
கோல்டன் பீகாக் பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் சந்துரு தயாரிக்க,
ஹரிதாஸ் , குமரேஷ் , டேனிஷ், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஷ்பா நாராயணன், சீலன், ஆர் எஸ் ராஜா தர்மா ஆகியோர் நடிக்க, ,
எஸ் டி புவனேந்திரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் மறவன் .
இயக்குனர் மோகன்ராஜா இயக்கிய தில்லாலங்கடி , வேலாயுதம், ஆர் டி நேசன் இயக்கிய ஜில்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இந்த புவனேந்திரன்.
மலேசியாவைச் சேர்ந்த இவர் சென்னை வந்து தயாரிப்பாளரும் எடிட்டருமான மோகனிடம் சேர்ந்து அப்படியே ராஜாவின் உதவியாளர் ஆனவர் .
இப்போது இந்த புவனேந்திரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க மலேசியத் தமிழில் உருவான இந்தப் படம், நியூயார்க் மற்றும் டாக்காவில் நடந்த உலகப் பட விழாக்களில் விருது பெற்றது .
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஃபீனிக்ஸ் திரைப்பட விழாவில் அரையிறுதிவரை போனது .
தவிர பார்சிலோனா பிளானட் உலகப் பட விழா, ரஷ்யாவில் நடந்த உலகப் படவிழா , மற்றும் சிங்கப்பூர் , ஹாங்காங், உள்ளிட்ட பல நாடுகளின் உலகப் பட விழாக்களிலும் திரையிடத் தேர்வாகி இருக்கிறது .
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் மற்றும் மலேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம், ஆகியவற்றின் ஆதரவில் எக்ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் சார்பில்
டத்தோ ஸ்ரீ ரோஷன் தாஸ் இந்தப் படத்தை மலேசியா சிங்கப்பூர் இலங்கை இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெளியிடுகிறார் .
சென்னையில் நடந்த இந்தப் படத்தின் திரையிடலில் தயாரிப்பாளர் – எடிட்டர் மோகன் , இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஆர் டி நேசன் ,
ஜாக்குவார் தங்கம், கதாசிரியர் பிரபாகர், நடிகர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பற்றி பேசிய பிரபாகர் ” படம் ஆரம்பத்துல கொஞ்சம் நெளிய வச்சது . ஆனால் போகப் போக சிறப்பா வந்துடுச்சி .
வில்லன நடிச்ச ஹரிதாஸ் பிரம்மாதமா நடிச்சு இருந்தார் . லாரி டிரைவர் , மனைவி கேரக்டர்களும் அருமை ” என்றார் .
நடிகர் அசோக் பேசும்போது ” மலேசியக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் ” என்றார் .
ஜாகுவார் தங்கம் தன் பேச்சில் ” நான் கூட மலேசிய தமிழ்ப்படம் என்றதும் அதில் மலேய மொழி இருக்கும் . ஆங்கிலம் இருக்கும் என்று நினைத்தேன் .
ஆனால் முழுக்க மலேசியத் தமிழில் இருப்பது பாராட்டுக்குரியது ” என்றவர் தொடர்ந்து,
” இங்கே மோகன் சாரை அழைக்கும்போது எடிட்டர் மோகன் என்றே அழைத்தார்கள் அவர் எடிட்டர் மட்டுமல்ல … பல படங்களை தயாரித்த சிறந்த தயாரிப்பாளரும் கூட. அதை மறக்க வேண்டாம் ” என்றார் .
அடுத்து மோகன் ராஜா பேசியபோது ” என் அப்பா கூட சொல்வார் .’ நான் எடிட்டராதான் வாழ்க்கையை ஆரம்பிச்சேன் . அப்புறம் புரடியூசர் ஆயிட்டேன் ஆனா என்னை எடிட்டர்னே சொல்றாங்க’ என்பார் .
அப்புறம் அவரே ‘சரி சரி என் முதல் அடையலாம் எடிட்டிங்தானே அப்புறம் அதை சொல்றதுல என்ன தப்பு?’ன்னு சொல்லிக்குவார் .
அப்பா ஒரு தமிழனா இருந்தாலும் ஆந்திரா போய் தெலுங்கு சினிமாவில் உழைத்து உயர்ந்தார் . மிகச் சிறந்த தயாரிப்பாளரா அங்க ஒரு ராஜாங்கமே நடத்தினார் .
அப்புறம் அவரோட பசங்களான நானும் ஜெயம் ரவியும் , சொந்த மண்ணான தமிழ்ல ஜெயிக்கணும்னுதான் அப்படி ஒரு சாம்ராஜ்யத்தை விட்டுட்டு இங்க கவனம் செலுத்த ஆரம்பிச்சார் .
அந்த விஷயம் இங்கே இப்ப பேசப் படுவதில் சந்தோசம்.
புவன்…. மறவன் படத்தை நல்லா எடுத்து இருக்க . சில குறைகள் இருக்கு . அது அடுத்த படத்தில சரி பண்ணிக்க . உன் திறமை நான் அறிவேன் . நிச்சயமா நீ இன்னும் நல்ல படங்கள் கொடுப்ப ” என்றார் .
தயாரிப்பாளர் – எடிட்டர் மோகன் தன் பேச்சில்
” நான் பயந்துகிட்டேதான் படம் பார்க்க உட்காந்தேன் . ஏன்னா புவன் என் மாணவன் . அவன் நல்ல படம் பண்ணலன்னா நான் தப்பான வாத்தியார்னு ஆயிடும்
. அந்த பயம்தான் . ஆனா புவன் என் பேரை காப்பாத்திட்டான் . சந்தோஷம் . இன்னும் நல்ல படங்களை அவன் தருவான் ” என்றார்