ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க, அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும் நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோரின் உடன் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி என்.பி. இஸ்மாயில் இயக்கும் படம் ஐ ஆர் 8 .
சிங்கமுகம், சொல்லமாட்டேன், வாங்க வாங்க போன்ற படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள நான்காவது படம் இது.
குறுகிய நாளில் அதிக மகசூல் தரும் என்ற பெயரில் 1960களின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு , நிலத்தை மலடாக்கி, இயற்கை இரு உற்பத்தியை கெடுத்து நெல்லின் தரத்தை அழித்த நெல் ரகமே ஐ ஆர் 8 .
ஆனால் “ஐ ஆர் 8 நெல் ரகத்தில் நெல் மணி திரண்ட பின்னும் பயிர் வளையாமல் கம்பீரமாக நிற்கும் .

அப்படி விவசாயியும் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தேன் ” என்கிறார் இயக்குனர் .
தொழில் படிப்பு படித்த மூன்று பிள்ளைகளும் கை விட்ட நிலையில் விவசாயத்தையும் செய்ய முடியாத சூழலில் ஒரு மானமுள்ள விவசாயி என்ன ஆனான் என்பதை சொல்லும் படம் இது .
ஒளிப்பதிவு – கே.வி.மணி
பாடல்கள், இசை – கோண்ஸ்
எடிட்டிங் – B.S.வாசுஸ்டண்ட் – நாக் அவுட் நந்தா
தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல்
படத்தில் இடம் பெறும் , ‘உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்…?’ , ‘மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு மனிதா மனம் கொண்டு உழைத்தாலே கிடைக்காத பலன் தான்…’ ஆகிய இரு தத்துவ பாடல் வரிகள் இதயங்களில் இடம் பிடிக்கும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் அருகே உள்ள தீர்த்தமலை, வேட கட்டுமடுவு கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பள்ளி மாணவர்களும் தலைமை ஆசிரியரும் படப்பிடிப்பிற்கே வந்தனர்.

திகைத்துப் போன இயக்குனர் படப் படப்பிடிப்பினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லையா?என்ற அச்சத்துடன் எதிர்நோக்க
”நம் வாழ்வாதாரமே விவசாயம்தான் அதற்காகவே படம் எடுக்கும் உங்களை பார்த்து வாழ்த்து சொல்ல வந்தோம் ” என்றதும் மனம் குளிர்ந்தார் இயக்குனர். ”முடிந்தால் எங்கள் மாணவர்களுக்கு விவசாயம் பற்றி சொல்லிக் கொடுங்கள்” என்றார் தலைமை ஆசிரியர் .
உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர் வேண்டுகோளுக்கு இனங்க பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து விட்டு விடைபெற்றார் இயக்குனர்.
பழனி, சேலம், தர்மபுரி,அரூர் அருகே உள்ள தீர்த்தமலை, வேடகட்டு மடுவு ஆகிய ஊர்களில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் ஆர் வி உதயகுமாரும் ஆர் கே செல்வமணியும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
” விவசாயியின் நிலையம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் நிலையம் ஒன்று இருவருமே உழைப்பையும் முதலையும் போட்டுவிட்டு கடைசியில் ஓட்டாண்டியாக நிற்கிறார்கள். பலன் யாருக்கோ போகிறது ” என்றார் ஆர் கே செல்வமணி .
“நீரின்றி விவசாயம் செய்ய முடியாது . நதிகளை இணையுங்கள் . நீர் வரும் . விவசாயம் வளரும் ” என்றார் ஆர் வி உதயகுமார் .
” விவசாயம் பற்றி பேசும் என் படத்தை விவசாயத்தின் அருமையை உணர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார் இயக்குனர் இஸ்மாயில்
