லீஃப் புரடக்ஷன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சுஜித் ஸ்டெஃபனோஸ் தயாரிக்க,
பினீஷ் ராஜ் என்பவர் விசுவல் எஃபக்ட்ஸ் செய்து இயக்கி இருக்கும் படம் இலை. திரையரங்கங்கில் துளிர்க்குமா? பார்க்கலாம்
மலைப்பாங்கான – அரசின் கைகள் அதிகம் நீளாத ஒரு பின் தங்கிய கிராமத்தில் , பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய குடும்பத்தில்மூத்த வாரிசாக அதுவும் ஒரு பெண்ணாகப் பிறந்து ,
படிப்பின் மீது ஆர்வம் கொண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி இலை (டாக்டர் சுவாதி நாராயணன்)
மகளை நன்றாக படிக்க வைத்து பெரிய வேலைக்குஅனுப்பும் கனவில் உள்ள அப்பா மாரிமுத்து ( டாக்டர் கிங் மோகன்),
மகள் படிப்பதை விரும்பாமல் தன் தம்பிக்கு அவளைக் கட்டி வைக்க நினைக்கும் அம்மா ராமாயி (ஸ்ரீதேவி அனில்) ,
ஆணாத்திக்க மனோ பாவத்தோடு வளர்க்கப்பட்டு, தான் படிக்காததோடு ‘தன் அக்காவும் படிக்கக் கூடாது’ என்று எண்ணும் ஒரு தம்பி அன்பு (அஷ்வின் சிவா)
கைக்குழந்தையான ஒரு தங்கைப் பாப்பா (பேபி செனியா)
இலை நன்கு படித்து விட்டால் தமக்கு கிடைக்க மாட்டாள் என்பதால் அவள் படிப்பை கெடுக்க முயலும் தாய்மாமன் மணிகண்டன் (தயாரிப்பாளர் சுஜித் ஸ்டெஃபனோஸ்)
காலை எழுந்தால் பள்ளி கிளம்பும் வரை கை கால் ஓடிய வேலைகள்… அது தவிர ”படிச்சு என்னத்த கிழிக்கப் போற?” என்று எல்லோரும் தினசரி செய்யும் கிண்டல்கள்
ரொம்ப தூரம் நடந்து போகவேண்டிய தூரத்தில் உள்ள பள்ளிக் கூடம் ,
ஆதரவான இரண்டு பள்ளித் தோழிகள், ஒரு படிக்காத தோழி,
இவ்வளவு சிரமத்துக்கு இடையிலும் படிப்பில் முதல் மார்க் வாங்கும் இலையை எப்படியாவது பத்தாம் ஆண்டு தேர்வு எழுத விடாமல் தடுக்க திட்டமிடும் பணக்கார வீட்டு மாணவி ,
அதற்கு துணை போகும் அந்தப் பெண்ணின் தந்தையான ஒரு பண்ணையார் ,
இலை படிப்பதை விரும்பாத கிராமத்துப் பெண்கள்
அக்கறை காட்டும் ஓர் ஆசிரியர் …
பசுமாடு , கன்றுக் குட்டி , கோழிகள்
இவர்களுக்கு இடையே இலை !
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் கடைசி தேர்வை இலையை எழுத விடாமல் தடுக்க முயலும் பண்ணையாருக்கு, இலையின் தாய் மாமன் துணை போக,
தேர்வு அன்று காலை பண்ணையார் தன வெறி பிடித்த தம்பியை அவிழ்த்து விட,
அவன் மாரிமுத்துவை அடித்துக் கடித்துப் படுகாயப்படுத்துகிறான் .
மாரி முத்துவை தூக்கிக் கொண்டு ராமாயி மருத்துவ மனைக்கு போய் விட ,
வீட்டு வேலை, தங்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பணி, உதவிக்கு வராத தம்பி, மாட்டிடம் பால் கறந்து தரச் சொல்லி வற்புறுத்தும் டீக்கடைப் பெண்மணி, உதவிக்கு வராத மற்ற பெண்கள்,
குடிகார ஆண்கள்,
அவள் தேர்வுக்கு போவதை தடுக்க பாதையில் படிப்படியாகக் காத்திருக்கும் தாய் மாமன், பண்ணையார் மற்றும் அடியாட்கள் இவர்களைக் கடந்து இலையால் தேர்வு எழுதப் போக முடிந்ததா ?
ஆம் எனில் அமைந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன என்பதே இந்த இலை .
படத்தின் கதை மிக அற்புதமானது . நெகிழ்ச்சியானது . போற்றுதலுக்கு உரியது
வனப் பகுதியில் படத்தை எடுத்து , அதை தனது சிறப்பான விசுவல் எஃபக்ட் திறமையால் மேம்படுத்தி அழகூட்டி இருக்கிறார் இயக்குனர் .
தேர்வுக்குப போக விடாமல் இலைக்கு அடுத்தடுத்து வரும் பிரச்னைகள் பின் தங்கிய கிராமத்தில் , பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய குடும்பத்தில்,
கல்வியின் அருமை அறியாக் குடும்பத்தில் பெண்ணாகப் பிறப்போரின் கையறு நிலையைக் காட்டி பதற வைகினறன . அருமை .
இலையாக நடித்து இருக்கும் டாக்டர் சுவாதி நாராயணன் பரிதாபங்களை அள்ளிக் கொள்கிறார் . ஆனால் அதற்கு காரணம் கதாபாத்திரமும் காட்சிகளுமே .
பல பெரிய மனிதர்கள் நடித்திருக்கும் படத்தில் நடிப்பில் பெரிய மனிதனாக உயர்ந்து நிற்கிறான் இலையின் தம்பியாக நடித்து இருக்கும் அஷ்வின் சிவா .
ஆரம்ப ஆணாதிக்க ஆணவம், அக்காவிடம் தவறாக நடக்க முயலும் தாய் மாமனிடம் சீறல், ‘அப்பா தானாக சாகவில்லை . கொலை செய்யப்பட்டார்’ என்று அறிந்த உடன் உடைந்து அழுதல் …
அசத்திட்டடா கண்ணா . கிளாஸ் !
படமாக்கலில்தான் சோர்வுக்கு ஆளாக்குகிறார் இயக்குனர் . தேவைக்கு அதிகமான கால அளவில், காரணம் இன்றி நீளும் ஷாட்கள் ரசிகனுக்கு கிடைக்கும் உணர்வின் அளவை அநியாயமாகக் குறைக்கின்றன .
ஒரு விஷத்தை எப்படி ஷார்ப்பாக சொல்ல வேண்டும் என்பதில் பிரச்னை . அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான அறிகுறிகளை அவராகவே காட்டுவதும் ஒரு பின்னடைவே
நடிப்புக்காக மேலே பாராட்டப்பட இருவரோடு சுஜித் ஸ்டெஃபனோஸ் தவிர மற்ற எல்லோரும் படு செயற்கையான நடிப்பு .
அதே போல வசனங்கள் படு செயற்கை என்றால் , நடித்தவர்கள் அதை ஏதோ மாரியம்மன் கோவில் திருவிழா டிராமா கணக்காக நீட்டி முழக்கி இன்னும் செயற்கையாக பேசி இருப்பது இன்னும் கொடுமை .
பொதுவாக தமிழர்கள் என்றால் மோசமானவர்கள் தமிழ்ப் பெண்கள் எல்லாம் ராட்சசிகள் என்றால் மோசமானவர்கள் என்ற சிததரிப்பை,
கதாபாத்திரத்துக்கும் மேலாக மேக்கிங் மூலம் படத்தில் நிறுவ முயல்கிறார் மலையாளியான இயக்குனர் பினீஷ் ராஜ் .
ஒரு மலை கிராமத்தில் தேர்வு எழுதப் போகும் பெண்ணுக்கு உதவியாக, ஒரு குழந்தையை மூன்று மணி நேரம் பார்த்துக் கொள்ள யாருமே இல்லை என்பதெல்லாம் கலாச்சாரம் தெரியாத சிந்தனை . சுத்தப் பேத்தல்
பள்ளிக்கு தூக்கிக் கொண்டு போனாலே பார்த்துக்க ஆள் கிடைக்குமே .
இப்படி பல குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த அடிப்படைக் கதையால் பசுமை காட்டுகிறது இல்லை




