கேமரா ஃபாக்ஸ் பிக்சர்ஸ், காவியா சினிமாஸ், ரீச் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் , அமுதவாணன், ஜார்ஜ் விஜய், , யோகானந்த் , அலியா மானஸா நடிப்பில் ,
தானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து சதீஷ் ஆர் வி இயக்கி இருக்கும் படம் ஜூலியும் நாலு பேரும். ரசிகன் எத்தனையாவது ஆள் ? பார்க்கலாம் .
இடது காதில் நட்சத்திரக் குறியீடுகள் மூன்று உள்ள நாய் அதிர்ஷ்டம் மிக்க நாயாம் . அது இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து எல்லாமே நல்லதாகவே நடக்குமாம் .
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மாதிரி நாய்கள் உலகத்திலேயே பத்துதான் இருக்குதாம் . அப்படி ஒரு நாய் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இருந்து சென்னைக்குக் கடத்தப்படுகிறது .
வெளியூர்களில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த முத்து,(அமுதவாணன்), டேவிட் (சதீஷ் ஆர் வி ) பாண்டி (யோகானந்த் ) மூவரும்,
உண்மைச் செல்வன் என்பவனிடம் வேலை வாங்கித்தர பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள் . அவர்களுக்கு மாணிக்கம் என்ற ஆட்டோ டிரைவரின் (ஜார்ஜ் விஜய்) நட்பு கிடைக்கிறது .
சென்னைக்கு வரும் அதிர்ஷ்ட நாய், ஒரு மாபெரும் கோடீஸ்வரரின் மகளான மனிஷாவுக்கு ( அலியா மானஸா) கொடுக்கப்படுகிறது .அவள் அந்த நாய்க்கு ஜூலி என்று பெயர் வைக்கிறாள்
அந்த நாய் அங்கிருந்து தப்பி நண்பர்கள் வசம் வருகிறது . அவர்களுக்கு ஜூலியின் பண மதிப்பும் தெரியவருகிறது .
அந்த நேரம் பார்த்து ஜூலியை வேறாரு கும்பல் திருடுகிறது . மனிஷாவுக்கு நாயை விற்ற கும்பல்தான் அது . இப்படி நாயை விற்று விட்டு பின் அவர்களிடம் இருந்து திருடி வேறு ஆளுக்கு விற்பதே அவர்கள் வழக்கம் .
அவர்களிடம் இருந்தும் தொலைந்து போன ஜூலியை நண்பர்களும் தேட ,கடத்தல் கும்பலும் தேடுகிறது .
இந்த நிலையில் பெரும் பணக்காரர் ஒருவரின் (ஜாக்குவார் தங்கம் ) மகளான ஜூலி , அப்பா அம்மாவுக்கு தெரியாமல் தன் காதலனோடு ஓடிப் போகிறாள் .
காதலுக்கு நான்கு நண்பர்கள் உதவியாக இருந்திருக்க, அவர்களை போலீஸ் தேடுகிறது .
இந்நிலையில் நாய் ஜூலியை தேடும் நண்பர்களை , காதலி ஜூலிக்கு உதவியவர்கள் என்று நம்பி போலீஸ் இன்ஸ்பெகடர் பிடித்துக் கொண்டு போக, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த ஜூலியும் நாலு பேரும் .
போலீஸ் விசாரணையின் போது, நண்பர்கள் நால்வரும் தம்மை ஏமாற்றிய ‘உண்மைச் செல்வன் மற்றும் நாயக் கடத்தல் கும்பல் ஆகியோரிடம்தான் காதல் ஜோடி இருக்கிறது’ என்று நம்ப வைத்து,
அவர்களை மாட்டி விட , அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து அதற்காக இன்ஸ்பெக்டர் தன்னைத் தானே பீற்றிக் கொள்ளும் அந்த எரியா மட்டும் கல கல .
நண்பர்கள் நான்கு பேரும் அதிர்ஷ்ட நாய் ஜூலியை தேடிப் போக, ஒரு நாய்த் திருடன், ஒரு குட்டி நாயைக் காட்டி ‘இதுவா?’ என்று கேட்பதும் எடுத்த விதம் மற்றும் காட்சி வரிசை காரணமாக சிரிக்க வைக்கிறது.
மத்தபடி என்ன சொல்ல ?
தொட்டதுக்கெல்லாம் ஆ ஊ என்று ஹை ஸ்பீட் ஷாட் போட்டுக் கொள்(ல்)கிறார் இயக்குனர் . எங்கே ஹை ஸ்பீட் ஷாட் போட வேண்டும் எங்கே போடக் கூடாது என்பது ஒரு கலை இயக்குனரே .
இலங்கைத் தமிழனுக்கு இருக்கிற பிரச்னை போதாதா ? அவனை உலக நாய்க்கடத்தல் கிரிமினலாக வேறு காட்ட வேண்டுமா ?
ஒரு பொருள் அல்லது உயிர் இப்படி ப வேறு இடங்களுக்கு பயணிக்கும் கதை என்பது முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட / மட்ட/ நிலை படங்களில் மட்டுமே வந்த கதைப் போக்கு .
வாஸ்து மீன், லக்கி நாய் என்று அந்த பாணிக் கதைகளை இப்போது தமிழ் சினிமா ஏன் கட்டிக் கொண்டு அழுகிறது என்றே புரியவில்லை .






