காவியா என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்க, அனந்தநாக், சதீஷ், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் கே சி சுந்தரம் இயக்கி இருக்கும் படம் ஜூலை காற்றில் . தென்றல் காற்றா ? புழுக்கமா? பேசலாம் .
விற்பனைப் பிரதிநிதி இளைஞன் ராஜீவ் (அனந்த நாக்)க்கும் இளம்பெண் ஸ்ரேயாவுக்கும் ( அஞ்சு குரியன்) நட்பு ஏற்பட்டு அதில் நெருக்கம் ஏற்படுகிறது .ஸ்ரேயா ராஜீவை காதலிக்க ஆரம்பிக்கிறாள் . ராஜீவும் மறுக்கவில்லை .
இரண்டு குடும்பமும்,ஜோடிப் பொருத்தம் சிறப்பு என்று முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்கிறது .

ஆனால் அதற்குப் பின் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்துகிறான் ராஜீவ் .
அவனுக்கு ரேவதி ( சம்யுக்தா மேனன்) என்ற புகைப்படக் கலைஞர் மீது காதல் வருகிறது. முன்னரே ஒரு காதலனுடன் பிரேக்கப் ஆன அவளும் ராஜீவின் காதலை ஏற்கிறாள் .
சர்வ சாதரணமாக படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவள் தனது பள்ளிக்கால ஆண் நண்பனான சக புகைப்படக் கலைஞனுடன் தொட்டு அணைத்து பழகுவதை ராஜீவ் விரும்பவில்லை .
‘ என்னதான் காதலித்தாலும் எனக்கு என தனிமை நேரங்களை ராஜீவ் தர வேண்டும் . வேலை நேரத்தில் – விசயத்தில் ராஜீவ் தலையிடக் கூடாது’என்ற ரேவதியின் விருப்பங்களை ராஜீவால் ஜீரணிக்க முடியவில்லை .

சண்டை .. பிரேக்கப் !
மன அமைதிக்காக கோவாவுக்கு போன ராஜீவ் அங்கே அனிட்டா என்ற , தமிழ் அப்பா –கோவா அம்மாவுக்கு பிறந்த, பெண்ணை சந்திக்கிறான் . இயல்பாக அவள் பழக , ஒரு நிலையில் அவளை செக்சுவலாக தொட முயல்கிறான்.
அவனை புறக்கணிக்கும் அவள் , ”என் காதலன் எனக்கான தனிமை நேரங்களை தருகிறான்.. என் தொழில் விசயங்களில் தலை இடுவது இல்லை . அவன் என்னை இயல்பாக இருக்க அனுமதிக்கிறான். காரணம் அவன் என்னை நம்புகிறான் . அவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் ” என்று சொல்கிறாள் .
” சரி .. அப்படி நம்பி அனுப்பும் பெண் ஏமாற்றினால் என்ன செய்வது? ” என்று ராஜீவ் கேட்க , “நீ சுதந்திரம் கொடுத்தும் உன்னை ஏமாற்றினால் அவள் உனக்கான பெண் அல்ல என்று உணர்ந்து தூக்கிப் போட்டுட்டு போய்டணும் ” என்கிறாள்.

தான் எப்படி எல்லாம் ரேவதியின் தனித் தன்மையில் குறுக்கிட்டு இருக்கிறோம் ‘என்பதை உணரும் ராஜீவ் மீண்டும் ரேவதியை தேடி வருகிறான் . ஆனாலும் அவனால் திருந்த முடியவில்லை .
அப்புறம் என்ன நடந்தது என்பதே ஜூலை காற்றில்.
கதையை ஆறு அத்தியாயங்களாக பிரித்து ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என்று அவரவர்களின் பார்வையில் கதையை சொல்கிறார் இயக்குனர் சுந்தரம் .
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் ஆரம்ப , இடைப் பகுதி மற்றும் முடிவுக் காட்சிகளையும் அடுத்த அத்தியாயத்தில் இன்னொருவர் கோணத்தில் சொல்லி அதே நேரம் தேங்கி விடாமல் கதையை நகர்த்தும் திரைக்கதை உத்தி மிக சிறப்பு .
இதில் படத் தொகுப்பாளர் அணு சரணின் படத் தொகுப்பின் பங்கு பாராட்டுக்குரியது.

படமாக்கல் மிக சிறப்பு .
ஸ்ரேயாவை புறக்கணித்த ராஜீவ் ரேவதியை காதலித்து பிரேக்கப் ஆகி , மீண்டும் ஸ்ரேயாவுக்கு நூல் விட முயலும்போது அவனை ஸ்ரேயா டீல் செய்யும் காட்சி பெண்மையின் கனிவான கம்பீரம் . அருமை .
கேரளா , இலங்கை பகுதிகளின் இயற்கை அழகை அள்ளித் தருகிறது டிமல் சேவியர் எட்வர்டின் கேமரா.
ஜோஷுவா ஸ்ரீதரின் பின்னணி இசை சிறப்பு . பாடல் இசை இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம் .
அனந்தநாக் இயல்பாக நடிக்கிறார் . சதீஷ் வழக்கம் போல.
அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் இருவரும் முறையே அழகு கவர்ச்சிப் பதுமைகளாக இருக்கின்றனர் . அதே நேரம் செயற்கையான நடிப்பு .

“காதலிப்பவரின் மீது நம்பிக்கை வையுங்கள் . அவர்களுக்கு தேவைப்படும் தனிமையை , சுய தன்மையை அனுமதியுங்கள் . சுதந்திரமாக இருக்க விட்டு நேசியுங்கள் . அப்படி நீங்கள் கொடுக்கும் உரிமையை உங்களுக்கு துரோகம் செய்ய பயன்படுத்தினால் அது உங்க ஆள் இல்லை . எனவே தூக்கி எறிந்து விட்டுப்போங்கள் ” என்ற விஷயம் நிஜமாகவே அபாரம்.
ஆனால் அத்தோடு நிறுத்தி இருக்கலாம் .
அதை விட்டு விட்டு ‘அப்படி உரிமை கொடுக்க முடியலையா ? அதனால நொந்து போன அவ இன்னொருத்தனோட போய்ட்டாளா ? போகட்டும் . நீ அவ ஃபிரண்டோட போ ‘
என்று சொல்லி படத்தை முடிப்பதெல்லாம்…. ரொம்ப ஓவர் .