளைக்கு பிறகு, லைவ் ஆன கேரக்டரில் காளி வெங்கட். சிறப்பாக நடித்திருக்கிறார் . கொஞ்சம் presenting to the camera வில் கவனம் வேண்டும் என்றாலும் வினோதினியும் ஒகே
தர்ஷன் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் .
இணை உலகம் மாற்றுப் பரிமாணம் என்ற விசயத்தை ரசிகர்களுக்கு புரிய வைக்கும் விஷயத்தில் இந்த விமர்சனம் காட்டிய அக்கறையை கூட இந்தப் படம் காட்டவில்லை என்பதுதான் சோகம் .
முடிவு தெரிந்த அல்லது முடிந்தாக நம்பும் விசயத்தின் மீது ஒரு கேரக்டர் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏற்புடையதாக இல்லை.
இணை உலகம் மாற்றுப் பரிமாணம் என்ற விசயம் தெரிந்தோர் தெரியாதோர் இருவரையும் இந்தப் படம் திருப்திப்படுத்தவில்லை.
இணை உலகம் மாற்றுப் பரிமாணம் என்று வந்த பிறகு கூட அதன் பின்னர் சுவையான காட்சிகள் இல்லை. குறிப்பாக வீட்டின் வலுவை பரிசோதிக்கும் காட்சிகள் கொடுமை.
இவ்வளவு பிரச்னைகள் இருப்பதால் இணை உலகம் மாற்றுப் பரிமாணம் இரண்டையும் ஒரு நிலையில் பிரிக்கும் அற்புதமான உத்தி , நன்றாக இருந்தாலும் எண்ணையும் தண்ணியும் போல் ஒட்டாத அந்த கிளைமாக்ஸ் பலன் தரவில்லை.
ஒகே ங்க.படம் எப்படி இருந்தாலும் சரி . என்னவா இருந்தாலும் சரி . வித்தியாசமான கதை மட்டும் இருந்தா போதும் என்பவர்களுக்கு ஓகே.
ஹவுஸ்மேட்ஸ்… டுட்டோரியல் மேட்ஸ்