எஸ் பி ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் பி ராஜா சேதுபதி தயாரிக்க, வெற்றி, ராஜா சேதுபதி, ஷீலா ராஜ்குமார், குமார வேல், கிரிஷா குரூப் நடிப்பில் ஏ. வி. கிருஷ்ண பரமாத்மா எழுதி இயக்கி இருக்கும் படம்.
தாய்மையால் தாங்கவே முடியாத பெரிய விஷயம் பிள்ளையை இழப்பது . அதனால்தான் வாழ்ந்து முடித்த எழுபது எண்பது வயது அம்மாக்கள் கூட, தனது ஐம்பது அறுபது வயது பிள்ளை இறந்தால் தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகின்றனர்.
வளர்ந்து வாழ்ந்து பார்த்து இறக்கும் பிள்ளைகளின் மரணம் கூட ஒரு நிலையில் ஆறுதலுக்கு உரியது . ஆனால் பிள்ளைகள் காணாமல் போகும்போது ஒரு தாய்க்கு ஏற்படும் சோகமும் இழப்பும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. காணாமல் போன பிள்ளைக்கு என்ன ஆகுமோ அது எங்கே என்னென்ன துபத்துக்கு ஆளாகுமோ என்ற கற்பனையும் யூகமும் தரும் சித்திரவதை பயங்கரக் கொடுமை.
அப்படி இருக்க மருத்துவமனையில் பிரசவத்தில் உடல் கூட்டில் இருந்து அப்போதுதான் வெளியே எடுக்கப்பட்ட பிள்ளையின் முகம் பார்ப்பதற்குள் அந்தக் குழந்தை கடத்தப்பட்டால் அந்தத் தாயின் மனநிலை எப்படி இருக்கும்?
இதோடு ரஷ்யாவிள் நடந்ததாகச் சொல்லப்படும் — நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து கடத்தினால்?
அப்படிச் செய்யும் கயவனை எப்படி தண்டிப்பது?
அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு கடைசியில் எதிர்பாராத ஒரு தீர்வைக் கொடுக்கும் படமே ஜோதி.
கர்ப்பிணி ஜோதியாக ஷீலா பொருத்தம் . விசாரணை அதிகாரிகளாக வெற்றியும் அவருக்கு உதவியாளராக குமாரவேலும் சிறப்பாக நடித்துள்ளனர் .
வெகு சில கதாபாத்திரங்களோடு நேர்த்தியாகப் போகிறது திரைக்கதை.
குழந்தைக் கடத்தலின் கொடுமையை தீவிரமாக சொல்கிறது படம்.
இசை ஒளிப்பதிவு சிறப்பு .
நாடகத்தனமான காட்சிகளும் சிலரின் செயற்கை நடிப்பும் குறைபாடு
எனினும் ஜோதி.. …ஒளிர்கிறாள் !