அயல்நாட்டில் இருக்கும் அந்த இளைஞருக்கு சினிமா ஆசை விட்டகுறை தொட்ட குறையாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை . காரணம் அவரது தாத்தா அந்தக் காலத்தில் பல படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர் . ஆனால் அந்த இளைஞர் படம் தயாரிக்க முடிவு செய்தார்.
மாமனார் ரங்கராஜன் அம்மா ராணி ராமகிருஷ்ணன் இருவரும் தமிழகத்தில் இருந்து பார்த்துக் கொள்வார்கள் என்ற நிலையில் தமிழகம் வந்தார் . பல கதைகளை கேட்டார். அவற்றில் தரணிதரன் சொன்ன கதை பிடித்துப் போக , பட்ஜெட் கேட்டு முடிவு செய்தார் . நாற்பதாவது நாளில் எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்டு மீண்டும் பறந்து விட்டார்.
மற்றபடி அதுல் குல்கர்னி, சம்பத்ராஜ், மைக்கேல் , ரேஷ்மா மேனன், போன்ற நடிக நடிகையர் …
ஒளிப்பதிவாளராக யுவா, எடிட்டராக விவேக் ஹர்ஷன், இசையமைப்பாளராக சுதர்சனம் குமார் என்று எல்லோரையும் டைரக்டர் தரணிதரன்தான் முடிவு செய்கிறார் .
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!
அயல்நாட்டில் இருந்து கொண்டே தொலை பேசி மற்றும் இணையதளம் வழியே எல்லா விசயங்களையும் நெறிப்படுத்தி படத்தையும் தயாரித்து முடித்து விட்ட அந்த தயாரிப்பாளர் பெயர் சுதர்சனம் வேம்புட்டி, தனது ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சார்பில் இப்படி ஆன் லைன் மூலமே தயாரிக்கப்பட்ட அந்தப் படம் பர்மா .
வங்கி லோன் மூலம் கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு டபாய்க்கும் ஆட்களை கண்டு பிடித்து,
கார்களை பறிமுதல் செய்வது மற்றும் சில அடாவடி செயல்களை செய்யும் தாதாவாக இருக்கும் சம்பத் ராஜுக்கு போட்டியாக,
பர்மா என்ற ஒரு இளைஞன் வர, அதனால் ஏற்படும் அதகள ரணகளம்தான் இந்தப் படமாம் .
படத்தில் காமெடிக்கு ஒரு பங்கு இருக்கும் என்பது பாடல் வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டப்பட்ட காட்சிகளில் இருந்தே தெரிகிறது .
“நான் வாங்கி வெளியிட நினைத்த படம் இது. சில சூழல்களால் முடியாமல் போய் விட்டது ” என்றார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் சி.வி.குமார்
லைட்டிங்கும் வண்ணமும் சிறப்பாக இருக்க, ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. நடிகர்களின் கெட்டப்களில் ஒரு வித்தியாச முயற்சி இருக்கிறது . இயக்குனரிடம் ஒரு தனித் தன்மை தெரிகிறது.
படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றும் ஒரு பெண் வில்லி…. யாரென்று விசாரிக்க வைத்தார் .
கேரளாவில் பிறந்து பிரான்ஸ் வரை சென்று அங்கும் கேரளாவிலும் பல மலையாள மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கும், ஆ மெல்லிய மலையாள பெண் குட்டியின் பெயர் கனி .
இப்படியாக படத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்பது தெரிகிறது .
எந்த அளவு சுவாரசியம் இருக்கும் என்பது செப்டம்பர் 12 ஆம் தேதி தெரிந்து விடும் . அன்றுதான் படம் ரிலீஸ் .