சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க, விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு, சரவணன், ஆர்கே சுரேஷ்,,நந்தினி தீபா, ரோஷினி மற்றும் பலப் பலர் நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் கிராமத்துப் படம் .
கணவன் ஆகாச வீரன் மனைவி அரசி (விஜய் சேதுபதி- நித்யா மேனன்) இருவரும் மூன்று மாதங்களாகப் பிரிந்து இருக்கும் நிலையில் கணவனுக்குத் தெரியாமல் தனது மகளுக்கு முடி இறக்க , தன் பெற்றோரோடு குலதெய்வம் கோவிலுக்கு வருகிறாள் அரசி. தன் திருட்டுத் தொழிலுக்கு குலதெய்வத்திடம் குறி வாங்க வந்த ஒரு நபர்(யோகி பாபு) , சிறுவனான தன் மகனின் பிறந்த நாளைக் கொண்டாட மனைவி (நந்தினி) மற்றும் பிள்ளைகளோடு வந்திருக்கும் ஒரு நபர்( காளி வெங்கட்) ஆகியோரும் வந்திருக்கிறார்கள் .
அரசி பிள்ளைக்கு முடி இறக்கிக் கொண்டு இருக்க, விஷயம் தெரிந்து, அங்கு வரும் கணவன் ஆகாச வீரன் முடி திருத்தும் நபரை (சென்றாயன்) அடித்து பாதி மொட்டை அடித்த மகளைப் பிடுங்கிக் கொண்டு தன் தாயோடு போக முயல, அரசியின் அப்பா மற்றும் உறவினர்கள் தடுக்க,
இந்த இடத்தில் சில சீரான ,சீரற்ற, சில திணிப்பான பிளாஷ் கட்டுகளில் நடந்த கதை சொல்லப்படுகிறது .
பத்தாவது பெயிலான பரோட்டா மாஸ்டரான ஆகாச வீரனின் அம்மா பெண் வீட்டாரிடம் தன் மகன் டபுள் எம் ஏ. வீடு சொந்த வீடு என்று பொய் சொல்லி கல்யாணம் செய்து வைத்திருப்பாள். ஆகார வீரனின் பரோட்டா சுவையில் மயங்கும் அரசியின் குடும்பம் ஆரம்பத்தில் அந்தப் பொய்களையும் செரிக்காமல் முழுங்கி விடும் . ஆனால் அரசியின் அண்ணனுக்கும் (ஆர் கே சுரேஷ்) ஆகாச வீரனுக்கும் உள்ள முன்பகையையும் (?) மீறி கல்யாணம் நடந்து இருக்கும்
அரசி ராசியான நபராக இருக்க, ஆகாச வீரனின் குடும்பம் நடத்தும் பரோட்டா கடையில் மாமனார் ( சரவணன்) மருமகளை கல்லாவில் உட்கார வைக்க , அதில் இருந்து மாமியாருக்கு வஞ்சம்.
ஆகாச வீரனின் தங்கையும் அம்மாவுடன் சேர்ந்து அண்ணியைக் கொடுமை செய்ய, மாமனார் வாயில்லாப் பூச்சி யாக இருக்க, பிரச்னை கோவிலில் குழந்தைக்கு அரை மொட்டை போடுவது வரை வந்திருக்கக, இப்போது கோவிலில் தள்ளுமுள்ளு நடக்க,
விஷயம்,அறிந்து அரசியின் அண்ணன் ஒரு படையோடும் ஆகசவீரனிடம் அடி வாங்கிய மொட்டையடிப்பவரின் சங்க ஆட்கள் இரண்டு குழுக்களாகவும் . அரசி மீது ஆசைப்பட்ட உறவினர் ஒருவனும், சண்டைக்கு கிளம்பி வர, ஒரு எல் எல் ஏ . ஊர்த்தலைவர், கவுன்சிலர தர்ம கர்த்தா எல்லோரும் வந்து விட
ஆகாச வீரனும் அரசியும் இணைந்தார்களா பிரிந்தார்களா ? குழநதையின் அரை மொட்டை முழு மொட்டையாக அடிக்கப்பட்டதா இல்லை அது ரசிகர்களுக்கு அடிக்கப்பட்டதா என்பதே இந்த தலைவன் தலைவி,
குல தெய்வம் கோவில் , அந்த மண் சார்ந்த — ஆரியமற்ற – வழிபாட்டு முறை, உறவுகளின் முக்கியத்துவம், மண் சார்ந்த தமிழ்ப் பெயர்கள், அட்டகாசமான லொகேஷன்கள் என்று பாண்டிராஜின் வழக்கமான சிறப்பான படமாக்கல் முறை தலைவன் தலைவியிலும் அபாரம் .
குலதெய்வக் கோவிலில் கை வைத்து விபூதி அப்பி அள்ளி, ஒழுங்கற்ற வடிவத்தில் நெற்றியில் பூசிக் கொண்டு கழுத்தில் தடவிக் கொண்டு , வாயில் ஒரு பிடி போட்டுக் கொண்டு மிச்சம் உள்ள விபூதியை தொப்புளில் தடவிக் கொள்ளும் ஆகாசவீரனின் இயல்பு அக்மார்க் பாண்டிராஜின் மண்வாசனை இயக்கம். அற்புதம் பாண்டி ராஜ்.
லைவாக நிறைய வசனங்களோடு நீண்ட நேரம் நின்று நடிக்க வேண்டிய காட்சிகள் . பிரம்மாதமாக நடிக்கிறார்கள் நித்யா மேனனும் விஜய் சேதுபதியும்.
பொதுவாகவே நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதத்தில் அசத்துகிறார் பாண்டி ராஜ்,
சினிமாவுக்கான டெம்ப்ளேட் என்று இல்லாமல் காமெடி நடிகர்கள் மூலம் மட்டுமின்றி அவ்வப்போது காட்சிகளின் தன்மை வழியே எல்லாக் கதாபாத்திரங்கள் மூலமும் வந்து விழும் சில நகைச்சுவை குறு வசனங்கள் ரொம்பவே ஆர்கானிக். அருமை.
சந்தோஷ் நாராயணின் இசை படத்துக்கு பெரும்பலம், சுகுமாரின் ஒளிப்பதிவும் அப்படியே .
இப்படி இருந்தும் திரைக்கதையும் விஜய் சேதுபதியின் அதீத கத்தல் நடிப்பும் பொறுமையை சோதிக்கின்றன
”குமுதா ஹேப்பி அண்ணாச்சி..” மூடில் மீண்டும் நடித்துப் பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. தப்பில்லை. ஆனால் ”குமுதா ஹேப்பி அண்ணாச்சி ….குமுதா ஹேப்பி அண்ணாச்சி ….குமுதா ஹேப்பி அண்ணாச்சி …. குமுதா….. குமுதா…. குமுதா.. ஹேப்பி… ஹேப்பி .. ஹேப்பி.. அண்ணாச்….. அண்ணாச்…. அண்ணாச்…. சி… சி.. சி.. ” என்று கத்திக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ?அப்படி இருக்கிறது சரி தலைவன் அப்படிக் கத்தினால் தலைவியும் பாதியாவது கத்தணும் இல்லியா… ஆக, அவரும் கத்துகிறார். அதே போல தலைவியில் பாதி மற்றவர்களும் கத்த வேண்டும் இல்லையா? கத்துகிறார்கள்.
ஒரு படத்தில் வசன ஆதிக்கம் அதிகம் இருப்பது தப்பில்லை. பாபநாசம் படத்தில் கமல் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டுதான் இருந்தார். அதுவும் பேசியதையே பேசிக் கொண்ருந்தார் . அதை நாம் ரசித்தோம். காரணம் அவசியமும் சுவாரஸ்யமுமான நீண்ட நெடிய வசனங்கள். ஆனால் இந்தப் படத்தில் அப்படி அமையவில்லை.
தானே பெண் பார்த்து மகனுக்கு திருமணம் செய்து வைத்த மருமகள் மீது கூட வன்மம் கட்டும் மாமியார்கள் நாத்தனார்கள் உண்டு இந்தப் படத்தில் மாமியாருக்கவது ஒரு நியாயம் இருக்கிறது , நாத்தனாருக்கு பொறாமை இருப்பது ஒகே.
ஆனால் இந்த அளவுக்கு , மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தும்போது போடப்படும் திருவிழா நாடகத்தில் வரும் வில்லி போல, நாத்தனார் கேரக்டர் கூட , அரசி மேல் வன்மம் காட்டுவதற்கு ஒரு காரணமும் சொல்லப்படவில்லை. நிஜ வாழ்வில் அப்படி காரணமில்லா வன்மங்கள் உண்டு என்றாலும் சினிமாவில் ஒரு காரணம் சொல்ல வேண்டியது அவசியம்.
ஆகச வீரனின் அம்மா கதாபாத்திரம் ஏகக் குழப்பம். செய்வதை எல்லாம் செய்கிறது . அப்புறம் அழுகிறது . சரி .. மாறும் என்று பார்த்தால் மீண்டும் குழப்பம். அப்புறம் அழுகை . கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு ஸ்பிலிட் பர்சனாலிடி போலவே அது இருக்கிறது .
அந்த ஸ்பிலிட் பர்சனாலிட்டியை படத்தின் கடைசியில் திரைக்கதையிலும் பாண்டிராஜ் கொண்டு வந்து விட்டது ஒரு சோகம்
இந்த கதபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளை யதார்த்தமாக சொன்னால் போரடிக்குமோ என்ற பயத்தில் நகைச்சுவை வேண்டும் என்ற எண்ணத்தில் நாடகத்தமாகவும் செயற்கையாகவும் சொன்னதால் மேற்சொன்ன இரு வீட்டார் கதாபாத்திரங்களும் ஏதோ ஜந்துக்கள் போல தோன்றுகிறதே ஒழிய அவை கதாபாத்திரங்கள் என்ற பிடிப்பு ஏற்படவில்லை.
ஆப்பரேஷன் சக்சஸ் ஆனால் நோயாளி அவுட் என்பது போல, அவர்கள் விரும்பிய காமெடியானது வசனங்கள் மூலமே வந்து விட அடிப்படையான அந்தக் கதாபாத்திரங்களும் அவற்றின் செயல்பாடுகளும் பலவீனமாகி விட்டன, விளைவு இப்போதும் பல காட்சிகள் பகல் பனிரெண்டு மணி நேர டி வி சீரியல் போலவே உள்ளன
பாண்டிராஜ் பின்னாளில் தனது பாணியாக வரித்துக் கொண்டு வெற்றி பெற்ற கூட்டுக் குடும்பக் கதைகளான கடைக்குட்டி சிங்கம்படம்….. கிட்டத்தட்ட அதனுடைய இன்னொரு வெர்ஷன் என்றாலும் தனித் தன்மையாகவும் இருந்த நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இருந்த உயிர்… இந்தத் தலைவன் தலைவி படத்தில் இல்லை.
என்னதான் நித்யா மேனன் சிறந்த நடிகை என்றாலும் கேரக்டர் பொருத்தம் வேண்டாமா? மறுமணம் டாட் காம் மூலம் மாப்பிள்ளை தேடிக் கல்யாணம் செய்து கொள்ளும் தோற்றத்தில் இருக்கிறார் நித்யா மேனன் . கல்யாணப் பெண் என்ற கதாபாத்திரத்தை மீறிய முதிர்ச்சிக்கு அவர் முகம் உருவம் யாவும் வந்து விட்டது.
எப்போது நித்யா மேனன் விஜய் சேதுபதிதான்ஜோடி என்று முடிவானதோ அப்போதே படத்தில் வரும் பெண்பார்க்கும் படலம் கல்யாணத்துக்கு முந்தைய காட்சிகள் இவற்றை தூக்கி விட்டு வேறு மாதிரி திரைக்கதையை பாண்டிராஜ் மாற்றி இருக்க வேண்டும்.
அந்த ஆரம்பக் கோணல் கடைசி வரை வளைந்து நெளிந்து கொண்டே வருகிறது.
கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்பது இடைவேளையிலேயே புரிந்து விடுவதால் , இன்னும் ஒரு மணி நேரம்தானே என்ன நடக்குதுன்னு பாப்போம் என்றே ரீதியில்தான் மீதிப் படமும் கழிகிறது
கூடவே வைத்து இருந்தால் ஒரு நிலையில் கொள்ளி வாய்ப் பிசாசிடம் கூட பீடிக்கு நெருப்பு எடுக்கலாம் என்பார்கள். அப்படி இந்தக் கேரக்டர்களை சகித்துப் பழகிப் பழகி, கிளைமாக்சுக்கு முந்தைய சில காட்சிகள் ரசிகர்களை கொஞ்சம் கட்டிப் போடும் . இந்த பகுதி ரசிகர்களுக்கு பிடித்தால் படம் தியேட்டரில் தாக்குப் பிடிக்கும்.
அவசரப்பட்டு விவாகரத்து செய்யாதீர்கள். அப்படி செய்து விட்டால் அதன் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ஈகோ இல்லமால் , விவாகரத்து செய்வதற்கு முன் , ஒரு முறை திறந்த மனதோடு யோசித்து விடுங்கள் என்ற ஃபைனல் லைன் அபாரம் .
இந்த காரணத்துக்காக தங்கள் மனைவியை சில கணவர்களும் தங்கள் கணவரை சில மனைவிகளும் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வருவார்கள். அதுவும் இந்தப் படத்துக்கு பிளஸ் என்று சொல்லாமல் என்றால்
அதுதான் தெரிஞ்ச கிளைமாக்ஸ் ஆச்சே . வித்தியாசமாக எதையாவது செய்வோம் என்று நினைத்து …
‘ஆறு மாசம் கழித்து .பிரச்னை தொடர்கிறது . பிரசனைக்கு எந்த தீர்வும் இல்லை ; இது ஒரு தொடர்கதை மாதிரி.. ” என்று சொல்லி சேம் சைடு கோல் போட்டு படத்தை முடிக்கிறார்கள் .
என்னத்தைச் சொல்ல….
மொத்தத்தில் தலைவன் தலைவி …… ஜஸ்ட் ஒரு துணைக் கதாபாத்திர ஜோடி.
