
ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதிஷ்குமார் வெளியிட ஜி பி ஸ்டுடியோ சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரிக்க , இசைஞானி இளையராஜா இசையில் அஷ்வின் மற்றும் சிருஷ்டி இணைந்து நடிக்க, சுப்பிரமணிய சிவாவிடம் இணை இயக்குனராக இருந்த கார்த்திக் ரிஷி இயக்கி இருக்கும் படம் மேகா . படம் ரசனை மழை பொழியுமா? பார்க்கலாம் .
மேகம் சுரக்கும் ஒரு மழைப் பொழுதில் ஈரமான தேவதை போன்ற பெண்ணை (சிருஷ்டி) பார்த்து பிரம்மித்துக் காதல் சுரந்து அதை அவளுக்கும் உணர்த்தி விடுகிறான் அந்த இளைஞன் .(அஷ்வின்)
நேர்மையான போலீஸ் அதிகாரி உதவியால் (விஜயகுமார்) படித்து தடய அறிவியல் துறையில் பணியில் சேரும் அவனது காதலுக்குள் விழுந்த பெண்ணின் தந்தையோ, அந்த நேர்மையான போலீஸ் அதிகாரியுடனேயே மோதுகிறார்
போட்டோகிராபி வேலையை பொழுதுபோக்குப் பணியாக மேற்கொள்ளும் காதலன் , அந்தப் பெண்ணின் சகோதரியின் கல்யாணத்துக்கு புகைப்படம் எடுக்கப் போக, அந்த சந்திப்புகளில் பிரகாசமாக கவிதையும் கனவுமாய் உணர்வும் உயிர்ப்புமாய் வளர்கிறது காதல்.
நேர்மையான அந்த போலீஸ் அதிகாரிக்கு நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வுக்கு குறி வைக்கும் கறுப்பாடு அதிகாரிகள், அவரைக் கொன்று விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லோரையும் நம்ப வைக்க, முயன்று துப்பு துலக்கி உண்மைகளை கண்டு பிடிக்கிறான் காதல் நாயகன் .
அவனுக்கு வரும் சில மிரட்டல்கள் காதலால் கோபம் கொண்ட காதலியின் அப்பாவால் வருகிறதா? இல்லை உயர் அதிகாரியின் கொலை உண்மையை கண்டு பிடிக்கும் துடிப்பை அடக்க , அந்த பதவி எதிரிகளால் வருகிறதா என்ற உண்மை புரிய வருகையில் அந்த அதிர்ச்சியான அநியாயம் நடக்கிறது.
நாயகனுக்கு வரவேண்டிய ஆபத்து அவனை உயிருக்குயிராய் காதலித்த பாவத்துக்காக அந்த காதல் தேவதைக்கு வருகிறது . விளைவு? கரும்பாலையில் சாறு பிழியப்பட்ட ரோஜாச் செடி போல மருத்துவமனைப் படுக்கையில் அவள் ,
இனி அவள் பிழைப்பதும் அவளுக்கு நினைவு திரும்புவதும் யாருக்குமே தெரியாத சோக மர்மம் என்று ஆகி விட்ட நிலையில் அவளது காதலையே தென்றலாய் சுவாசித்த அவன் என்ன செய்கிறான் என்பதே மேகா .

படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தின் பெயர் மேகவதி என்கிற மேகா. இந்த விஷயத்தை கவிதைப் பூர்வமாக காட்சிப் படுத்த கையிலெடுத்துக் கொண்டு படத்தின் டைட்டில் , பிறகு இடைவேளை மட்டுமின்றி…. படம் முழுக்க ஆங்காங்கே மேகத்தையே ஒரு கேரக்டராக உலவ விட்டிருப்பது அழகு . அழகிய எழுத்துருக்களுடன் கூடிய படத்தின் டைட்டில் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

பனியில் குளித்த செந்தாமரை முகம், ஒட்டு மொத்த காதல் உணர்வின் நீர்ப்பிடிப்புப் பகுதியாய் இருக்கும் அந்த கன்னக் குழிகள் அளவான நடிப்பு இவற்றால் டைட்டில் கேரக்டரை மிக அழகாக சுமந்து ஜொலிக்கிறார் நாயகியாக நடித்து இருக்கும் சிருஷ்டி. உயரம், உருவம் , ஒளிரும் கண்கள் , உணர்ந்து நடிக்கும் நடிப்பு இவற்றால் நாயகன் கேரக்டருக்கு நியாயம் செய்கிறார் அஷ்வின் .
நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு விஜயகுமார், யதார்த்தமான உயர் அதிகாரி பாத்திரத்துக்கு ஜெயப்பிரகாஷ், அராஜக அதிகாரி பாத்திரத்துக்கு நரேன் மூவரும் செதுக்கி வைத்த மாதிரி பொருந்துகிறார்கள். மேகாவின் குடும்ப உறுப்பினர்களுக்கான நடிக நடிகையர் தேர்வும் அருமை .
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும் ராம் சுதர்சனின் படத்தொகுப்பும் காதல் காட்சிகளுக்கு களம் அமைத்து கனம் சேர்க்கின்றன.
ஆனால் இவை எல்லாவறையும் ஒன்று கூட்டி ஒளிரச் செய்து, உடலில் ஓடும் ரத்த ஓட்டம் போல படம் முழுக்க ஓடி தளும்பித் ததும்பி அலையடிக்கிறது இசைஞானி இளையராஜாவின் அற்புத இசை .

அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக உருவாக்கப்பட்ட ”புத்தம் புதுக் காலை” பாடல் அந்தப் படத்தின் பயன்படுத்தப் படாத நிலையில் , அதை மீண்டும் இளையராஜாவின் இசையிலேயே மெருகூட்டி இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் . படத்தில் அந்தப் பாடல் வரும் காட்சியில் மெய் சிலிர்க்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியாது .
தவிர இளையராஜாவின் இசை பிரவாகத்தை இந்தப் படத்துக்காக முதல் முதலாக டால்பி அட்மாஸ்பியரில் கேட்கும் சுகமே அலாதி .
காதல் காட்சிகளை அழுத்தமாக சிறப்பாக ரசித்து எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ரிஷி .
கிளைமாக்சில் நாயகன் செய்யும் காதலான முடிவை அதை விட சிறப்பாக ஓய ஜி மகேந்திரன் கதாபாத்திரம் தனது காதல் மனைவிக்கு முன்பிருந்தே செய்து கொண்டிருப்பதை முன்னரே அழுத்தமாக காட்டி விடுவதால், கிளைமாக்ஸ் எந்த ஒரு பெரிய நெகிழ்வையும் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறை .
நல்ல வேளை.. கோமா ஸ்டேஜில் இருக்கும் கதாநாயகியை காப்பாற்ற முடியாது என்று முடிவு செய்து கதாநாயகியின் ஆக்சிஜன் மாஸ்கை நாயகன் பிடுங்கிப் போட்டு விட்டு போகவில்லையே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அதே போல கதாநாயகி மருத்துவமனையில் இருப்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட நிலையில் அதன் பிறகு வரும் கிளைமாக்சில்….
மயங்கிக் கிடக்கும் கதாநாயகியைக் காப்பாற்றி ஒரு இடத்தில் படுக்க வைத்து விட்டு வரும் காதலன் திரும்பிப் போய் பார்க்கும்போது அவள் அங்கு இல்லை என்பதால் ஆடியன்சுக்கு எந்த பதட்டமோ பரபரப்போ வராது என்பதை இயக்குனர் உணராததும் ஆச்சர்யமே .
ஆனாலும் என்ன …
ஆக்ஷன் , காமெடி , ஆவி , பேய் பிசாசு படைகளின் பெயரைக் கேட்டாலே மக்கள் பட்டப் பகலிலும் பயந்து அலறும் அளவுக்கு தமிழ் நிலவரம் கலவரமாகப் போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ,
தேனில் நனைத்த ரோஜாவால் இதயத்தை தடவிக் கொடுக்கும் விதமாக வந்திருக்கும் அச்சு அசல் காதல் படம் இது
மேகா … காதல் மழை !
