அக்யூஸ்டு @ விமர்சனம்

ஜேசன் ஸ்டுடியோஸ்,  சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன்  சினி புரொடக்ஷன்ஸ், MIY ஸ்டுடியோஸ் சார்பில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலகேரி, ஷாந்திகா  ஆகியோர் நடிக்க, பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கி இருக்கும் படம். 

ஜாலியான ரவுடி ஒருவனை (உதயா) கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பணியில், முதன் முதலில்  ஈடுபடுத்தப்படுகிறான் , உயர் அதிகாரி வீட்டில்  வீட்டு வேலை செய்யும் ஒரு போலீஸ் இளைஞன்( அஜ்மல்) . இளைஞனுக்கு அடிக்கடி போனில் பேசும் ஒரு காதலி(ஷாந்திகா) உண்டு. 
 
பயணம் விபத்தில் முடிய,  தப்பிக்க முயலும் ரவுடியை போலீஸ் இளைஞன் விடாமல் பிடிக்கிறான் என்று பார்த்தால், அங்கே ஒரு திருப்பம். கைதியை ஓர் மோசமான அரசியல்வாதி வழியில் என் கவுண்டரில் போட்டுத் தள்ள சொல்ல, அதை விரும்பாத போலீஸ் இளைஞன் கைதியை காப்பாற்றுகிறான் . தொடர்ந்து அரசியல்வாதியின சொல்படி நடக்கும் போலீசின் சதி , கைதியை கொல்ல முயலும் அடியாள் படை , அரசியல்வாதிக்கு உதவும் இன்னொரு போலீஸ் டீம் இவர்களிடம் இருந்து கைதியை போலீஸ் இளைஞன் பல சிரமங்களுக்கு இடையில் காக்கிறான். 
 
கைதி ஒரு அரசியல்வாதியை கொன்றதன் காரணமாக கைது செய்யப்பட்டு இருப்பதும் போலீஸ் இளைஞனுக்கு தெரிகிறது . 
 
கொல்லப்பட்ட அரசியல்வாதிக்குமான ரவுடிக்குமான பழைய தொடர்பு  , அப்புறம் பகை   , அரசியல்வாதி தரப்பில் சில சதி துரோகம் என்று போய் , ரவுடி தான் கொன்றானா ? ஆம் எனில் காரணம் என்ன? இல்லை எனில் நடந்தது என்ன என்பதை சில பல அந்தக் கால தரை டிக்கட் செண்டிமெண்ட் காட்சிகள் வசனங்கள் மூலம் சொல்லி முடிக்கிறார்கள் . 
 
சிம்பிளாக கதை என்று பார்த்தால் ஜஸ்ட் ஒகே தான். ஒரு திருப்பம் ஒரு நிலையில் அது இல்லை இது என்று தலைகீழாக வேறொன்று சொல்வது என்பது கூட ஒகே தான் . 
 
ஆனால் இப்படியே சொல்லிக் கொண்டே போவதால்,  மலைப் பாதையில்  புதிதாக பயணிக்கும் வாந்தி வரும் வாய்ப்புள்ள நபரின் மன நிலைக்கு,  எல்லோரும் ஆளாகிறோம். எலுமிச்சம்பழம் புளிப்பு மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு படம் பார்த்தாலும் தப்ப முடியாது . 
 
உதயா உற்சாகமாக நடிக்கிறார் .ஆனால் ஓவரோ  ஓவர் உற்சாகம் . 
 
அஜ்மல் எல்லா வசனங்களையும் கடித்து மென்று துப்புவதால் ஒஎஉ மண்ணும்  புரியல , கண்ணாடி போடும் பழக்கம் உள்ள நபர் கண்ணாடியை மிஸ் செய்தால் எப்படி தப்பித் தவறி நடந்து இலக்கை அடைவார் . அப்படி நாமாக அவர் இதான் பேசியிருக்கார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 
 
 ஜான்விகா கலகேரி, ஷாந்திகா   நன்றாக இருக்கிறார்கள் . ஜான்விகா நன்றாக நடிக்கிறார். ஆனால், பொருத்தமில்லாத காஸ்டியூம் அழகியல் இல்லாத ஒளிப்பதிவு , டல்லான  பின்புலம் என்று ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது . 
 
நர்சரி ரைம்சே பரவாயில்லை எனும் அளவுக்கு குழந்தைத்தனமான வசனங்கள்.
 
ஒரு சில இடங்களில் யோகி பாபு சிரிக்க வைக்கிறார் அதற்காக மிக சீரியசான சிச்சுவேஷனில் கைதியும் போலீஸ் நாயகனும்  பாபுவோடு சேர்ந்து குத்தாட்டப் பாடல் பாடுவது எல்லாம்- அதுவும் இடைவேளை வரப் போகிற நேரத்தில் . .. முடியல. 
 
கேரக்டர்கள் எழுதப்பட்ட விதம் சிறப்பாகவும் இல்லை கமர்ஷியலாகவும் இல்லை. 
 
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் செயற்கையாக நடித்துத் தள்ளுகிறார்கள். 
 
தன்னை நேசித்தவன் கெட்டவன் என்று நினைப்பது அதனால் மனம் வெறுப்பது நியாயம். . ‘ நீ நினைக்கும் கெட்டவன் நானில்லை”  என்று சொன்ன பிறகும் அறுத்துக் கொண்டு சாவது எல்லாம் … வீட்ல இருந்து எடுத்து வந்த கத்திக்கு வேலை கொடுக்காமல் போனால் தப்பு என்பது போல ஓர் எழுத்து. 
 
படத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள்,  பலரையும் பலரும் சுடுகிறார்கள் வெட்டுகிறார்கள் . குத்துகிறார்கள் . உருவுகிறார்கள். முறுக்குகிறார்கள் . 
 
அடுத்து கத்திக்கு இறையவாது படம் பார்க்கும் நாமாக இருக்குமோ என்று கைகால்கள் எல்லாம் நடுங்கும் போது,  ஒரு வழியாக  படத்தை முடித்து நம்மை உசுரோடு வெளியே அனுப்புகிறார்கள் . 
 
மொத்தத்தில் அக்யூஸ்டு … நீதிமன்றத்தின் நேரம் விரயம்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *