
அ ந அய்யும் கிரியேஷன்ஸ் சார்பில் லட்சுமி பிரபா அய்யும் கணபதி தயாரிக்க, ராஜு , ஆஷா லதா, விக்கி மஞ்சு , ஆகியோர் நடிக்க ,
அரிதாரம் படத்தை இயக்கிய விஜய் டி..அலெக்சாண்டர் இயக்கி இருக்கும் படம் இந்திர கோபை .
இந்திர சபை தெரியும் . கோப்பை கூட ஒகே . அது என்ன இந்திர கோபை ?
மழைக்காலங்களில் மட்டும் வரும் ஒரு வகை பூச்சியாம் அது . அதன் பின்னர் பொடிப் பொடியாக உதிர்ந்து விடுமாம் . மீண்டும் மழை வரும்போது ஒவ்வொரு துகளும் ஒரு பூச்சியாக உருவெடுத்து விடுமாம் .
அதுபோல ,
தமது மண வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தேடுத்வர்களை ஏற்காத பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் அவர்களை துன்புறுத்தி வாழ விடாமல் ஒழித்தால் ,
அப்படி பொடிப் பொடியாக உதிரும் காதல், மீண்டும் பல ஜோடிகளின் காதலாக உருவெடுக்கும் என்பதை சொல்ல வரும் படமாம் இது .
தெலுங்குப் படங்களில் நடித்த ஆஷா லதா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகி ஆகி இருக்கிறார் .
பொருத்தமான கதாநாயகன் செட் ஆகாத நிலையில் படப்பிடிப்புக்குப் போன படக் குழு கதாநாயகன் அல்லாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்க ,
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ராஜு என்பவரை சம்மதிக்க வைத்து ஹீரோ ஆக்கினார்களாம் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டததையும் மூன்று பாடல்களையும் திரையிட்டனர் .
கிராமத்து ஜோடி ஆளரவமற்ற வாய்க்கா , வரப்பு, காடு கரை கண்மாய் , வனம் என்று எல்லா இடங்களிலும் சுற்றித் திரிவதையும் அவர்களுக்கு வரும் எதிர்ப்பையும் சொன்னது முன்னோட்டம் .
ஒரு டூயட் பாடலை படு கவர்ச்சியாக எடுத்து இருந்தார்கள் (சென்சாருக்கு தப்புமா ?) ஒரு நாட்டுப்புற குத்தாட்டப் பாடலும் இருக்கிறது . அதில் தயாரிப்பாளரும் இருக்கிறார் .
நிகழ்ச்சியில் இது பற்றிப் பேசிய கதாசிரியரும் , பி ஆர் ஓ யூனியனின் முன்னாள் செயலாளருமான பெரு. துளசி பழனிவேல் ” பொதுவாக படத்தின் தயாரிப்பாளர் டெண்ஷனாகவே இருப்பார் .
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் குத்தாட்டப் பாடலில் எல்லாம் ஆடி இருக்கிறார் .
அப்படியானால் அவர் படப்பிடிப்பில் யூனிட்டை இயல்பாக வேலை செய்ய விட்டிருக்கிறார் என்று அர்த்தம் . அதுதான் அவர்கள் தயாரிப்பாளரையே ஆட வைத்து உள்ளனர் .
தயாரிப்பாளரும் சந்தோஷமாக ஆடி இருக்கிறார் என்றால் படம் நன்றாக வந்துள்ளது என்று அர்த்தம் ” என்றார் .
தயாரிப்பாளர் தேனப்பன் பேசும்போது ” நான் புரடக்ஷன் மேனேஜராக இருந்து தயாரிப்பாளராக வந்தவன். இந்த விழாவில் புரடக்ஷன் மேனேஜர் சின்னமணியை தயாரிப்பார் கவுரவப்படுத்தினார்.
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இப்படி எல்லாவற்றையும் சரியாக செய்யும் தயாரிப்பாளர் கண்டிப்பபாக வெற்றி பெறுவார்
” என்று கூற,
அதையே வழி மொழிந்தார் இயக்குனர் அரவிந்த் ராஜ்
தயாரிப்பாளர் தனது பேச்சில் ” நாங்கள் மலை அடிவாரத்தில் படப்பிடிப்பு நடத்திய போது பயங்கர காற்று வீசும் . அந்த சமயத்தில் சிறு சிறு பாறைகள் கூட உருண்டு வந்து விழும் .
கற்கள் பறந்து வந்து தாக்கும் . மண் விழும் . அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் காயம் ஏற்பட்ட போதுகூட அதை பொருத்துக் கொண்டு
யூனிட்டில் உள்ள அனைவரும் படபிடிப்பை நடத்தினார்கள் . அதை நான் மறக்க மாட்டேன் ” என்றார் .