எதிர்பார்ப்பைத் தூண்டும் இடி மின்னல் காதல் ட்ரைலர்.

Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில்,  நடிகர் பிக் பாஸ்  சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில்  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
 
விழாவினில் திரையிடப்பட்ட முன்னோட்டம் சிறப்பாக கவனம் கவரும்படி இருந்தது. 
 
விழாவில் தயாரிப்பாளர் – இயக்குநர் பாலாஜி மாதவன் பேசியபோது, “பி.வாசு அங்கிள் குடும்பத்தில் இருந்து  மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். அவர் எனது தாய் மாமா. ஆனால் நான்  சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது,   மிஷ்கின் சாரிடம் இருந்ததுதான் என் திரைப் பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம்.  அவரை நடிகராகத்தான்  அணுகினேன், ஆனால் அவர் ராக்கெட்டரி படத்தின் ஸ்கிரிப்ட் தந்து படிக்கச் செய்தார். அப்போது அந்தப் படத்தின்  இயக்குநரே அவர்தான்  என்பதே தெரியாது.  அந்தப் படத்தில் இணைந்தேன். அந்தப்படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய அனுபவம். 
 
மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பனும்  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளருமான ஜெயச்சந்தர் பெரும் துணையாக இருந்தார். அவர்தான் நாமே பண்ணலாம் என சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. மூவருக்கும்  இந்நேரத்தில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே உங்களால் முடியுமா? எனக் கேட்கவில்லை முழு ஆதரவு தந்தார்கள். 
 
ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், எடிட்டர் ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். இந்தப் படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல,  திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.  மாதவன் சாருக்கு நான் ஒரு கதை எழுதினேன் செய்த கதைக்கும்  சாம்  சி எஸ்தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப்ப டத்தை நாம் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று சொல்வார். இந்தப் படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார்.  நாங்கள் எடுத்துக் கொடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார். 
 
ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன், ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது, பாலசுப்பிரமணியம் படத்தின் புரடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். அவருக்கு நன்றி. காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர்தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன் அவருக்கு நன்றி. முழுப் படமும் பார்த்தாகிவிட்டது எல்லோருமே அற்புதமாக நடித்துள்ளார்கள்.   என் மாமா  இயக்குநர் வாசு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். ஒரு நல்ல படம் தந்துள்ளோம்”என்றார்.   
 
தயாரிப்பாளர் ஜெயச்சந்தர் பேசியபோது,”பாலாஜியே எல்லாம் பேசி விட்டார். இது எங்கள் கனவு. இந்தப் படத்திற்காக எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். எங்கள் குடும்பம் எங்கள் கூடவே இருந்தது. மிக முக்கியமாக ட்ரீம் வாரியர்ஸ் படம் பார்த்ததிலிருந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படம் கதையை நம்பி எடுத்த படம். மார்ச் 29ம் தேதி படம் வெளியாகிறது. படத்திற்கு உங்கள் ஆரவைத் தாருங்கள் “என்றார். 
 
நடிகை யாஸ்மின் பேசியபோது, “படத்தில் என்  ரோல் பத்தி சொல்ல மாட்டேன் நீங்களே படம் பார்த்து சொல்லுங்கள். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். “என்றார். 
 
நடிகர் வின்சென்ட் நகுல் பேசியபோது, “என் சினிமா கனவுக்கு விதை போட்ட பிரபு சாலமன் சாருக்கு முதல் நன்றி. இயக்குநர் பாலாஜி கதை சொன்னார்.  மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பதாக இருந்தது என சொன்னார். நான் உங்களுக்கு என் மீது  நம்பிக்கை இருக்கா என்றேன். இருக்கு என்றார். படம் முடித்த பின் எந்த பாத்திரம் என்றாலும் நடிக்கலாம் என  என் மீதே நம்பிக்கை வந்துள்ளது. “என்றார் 
 
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பேசியபோது, “இயக்குநர் பாலாஜியை மிஷ்கின் சாரிடம் வேலை பார்த்த காலத்திலிருந்து தெரியும். மிஷ்கின் சார் எனக்கு இரண்டு கிஃப்ட் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் பாலாஜி. படம் நன்றாக வந்துள்ளது.”என்றார். 
 
நடிகை பவ்யா பேசியபோது, “இடி மின்னல் காதல் பெயரிலேயே மிக பெரிய  அர்த்தம் இருக்கிறது. படம் வந்தபிறகு உங்களுக்கும் அந்த அர்த்தம் புரியும். பாலாஜி, பாலசுப்ரமணியம் இருவரும் எப்போதும் கூலாக இருப்பார்கள்,  எவ்வளவு பிரஷர் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி. நடிகர் சிபி சூப்பர் கோ ஸ்டார். மிக ஆதரவாக இருந்தார். யாஸ்மின் மிக அழகாக நடித்துள்ளார். ஜெகன் எனக்கு ஒர்க்‌ஷாப் எல்லாம் எடுத்தார், அவர் ரொம்ப புரஃபஷனல். அவரால் எனக்கு நிறைய கான்ஃபிடன்ட் வந்துள்ளது.”என்றார் 
 
நடிகர் ஜெகன் பேசியபோது, “இந்த விழாவிற்கான மெனக்கெடலே மிகவும் அருமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீடியா தரும் ஆதரவிற்கு நன்றி. பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சி பெற்ற பேச்சாளர் போலப் பேசி விட்டார். ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டுமென பாலாஜியிடம் கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு மெனக்கெடுகிறார். தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகள், பி வாசு சார், இயக்குநர் உதயகுமார் ஆகியோர்  வாழ்த்த வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி. “என்றார். 
 
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியபோது, “பாலாஜி வேறொரு கதை தான் முதலில் சொன்னார். அப்புறம் தான் இந்தப் படம் வந்தது. ராக்கெட்ரி படத்திலிருந்தே அவரைத் தெரியும். அதில் நடித்திருப்பார். இவர் எப்படி படம் இயக்குவார் என நினைத்தேன், அவர் இப்படத்தை எப்படி செய்துள்ளார், என்பது இங்கு பேசியவர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். எல்லோரும் இவ்வளவு கான்ஃபிடன்ட்டாகப்  பேசுகிறார்கள் என்றால் கதை அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எல்லோருமே அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். இயக்குநர் பாலாஜிக்கும் எனக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும். போகப்போக, அவர் என்னைப் புரிந்து கொண்டார். பாலாஜி கதைகள் நிறைய வைத்துள்ளார் எல்லாமே அருமையாக இருக்கும். தமிழில் சிறப்பான கதைகள் இருக்கிறது ஆனால் ஒரு ஹீரோ இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இங்கு கடந்த வருடம் ஜெயித்த படங்கள் எல்லாம் கண்டண்ட் நன்றாக இருந்த படங்கள் தான். “என்றார்.
 
நடிகர் சிபி பேசியபோது, “இந்தப் படத்தின் கதை கேட்டபோது எனக்கு முக்கியமாகப் பட்டது.  மெண்டல் ஹெல்த். நமக்கு  மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம்தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். பிக்பாஸ் வந்தபிறகு பல கதைகள் வந்தது, ஆனால் நாம் ஒரு படத்திற்குள் போகிறோம் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பாலாஜி அந்தளவு உண்மையான மனுஷன். அவர் எத்தனை வலிகளை அனுபவித்து வருகிறார் என்று தெரியும். எல்லோருமே உண்மையாக நேர்மையாக நம்பிக்கையுடன் உழைத்துள்ளோம்.  எல்லோரும் இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும்.  வெற்றி பெற வேண்டும்”என்றார். 
இயக்குநர் பேரரசு, “ஹீரோ மிகத் தெளிவாகப் பேசினார். பிக்பாஸ் பற்றி அவர் சொல்லியது உண்மை. இசையமைப்பாளர் சாம் அற்புதமாக இசையமைத்துள்ளார். இயக்குநர் பாலாஜி எல்லோரையும் பற்றி மிக அன்போடு குறிப்பிட்டுப் பேசினார். படம் டிரெய்லர் மிக நன்றாக வந்துள்ளது. “என்றார் 
 
இயக்குநர் ஆர் வி உதயகுமார், ” இயக்குநர் வாசுவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இயக்குநரின் திறமை புரிந்தது. அத்தனை புகழ்ந்தார். டிரெய்லர் பார்த்தவுடன் அவரது திறமையின் மேல் நம்பிக்கை வந்தது. நான்கைந்து பாத்திரங்களை வைத்து நல்ல திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் இணை தயாரிப்பாளர்கள் என்று 11 பெயர் வந்தது. இயக்குநருக்கு ஆதரவாக இருந்த அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் இசை மிக அருமையாக உள்ளது. படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார். 
 
இயக்குநர் வாசு பேசியபோது, “பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்கு பேசியவர்களை  வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள். இதைக் கேட்ட பிறகுதான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது. இசையமைப்பாளர் சாம் மிக அருமையாகப் பேசினார். பல விசயங்கள் குறித்துத் தெளிவாகப் பேசினார். யார் ஹீரோ எனக் கேட்காமல் என்ன கதை எனக் கேட்க வேண்டும் எனச் சொன்ன  போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது. நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம். 
 
சின்னத் தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க  மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது. பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப் படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சிபி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல கதைக்கு மீடியா எப்போதும் முழு ஆதரவைத் தரும். எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்.  “என்றார். 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *