கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி என் அன்புச்செழியன் வழங்க, சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிக்க, சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன் , விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் நடிக்க, எழுச்சூர் அரவிந்தன் எழுத்தில் ஆனந்த நாராயணன் இயக்கி இருக்கும் படம்.
சொந்த வீடு இருக்கும் மாப்பிள்ளையைதான் ஏற்றுக் கொள்வோம் என்று பெண்கள் சொல்லும் நிலையில் மேட்ரிமோனியல் அலுவலகத்திலேயே வேலை செய்தபடி , லோன் வாங்கி வீடும் வாங்கியும் வெற்றிவேல் என்ற நபருக்கு ( சந்தானம்) பெண் அமைவது சிரமமாக இருக்கிறது.
வீட்டு கடனை அடைக்க இருபத்தைந்து லட்சம் தரும் பெண்ணையே மணப்பது என்று அவன் முடிவெடுக்க, ஒரு பொண்ணு ஒரு பையன் (பாலசரவணன்) மட்டுமே உள்ள ஜமீன்தார் (தம்பி ராமையா) வீட்டுப் பெண்ணை ( ப்ரியாலயா) பேசுகிறார் புரோக்கர் (மனோபாலா)
பெரிய ஜமீன் வீடு, உடனடி கல்யாணம் , முகூர்த்ததில் அட்சதையில் அரிசிக்குப் பதில் பாதாம் முந்திரி என்று அமர்க்களமாக கல்யாணம் நடந்த அடுத்த நொடி அதிர்ச்சி .

ஜமீனின் வீடு சொத்து எல்லாம் வாங்கிய கடனுக்காக ஜப்தியில் போய்விட , பொண்ணு கல்யாணம் வரை ஜமீன்தார் வங்கியிடம் டைம் கேட்டு இருந்தது தெரிய வருகிறது .
எல்லாம் போக , இப்போது மனைவி மட்டுமல்லாது வீட்டோடு மாமனார் , வீட்டோடு மைத்துனனும் வெற்றிவேல் வீட்டில் சேர்ந்து விடுகின்றனர் .
வாழ்க்கையே வெறுக்கிறது வெற்றிவேலுக்கு
மாமனார் மைத்துனன் செய்த கலாட்டாவால் வேலை போக , வீடு வாங்கக் கடன் கொடுத்த நண்பனும் முதலாளியுமான நபர் ( விவேக் பிரசன்னா) ”உடனே பணம் தரலன்னா போலீசுக்கு போவேன்” என்று மிரட்ட வீட்டுக்கு வர, வந்த இடத்தில் கரண்ட் ஷாக் மூலம் சாக,
பிணத்தை வெளியே போய் மறைத்து விட்டு வந்தால் ….
செத்தது கடன் கொடுத்த முதலாளி அல்ல. அரசு ஐம்பது லட்ச ரூபாய் அறிவித்து இருக்கும் தீவிரவாதி என்று தெரியவருகிறது.
பிணத்தை மீட்கப் போனால் , விஷயம் தெரிந்த அந்த நபர் ( முனீஷ்காந்த் ) தர மறுக்க,

கடன் கொடுத்த நிஜமான நண்பன் உள்ளே வர , தீவிரவாத கூட்டம் உடலை மீட்க களம் இறங்க நடந்தது என்ன என்பதே படம்.
லாஜிக்கும் இல்லாத மேஜிக்கும் இல்லாத ஆனால் கலகல காமெடி பொழுது போக்குப் படம்.
கல்யாணம் நடக்கும்போதே அந்த வீடு ஜப்தியில் இருக்கிறது என்று நமக்கே புரிந்து விடும் . காரணம் கல்யாண வீட்டு வரவேற்பில் வங்கி மேனேஜர் இருக்கும் காட்சியும் , பேங் ஊழியர் எல்லோரும் இங்கேதான் இருக்காங்க என்று அவர் சொல்லும் வசனமும் !
அது எதுக்கு என்றே புரியவில்லை, இப்போ கூட அப்படியே எடிட்டிங்கில் தூக்கி எறியலாம்.
சந்தனத்தின் காமெடி பஞ்ச்கள் பத்துக்கு ஆறு தேறுகின்றன.
இன்னொரு பக்கம் தம்பி ராமையா, பால சரவணன் காட்சிகளிலும் காமடி இருக்கிறது .
கதைக்குப் பொருத்தமாக ஒரு பேரிளம் பெண் மாதிரி தோற்றம் கொண்ட நாயகி .
இது தவிர கிளாமருக்கு சில விலைமாது கேரக்டர்கள் ..

முழுக்க முழுக்க காமெடியாக மட்டும் இருந்தால் படம் முடியும் போது ரொம்ப சிம்பிள் ஆகப் போய்விடலாம் எனபதால் கமரிஷியலாக தீவிரவாத குழு எல்லாம் வருகிறது . பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர் – அவரால் காலிங் சுவிட்ச் மட்டுமே அழுத்த முடியும் என்ற நிலை அதை வைத்து வரும் காட்சிகள் சுவாரஸ்யம்.
குண்டு வைததவனைப் பிடிப்பதற்கான ஐடியா போல சில கவனிக்கத்தக்க காட்சிகளும் உண்டு .
அட்டகாசமான மூன்று பாடல்களைக் கொடுத்து இருக்கிறார் இமான். பின்னணி இசையும் சிறப்பு
ஓம் நாராயணின் ஒளிப்பதிவு சக்தி வெங்கட் ராஜின் கலை இயக்கம் இரண்டும் படத்துக்கு முழு ஆதரவு.
படம் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொய்வடைய விடாமல் அவ்வப்போது சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள் .
மொத்தத்தில்
இங்க நாந்தான் கிங்கு … கமர்சியல் சிம்மாசனமும் காமடி கிரீடமும்