
திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி.வி.குமார், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் வழங்க,
விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில், ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமரசாமி எழுதி இயக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’ .
கொரியப் படங்களை திருட்டுக் காப்பி அடித்து படம் எடுப்பது ஒரு வழக்கமாக இருக்கும் இந்த நிலையில்,
ஒரு கொரியப் படைத்தை முறைப்படி அனுமதி பெற்று காதலும் கடந்து போகும் படமாக தமிழில் இயக்குகிறார் நலன் குமரசாமி .
(உரிமை வாங்க மொத்தம் நாற்பது லட்சம் செலவு ஆச்சாம் இனி காப்பி அடிப்பதும் கடந்து போகும்?)
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நலன் குமரசாமி
”மேற்படி கொரியப் படத்தின் பெயரை இப்போதே சொன்னால் நமது படம் வருவதற்குள் அதைப் பார்த்து விட்டு, அப்புறம் நமது படத்தை பார்க்க வருவார்கள் . எனவே உங்களுக்கு மட்டும் பேர் சொல்றேன் .
ஆனா இப்போ எழுதாதீங்க நம்ம படம் வந்த அப்புறம் சொல்லலாம்” என்று சொல்லி விட்டு….
அதன் பிறகு அவர் படததின் பெயரையும் சொன்னதாலோ என்னவோ ,
படத்தோட பேரு மறந்து போயே போச் ! (வட போச்சே என்ற உங்கள் மானசீகக் குரல் காதில் விழுகிறது)
எனவே நாம் தமிழ் படத்துக்கே வருவோம் . காதலும் கடந்து போகும் படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன் . ஒளிப்பதிவு தினேஷ் கண்ணன் .
”சூது கவ்வும் படத்தில் பணியாற்றிய பலரும் அப்படியே தொடர்கிறார்கள் ” என்கிறார் நலன் குமரசாமி .
படத்தின் கதை என்ன ?
” ஓர் ஆண் மற்றும் ஓர் பெண் இருவருக்கும் இடையேயான நிகழ்வுகளே படத்தின் கதை . முதலில் அறிமுகம் , அப்புறம் பழக்கம் , நட்பு, பிரச்னை என்று படம் போகும் .
இருவருக்கும் இடையே காதல் வந்த நொடியே படம் முடிந்து விடும் .
அதே நேரம் படததில் காதல் , ஐ லவ் யூ என்பது போல ஒரு வார்த்தையும் வராது ” என்று கூறி… ஆர்வம் கவ்வ வைக்கிறார், இந்த சூது கவ்வும் இயக்குனர் .
அதே ஆர்வத்தோடு, ”காதலை உணர்ந்த உடன் முடியும் ஒரு படத்துக்கு, ‘காதலும் கடந்து போகும்’ என்ற பெயர் எப்படி வருகிறது?’ என்று கேட்டால், ” வேறொரு தளத்தில் அந்தப் பெயரை வைத்துள்ளோம் .
படம் பார்க்கும்போது எல்லாமே கடந்து போக வேண்டிய விசயம்தான் என்பதை நீங்களும் உணர்வீர்கள் ” என்று, நாம் கவ்விய ஆர்வத்தை, நம்மையே கொஞ்சம் கடிக்கவும் வைக்கிறார் .
“ஒரு கவுன்சிலர் மாதிரியான ஆளுக்கு அல்லக்கையாக இருப்பவன்தான் ஹீரோ . ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்தான் ஹீரோயின் .
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இந்த இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்களை சுற்றியே மிக யதார்த்தமாக கதை நிகழும் .
படத்தில் வில்லனாக வருகிறார் சமுத்திரக் கனி. கதைப்படி அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ” என்று கதை மாந்தர்களையும் விளக்குகிறார் .
”கதாநாயகி மடோனா செபாஸ்டியன் மிக சிறப்பாக நடித்து உள்ளார் . விஜய சேதுபதியே ரொம்ப சுதாரிப்பாகத்தான் நடித்தார் .
‘ கொஞ்சம் அசந்தா இந்தப் பொண்ணு தூக்கி சாப்ட்டுடும் ‘னு விஜய் சேதுபதியே சொன்னார் ” என்று கதாநாயகியை சிலாகிக்கிறார் .
”சூது கவ்வும் வெற்றிக்குப் பிறகு அடுத்த படம் இயக்க இவ்வளவு நாள் ஏன்?” என்று கேட்டால் ” இன்னொரு கதை பண்ணி வைத்தேன் . அப்புறம் அதை வைத்து விட்டு இதை இயக்க வந்தேன் .
மேற்படி கொரியப் படத்தின் கதையை எடுத்துக் கொண்டு தழுவிய திரைக்கதையை உருவாக்கி படப்பிடிப்புக்கு போனேன் . அதுதான் தாமதம் ” என்கிறார் .
(இப்போ கூட அந்த கொரியப் படத்தோட பேரு ஞாபகம் வரலீங்க . நம்புங்க !)
”சூது கவ்வும் ஹேங் ஓவர் படத்தில் இருக்குமா ?”
இந்தப் படம் சூது கவ்வும் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் . நான் உருவாக்கிய ஒரு சில காட்சிகளிலும் அதை விஜய் சேதுபதி நடித்து இருக்கும் விதத்திலும் சற்றே சூது கவ்வும் படம் தெரியலாம் .
மற்றபடி இது வேறு மாதிரியான படம் ” என்கிறார் .நலன் குமாரசாமி .
காதலும் கடந்து போகும் படத்துக்கு, வெற்றி நின்று நிலைக்கட்டும் !
Kadhalum Kadanthu Pogum Official Teaser | Vijay Sethupathi | Santhosh Narayanan | Nalan Kumarasamy
https://www.youtube.com/watch?v=dtVpOGqhqs4